முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை '800' என்ற தலைப்பில் படமாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகியிருந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இதையடுத்து முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ஆஸ்கர் வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் நடிக்கிறார். மேலும் மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முத்தையா முரளிதரன், "தமிழ்நாடு என்பது, எங்க தமிழீழ வரலாற்றில் ஒரு முக்கிய அங்கம். எங்கள் பூர்வீகம்லாம் தமிழ்நாடு தான். திருச்சி - நாமக்கல் பகுதியில் இருக்கு. அங்கிருந்துதான் இலங்கைக்கு வந்தோம். நாங்கள் மலையகத் தமிழர்கள். இந்த படம் உருவாக எப்படி 5 வருஷம் ஆச்சோ... அப்படித் தான் எங்கள் வாழ்க்கையும் அவ்ளோ கஷ்டங்கள்.
6 வயசிலிருந்து நான் ஹாஸ்டலில் படிக்கிறேன். 18 வயசு வரையும் அங்கதான் படிச்சேன். நிறைய தடங்கல்களை எல்லாம் தாண்டி அங்க வாழ வேண்டிய சூழல். அதையும் ஒரு படமா எடுத்தபோது தடங்கல் வந்துச்சு. கடைசி நிமிஷத்தில் படத்தின் எடிட்டர் இலங்கைக்கு வந்து இறந்து போய்ட்டாங்க. திடீர்னு நிதி நெருக்கடி. அதையெல்லாம் கடந்து இப்படத்தை உருவாக்கியிருக்காங்க. இப்படத்தை ஒரு முக்கிய படமாக பார்த்து, இலங்கை மக்கள் படக்குழுவினருக்கு பாதுகாப்பு கொடுத்தாங்க. இவர்களையும் பாராட்ட வேண்டும். இலங்கையில் 80 நாள் ஷூட்டிங் எடுத்தாங்க. அங்க கரண்ட் கூட இல்லாத சூழல். அதையும் பொருட்படுத்தாம படம் எடுத்தாங்க. படக்குழுவினருடைய உழைப்பு தான் மாபெரும் படமா மாறியிருக்கு.
நான் ஒரு சினிமா ரசிகர். ஆயிரத்துக்கும் மேல படம் பார்த்திருப்பேன். எல்லாம் உண்மை சம்பவங்களாக இருக்க வேண்டும் என டைரக்டரிடம் சொன்னேன். கிரிக்கெட்டில் நான் விளையாடியது மட்டும் தான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் சில விஷயங்கள் செலக்ஷன், ட்ரெஸ்ஸிங் ரூம்... இப்படி பின்னாடி நடக்கிற விஷயங்கள், எனக்கு தெரியாததும் படத்தில் இருக்கு. என்னை மாதிரி பந்து வீச நிஜத்திலும் யாராலயும் இயலாது. என்னுடைய ஆக்ஷன் அந்த மாதிரி. ஆனால், அந்த ஆக்ஷனை ஒரு 80 சதவீதம் கரெக்ட்டா ஹீரோ பண்ணியிருக்கார்.
இந்த படத்தில் என்னுடைய பூர்வீகம் எப்படி? இத்தனை பிரச்சனைகளோடு எப்படி கிரிக்கெட்டை விளையாண்டேன். எங்க நாடு என் மூலம் எந்த நிலைமைக்கு வந்தது. இதுபோன்று சூழ்நிலைகள் இந்த படத்தில் இருக்கு" என்றார்.