இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி திருடிய ஈரான் நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்கள் குறித்த வழக்கு குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
ஈரானிய கொள்ளையர்கள் என்பவர்கள் ஈரான் நாட்டிலிருந்து அகதிகளாக நம் நாட்டிற்கு வந்தவர்கள் தான். பார்ப்பதற்கு அவர்கள் ராணுவத்தினர் போல் இருப்பார்கள். அவர்களில் சிலர் சரியான வேலை கிடைக்காமல் திருட ஆரம்பித்தனர். இதை அவர்கள் இந்தியா முழுவதும் செய்தனர். அவர்களுக்கு இந்திய மொழிகள் அனைத்தும் தெரியும். அவர்கள் தமிழ்நாட்டுக்கும் வந்தனர். பொதுவாகவே அவர்கள் போலீஸ் அதிகாரிகள் போல் உடை அணிந்திருப்பார்கள். போலீஸ் போல் நடித்து வயதானவர்களிடம் நகையைப் பறிப்பார்கள். இதுபோன்று ஒருமுறை செய்யும்போது அவர்கள் மாட்டிக்கொண்டனர்.
அதன் பிறகு அவர்கள் திருடும் ஸ்டைலையே மாற்றிக்கொண்டனர். ஒருமுறை இரண்டு மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறை அலர்ட்டாகி அவர்களைப் பின்தொடர்ந்து சென்றபோது அவர்களுடைய வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன. கொள்ளை சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் பல தடயங்களை விட்டுச் சென்றனர். தடயங்கள் இருந்தாலும் ஆட்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தொப்பி என்பது அவர்களுடைய பொதுவான ஒரு அடையாளமாக இருந்தது. செக்போஸ்ட் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
ஒரு செக்போஸ்டில் அவர்களுடைய வண்டி பிடிபட்டது. அந்த வண்டியில் கொள்ளையடிக்கப்பட்ட 10 செயின்களும் இருந்தன. அவர்கள் வந்த கார் கூட மகாராஷ்டிராவில் இருந்து திருடப்பட்டது என்பது அதன் பிறகு தான் தெரிந்தது. பின்பு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. குற்றவாளிகளும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தங்களை அப்டேட் செய்துகொண்டே வருகின்றனர்.