Skip to main content

ஒரு நைட்டு... ஒருத்தருக்கு வந்த கனவு... இன்னைக்கு உலகமே மாறிப்போச்சு! லேரி பேஜ் | வென்றோர் சொல் #14

Published on 26/08/2020 | Edited on 21/01/2021

 

Larry page

 

இரவு உறங்கும் போது அனைவரும் கனவு காண்பதென்பது மனித இயல்புகளுள் ஒன்று. அந்தக் கனவால் அதிகபட்சமாக என்ன செய்ய முடியும்? நல்ல கனவாக இருந்தால் நாள் முழுக்க நம்மை உற்சாகமாக வைத்திருக்க முடியும். விரும்பத்தகாத கொடுங்கனவாக இருந்தால் அன்றைய பொழுது முழுவதும் நம்மை வருத்தத்தில் வைத்திருக்க முடியும். ஆனால் ஒரு மனிதன் கண்ட கனவு இவ்வுலகத்தின் இயங்கியலையே மாற்றியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா???. அது 'கூகுள் நிறுவனர் லேரி பேஜ்' கண்ட கனவுதான். உலக சாதனையாளர்களிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்னவென்று கேட்டால் எனக்குள் இருந்த தேடல் என்பார்கள். உலக மக்களுக்கு இந்தத் தேடலையே இன்று எளிமையாக்கிக் கொடுத்தவர் லேரி பேஜ். இதுவரை உலக வரலாறானது கி.மு, கி.பி என எழுதப்பட்டு வருகிறது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட இருக்கின்ற மாற்றத்தின் விளைவையடுத்து, உலக வரலாறு இனி கூ.மு, கூ.பி (கூகுளுக்குமுன், கூகுளுக்குபின்) என எழுதப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

அமெரிக்காவில் ஓரளவிற்கு பொருளாதார வளமிக்க குடும்பத்தில் பிறந்தவர் லேரி பேஜ். தாய், தந்தை இருவருமே கல்லூரிகளில் கணினித்துறையில் வேலை பார்த்ததால் கணினிகள் குறித்த அறிவும், அவற்றைக் கையாளும் திறமையும் மிக இளம் வயதிலேயே அவருக்கு வாய்க்கப்பெற்றது. பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பை முடித்து கணினி அறிவியலில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபடுகிறார். இணையம் மற்றும் அதன் லிங்க் சார்ந்த விஷயங்களில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார். அந்த ஆராய்ச்சியில் அவருடன் பணியாற்றிய 'செர்ஜி பின்னுடன்' இணைந்துதான் பின்னாட்களில் கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. 

 

"ஒரு நாள் இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. அது சற்று வினோதமானது. அதில் மொத்த இணையதளத் தரவுகளையும் என் வீட்டில் இருந்த சிறிய கணினியில் பதிவிறக்கம் செய்வதுபோல் இருந்தது. உடனே எழுந்து அது குறித்து யோசித்தேன். அதைச் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றியது. இணைய பக்கங்களின் லிங்க்-குகளை சேகரிக்க ஆரம்பித்தேன். என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சி இது குறித்தானதுதான். ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி தேடும் போது அது ஆயிரம் லிங்க்-குகளில் உள்ளது. ஆனால் மக்களால் வெறும் 10 லிங்க்-குகளை மட்டும்தான் பார்க்க முடியும். வெறுமனே லிங்க்-குகளை சேகரிப்பதை விட அதைத் தரவரிசைப்படுத்தினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. அந்த சமயத்தில் நிறைய தேடுபொறிகள் இருந்தன. அவைகளை விட சிறந்தவொன்றை உருவாக்கலாம் என்று நானும், என் நண்பனும் முடிவெடுத்தோம். அதைத்தான் இன்று உலகம் 'கூகுள்' என்ற பெயரில் பயன்படுத்துகிறது....." 

 

தற்போதைய காலகட்டத்தில் கூகுள் ஒரு நாள் முடங்குகிறது என்றால் உலகின் இயல்பு வாழ்க்கை இரண்டு நாள் முடங்கிவிடும். இது மிகைப்படுத்தப்பட்ட வரி அல்ல. காலை எழுவதிலிருந்து இரவு உறங்குவது வரை இணையம் சார்ந்த நம் அனைத்துச் செயல்பாடுகளிலும் கூகுள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டிருக்கும். ஜிமெயில், டிரைவ், மீட், ட்ரான்ஸ்லேட்டர், சாட், டுயோ, ஜிபே, யூ-டுயுப் உட்பட பலவற்றை இவ்வரிசையில் அடுக்கிக்கொண்டே போகலாம். உங்கள் தாய்மொழி மட்டும் தெரிந்தாலே இன்று உலகில் 109 மொழிகள் பேசக்கூடிய மக்களுடன் நீங்கள் உரையாடலாம் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய வரலாற்று மாற்றம்? இப்போது கூறுங்கள்... லேரி பேஜ் கண்ட கனவு உலகின் இயங்கியலை எவ்வளவு மாற்றியிருக்கிறதென்று!!!

 

லேரி பேஜ் தன்னுடைய வெற்றியின் ரகசியம் குறித்து பேசும் போது, "எனக்கு 12 வயதாக இருக்கும் போது நிக்கோலா டெஸ்லாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தைப் படித்தேன். படித்து முடித்தவுடன் இவ்வளவு பெரிய ஆராய்ச்சியாளன் எப்படி வாழ்க்கையில் தோற்றுப்போனான் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அன்று அவருக்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். அவற்றுள் முக்கியமானது தன்னுடைய கண்டுபிடிப்புகளை மக்களிடம் சரியாகக் கொண்டு சேர்க்காதது என்பதுதான். இது கற்றுக்கொடுத்த பாடம் எனக்கு இன்று வரை உதவுகிறது....." என்கிறார்.

 

http://onelink.to/nknapp

 

ஒரு தகவல் வேண்டுமென்றால் நூலகம் நூலகமாக, ஆவணக்காப்பகம் காப்பகமாக, அறிஞர்கள் வீட்டு வாசல் வாசலாக அலைந்து பெற்ற காலம் மாறி, விரல் சொடுக்கிடும் நேரத்தில் எந்தவொரு தகவலையும் உலகின் எந்தவொரு மூலையிலும் இருந்து பெற்றுவிட முடியுமென்றால் இந்நூற்றாண்டு நமக்கு எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்!!! கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்.....!

 

”இது எங்க விளையாட்டு, நீ ஏன் விளையாடுற?” - கேட்டவர்கள் முகத்தில் விழுந்த குத்து! மேரி கோம் | வென்றோர் சொல் #18

 

 

சார்ந்த செய்திகள்