




தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் கடந்த ஜூலை 30 தேதி (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட வீரர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் (03.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344ஆக உயர்ந்துள்ளது. மேலும் முண்டக்கை, சூரல்மலை மற்றும் மேப்பாடி ஆகிய இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் முண்டக்கை பகுதியில் அமைக்கப்பட்ட இரும்பு பாலம் வழியாக பல்வேறு உபகரணங்கள் கொண்டு சென்று மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நிலச்சரிவு ஏற்பட்ட பத்திற்குச் சென்று பார்வையிட்டார். கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் அவர், ராணுவ உடையில் மேப்பாடியில் உள்ள முகாமிற்குச் சென்றார். அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய அவர், முண்டக்கை பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் மீட்பு பணிகள் குறித்து ராணுவ வீரர்கள் எடுத்துரைத்தனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த மோகன்லால், மீட்புப் பணிகளுக்காக ரூ.3 கோடி நிதியுதவி அளிப்பதாகவும், சேதமடைந்த பள்ளிக்கூடங்களைக் கட்டித்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.