
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 96. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். காதலை மையமாக வைத்து ஒரு நாள் இரவு நடக்கும் சம்பவங்களை யதார்த்தமாக காட்டியிருந்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்த நிலையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக தகவல் வெளியானது. பின்பு இயக்குநர் பிரேம் குமார் ஒரு பேட்டியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதை உறுதி செய்தார். இதையடுத்து 96 பட இரண்டாம் பாகம் குறித்து எந்த தகவலும் வராமல் இருந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
96 பட இரண்டாம் பாகத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் மீண்டும் விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டான் பிக்சர்ஸ் தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.