இந்தியாவின் வணிக சந்தையை ஆண்ட நம்மில் ஒருவர்... ஆம்... இவர் நம்மில் ஒருவர்தான். சம்பாதித்த பணத்தில் 60 சதவிகிதத்தை நமக்கான சமூகப்பணிகளுக்கு செலவிட்டு இதுவரை பணக்காரர் வரிசையில் இடம்பெறாத ஒருவர்... பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய வணிக சந்தையை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு இந்தியர்களை மறைமுகமாக ஆண்டுகொண்டிருக்கின்றன. அதன் மூலம் அவர்கள் செய்கிற வளச் சுரண்டலும், தங்கள் தயாரிப்பு பொருட்களை நுகர்வோர்கள் மீது பலவந்தமாகத் திணிக்கும் போக்கும் சொல்லி மாளாது. உலகமயமாக்கலுக்கு பின் இது வளரும் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. அத்தகைய நிறுவனங்களின் ஆக்டொபஸ் கரங்களில் சிக்காமல் இன்று வரை இந்தியாவின் வணிக சந்தையை கணிசமான அளவில் தன்னுடைய கரங்களில் வைத்துள்ளவர் ரத்தன் டாடா. உலக அரங்கில் இந்தியாவின் தொழில் முகமாகத்தான் உலகம் இவரைப் பார்க்கிறது.
மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா. பிறப்பிலிருந்து தற்போது வரை தாய், தந்தையர் அன்பை தவிர அளவு கடந்த செல்வம், பெயர், புகழ் என அனைத்தும் அவருக்கு கிடைத்தது. இளம் வயதாக இருக்கும் போதே பெற்றோர் விவாகரத்து வாங்கிவிட்டதால் பாட்டியின் அரவணைப்பில் வளர்க்கப்படுகிறார். முறையாக பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெறுகிறார். இன்றளவும் பல இந்தியர்களின் கனவு நிறுவனமாக இருக்கும் IBM நிறுவனத்தில் அன்றே இவருக்கு வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைக்கும் போது, தன்னிடம் 'ரெஸ்யூம்' என்ற ஒன்றே இல்லை என ஒரு நாள் மேடையில் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வாழ்வில் அனைத்தையும் கண்டுவிட்டதால் கனவுகளோ, லட்சியங்களோ என்று அவருக்கு அந்நாளில் ஏதும் பெரிய அளவில் இருந்திடவில்லை. தன்னை வளர்த்து ஆளாக்கிய பாட்டியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்தியா திரும்புகிறார். 'உங்கள் வாழ்வின் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது எது?' என்ற கேள்விக்கு "நான் இந்தியா திரும்பியதுதான்" என்று குறிப்பிட்டார் ரத்தன் டாடா. அவரது வாழ்வின் இரண்டாம் கட்டம் இங்கிருந்து தொடங்குகிறது. தன்னுடைய குடும்ப நிறுவனங்களுள் ஒன்றாக இருந்த NELCO எனும் ரேடியோ உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பொறுப்பு இயக்குநராக பதவி ஏற்கிறார். அந்நிறுவனம் விற்பனைச் சரிவால் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இழுத்து மூடும் நிலையில் இருந்தது. 'காலம் மாறுகிறது... இன்னும் இந்த பழைய ரேடியோக்களை உருட்டிக்கொண்டிருந்தால் நிறுவனத்தை கரை சேர்க்க முடியாது' எனும் முடிவுக்கு வருகிறார். செயற்கைக்கோள் தொடர்பு உட்பட பல புதிய தொழில்நுட்பத்திற்கு மாறுகிறார். சரிவை சந்தித்த நிறுவனத்தை அடுத்த சில ஆண்டுகளில் தூக்கி நிறுத்துகிறார். பின் சரிவை சந்திக்கும் அவர் குடும்ப நிறுவனங்கள் அனைத்திற்கும் நிகழ்காலம் கற்றுணர்ந்த தன் மூளையால் அடுத்தடுத்து புத்துயுர் கொடுக்கிறார். இறுதியில் 1991ம் ஆண்டு ஒட்டு மொத்த டாடா குழுமத்திற்குமான தலைவர் பொறுப்பை ஏற்கிறார். அவரை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் பலர் இருந்ததால் இந்த முடிவு விமர்சிக்கப்பட்டது. போதிய அனுபவம் இல்லாத இவருக்கு என்ன தெரியும் என்றும் கேள்வி கேட்டனர். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்ட ரத்தன் டாடா பின் அனைத்திற்கும் தன்னுடைய செயலால் பதில் அளித்தார். 1868ல் தொடங்கப்பட்ட டாடா குழுமத்தை மிகப்பெரிய சாம்ராஜ்யமாக்கி காட்டினார்.
