காவல்துறை சந்தித்த சுவாரஸ்யமான வழக்குகள் குறித்து நம்மோடு தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி பகிர்ந்து கொள்கிறார்.
கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர் குறித்த வழக்கு இது. தன்னுடைய 19வது வயதிலிருந்தே சிஸ்டராக வேண்டும் என்று சொல்லி வந்தார். அவருடைய பெற்றோரும் அதை ஏற்றுக் கொண்டனர். கான்வென்டில் அவர் சேர்க்கப்பட்டார். கோட்டயத்தில் கன்னியாஸ்திரிகள் தங்கியிருந்த விடுதியில் அவரும் தங்கினார். ஒருநாள் இரவு விடுதியில் தன்னை அதிகாலை சீக்கிரமாக எழுப்பி விடுமாறு அந்தப் பெண் கூறினார். காலையில் எழுப்ப பார்க்கும் போது அந்த கன்னியாஸ்திரியைக் காணவில்லை. போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
எங்கு தேடினாலும் அவர் கிடைக்கவில்லை. விடுதியில் உள்ள கிணற்றில் தேடியபோது அதில் அவர் சடலமாகக் கிடந்தார். இது சந்தேகத்துக்குரிய மரணம் என்று பதிவு செய்யப்பட்டது. தற்கொலை மரணம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று மக்கள் பேச ஆரம்பித்தனர். மனித உரிமை ஆர்வலர்களும் நீதிக்கான முன்னெடுப்பை செய்தனர். மீண்டும் சிபிஐ விசாரித்தபோதும் தற்கொலை என்றே முடிவு செய்யப்பட்டது. அதற்கு பிறகும் மீண்டும் எதிர்ப்பு எழுந்தது. போஸ்ட்மார்ட்டத்தில் அந்தப் பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பது தெரிந்தது. ஆனால் அது கிணற்றில் விழும்போது இயல்பாக ஏற்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
பல ஆண்டுகள் கழித்து வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது. நந்தகுமார் என்கிற டிஎஸ்பி விசாரித்தபோது இது கொலை வழக்கு என்பது உறுதி செய்யப்பட்டது. இரண்டு ஃபாதர்களும், ஒரு சிஸ்டரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரிய வக்கீல்களை நியமித்தனர். நந்தகுமார் சொல்வது தவறு என்ற நிரூபிக்க முயன்றனர். அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்று முதலில் சாட்சியம் அளித்தவர்கள் கூட அதன்பிறகு பிறழ் சாட்சிகளாக மாறினர். இந்த மர்மமான மரணத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டது அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஏன் கொலை செய்தார்கள்? இந்த கொலையை பார்த்தவர் சாட்சி சொல்ல காரணம் என்னவென்பதை அடுத்த பாகத்தில் காணலாம்...
- தொடரும்