உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். உலகில் மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் உள்ள இந்த விழா 1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற்று வருகிறது. பதினொரு நாள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தாண்டிற்கான 75-வது 'கேன்ஸ் திரைப்பட விழா 2022' இன்று(17.5.2022) தொடங்கி வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழா நடுவர்களில் ஒருவராக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கலந்து கொள்கிறார்.
மேலும் இந்த விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் திரைபிரபலங்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், நவாஸூதீன் சித்திக், கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, நடிகர் மாதவன், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்விழாவில் மாதவன் நடித்து இயக்கியுள்ள 'ராக்கெட்ரி - நம்பி விளைவு', பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ’இரவின் நிழல்’, ஏ.ஆர் ரஹ்மான் இயக்கியுள்ள லீ மாஸ்க் (குறும்படம்) ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன. அத்துடன் இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த படைப்பான வேட்டுவம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இவ்விழாவில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.