அடிப்படையிலேயே மிகவும் தேச பக்தி கொண்டவர் ரத்தன் டாடா. 'நான் பறக்க முடியாத நாளே என்னுடைய வாழ்வின் மோசமான நாள்' எனக் கூக்குரலிடும் இவரது தன்னம்பிக்கை அளிக்கும் விதமான பேச்சுக்கள் கனவினை நோக்கி நடைபோடும் இளைய சமுதாயத்தினருக்கு எனர்ஜி டானிக். தொழில்முனைவு கனவுகளோடு இருக்கும் அத்தனை பேரின் உதடுகளும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு பெயராக தன்னை ரத்தன் டாடா நிலை நிறுத்தியதற்கான காரணம் அவர் மீதும், பின்னாளில் அவர் கண்ட கனவுகளின் மீதும் கொண்ட நம்பிக்கைதான். ஒரு லட்சத்தில் ஒரு கார்... ஒரு குடும்பத்திற்கு ஒரு கார் எனும் அவரது முயற்சியை அவர் உடன் இருந்தவர்களே எள்ளி நகையாடியுள்ளனர். "இந்தியாவில் பல்வேறு தளங்களில் வேலை பார்த்துள்ளேன். அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான காலம் என்றால் ஆட்டோ மொபைல் துறையில் வேலை பார்த்த நாட்கள்தான் என்று கூறுவேன். எல்லோரும் எதை செய்ய முடியாது என்று கூறுகிறார்களோ அதை செய்வதில் எனக்கு அலாதிப்பிரியம். அதன்படி இந்தியத் தயாரிப்பில் கார் உற்பத்தி செய்யலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் ஆட்டோமொபைல் துறையில் இருந்த என் நண்பர்கள் இது சாத்தியமில்லை என்றும் தொழில் நுட்பரீதியாக நாம் பிறருடன் இணைந்து செயல்பட வேண்டிவரும் என்றனர். பின் நாங்கள் முழு இந்திய தயாரிப்பிலேயே 'இண்டிகா' காரை உருவாக்கினோம். அது சந்தைக்கு வரும்போது என்னுடைய நண்பர்கள் என்னிடம் இருந்து விலகியே இருந்தனர். அதை அவர்கள் தோல்வியில் இருந்து விலகி இருப்பதாக நினைத்து கொண்டார்கள். ஆனால் நடந்ததோ வேறு. விற்பனை தொடங்கியவுடன் சந்தை விலையில் 20 சதவிகிதம் லாபம் கிடைத்தது. அதன் மூலம் நம்மாலும் இதை செய்ய முடியும் என்று நிரூபித்துக்காட்டினோம். மேலும் இது புதிய தொழில்நுட்பங்களை இங்கு சோதனை செய்து பார்க்கவும் வழி திறந்தது. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இந்திய பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த இது உதவியது"...
'சிறிய மாற்றம் என்பது எனக்கு பிடிக்காத ஒன்று' - இந்த ஒற்றை வரிதான் அவரது தொழில் ரகசியம். பணக்காரர் பட்டியலில் இடம் பெறாத இந்த பணக்காரரின் வாழ்க்கை பயணத்தை ஒரு முறை வாசித்தால் வாழ்வில் பயணப்பாதை தெரியாது திக்குமுக்காடி நிற்கும் அனைவருக்கும் ஒரு பாதை புலப்படும்....