காவல்துறை சந்தித்த பரபரப்பான வழக்குகள்; அதில் சுவாரசியமான சம்பவங்கள் போன்றவற்றை மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
பிரபல கார் திருடன் குறித்து 80களில் நடந்த வழக்கு இது. இலங்கைத் தமிழர் பிரச்சனை அப்போது பரபரப்பாக இருந்தது. கடத்தல் சம்பவங்கள் நிறைய நடைபெற்றன. காவல் நிலையத்துக்கு முன்பு இரண்டு பேர் இலங்கைத் தமிழ் பேசியதால் அவர்களை அழைத்து போலீசார் விசாரித்தனர். இருவரில் ஒருவருடைய மனைவியின் அண்ணன் தான் தியாகராய நகரில் தங்களுக்கு அறை எடுத்து தங்க வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். பைக் திருடுவது, செயின் பறிப்பது போன்ற செயல்களில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தங்களைத் தங்க வைத்தவர் கார் திருடுபவர் என்றும், இப்போது அவர் சென்னையில் இல்லை என்றும் மதுரை சென்றிருக்கிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். காலையில் அவர் வீடு திரும்பியபோது காவல்துறையினர் இருப்பதை அறிந்து அங்கிருந்து தப்பினார். துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று போலீசாரையே மிரட்டி தப்பினார். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. மூன்று காவலர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் தனியாகத் தேடும் பணியில் இறங்கினர். இதில் ஆர்டிஓ அலுவலக புரோக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டார். போலியாக ஆவணங்கள் தயாரிப்பதில் அவர் வல்லவர்.
மெக்கானிக் ஷெட் வைத்திருக்கும் ஒருவருடைய கடையில் தான் கார்களைக் கொண்டுபோய் மாற்றுவதாக அந்த புரோக்கர் தெரிவித்தார். அவரைத் தேடி போலீசார் விரைந்தனர். போலீசார் பயணித்த பேருந்தில் தேடப்பட்டவரும் பயணித்ததால் போலீசாரைக் கண்டவுடன் தப்பித்தார். ஒருவழியாக அவரையும் கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். அதிகாரிகள் இல்லாமல் சென்ற காவலர் குழு இவை அனைத்தையும் சாதித்தது. 25 கார்கள் பிடிபட்டன. குற்றவாளிகள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டனர். இதேபோன்ற பிரச்சனை மீண்டும் ஒருமுறை வந்தது.
இந்த முறை கார் திருடனுக்கு அவனுடைய உறவினர்களெல்லாம் சேர்ந்து ஒரு விருந்து வைத்து அழைத்திருக்கிறார்கள். அந்த கோவில் கிடா வெட்டுக்கு வருகிறார் என்பதை தகவலாக அறிந்த போலீசார் அங்கு அவன் வருவதற்கு முன்பே காத்திருந்தனர். போலீசார் வந்திருப்பதை அறிந்ததும் திருடனுடைய குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்து ஓடி விட்டார்கள். ஆனால் திருடன் மட்டும் சிக்கிக் கொண்டான். போலீசார் அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.