Skip to main content

"மூன்று வேளைச் சாப்பாடு என்பதே ஊர்ஜிதம் இல்லாத ரெயில்பெட்டிக் குடும்பத்தில்பிறந்த .." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #25

Published on 14/03/2020 | Edited on 24/03/2020


நடுநிசிக்கு சற்று முந்தைய நேரம் அவள் கண்களில் சொல்லொண்ணா ஒளி தென்பட்டது. இதுவரையில் யாருமே கண்டிராத ஏன் அவளே உணர்ந்திராத அந்த வெளிச்சம் வீடு மொத்தமும் உறங்கிக்கொண்டு இருக்க அவள் மட்டுமல்ல அவளுக்குள்ளும் அவளும் விழித்துக்கொண்டு இருந்தாள். மழை மெல்ல தன் தூரல்களை அந்த இரவு நேர நிசப்தத்திற்கு விருந்தாக்கிக் கொண்டு இருக்க சாலையோர பாதையில் இருந்து தத்தி தடுமாறி ஒரு கருப்பு பூனைக்குட்டி உள்ளே நுழைந்தது. அடுப்பங்கரையில் சென்று சிறு கிண்ணத்தில் பாலை கொண்டு வந்து கேட்டினை திறக்காமலே இடுக்கில் வைத்தாள். நன்றிப்பெருக்குடன் பாலைப் பருகியபடியே கேட்டிற்கு வெளியே தெரிந்த அந்த வெண் பாதங்களை மியாவ் என்று பாசத்தோடு நக்கிக்கொடுத்தது. அவளின் கவனம் முழுக்க அந்தக்குட்டியின் மேல் படிந்தது.

 

gh



அதரங்களில் அடங்காத அடக்கமுடியாத மென்நகையோடு கீழே அமர்ந்து பூனையின் தலையைத் தடவியபடியே கையில் எடுத்தாள்.பூனையின் கண்களில் சிநேகம் சட்டென்று சுவற்றின் மேல் அதை வீசினாள், அடிப்பட்ட வலியோடு நிலைகுலைந்து மெல்ல எழுந்து மீண்டும் அவளை நோக்கி வந்தது அவளுக்குள்ளே இருக்கும் அவளுக்கு ஆச்சிரியமாய் இருந்தது அது போய்விடும் என்று நினைத்தாள். இம்முறை நிதானமாய் கைகளில் எடுத்து தடவி பின் குறைந்த தூரம் வீசினாள் இப்படியே அவள் வீசுவதும் பூனை திரும்பிவருவதுமாய் இருக்க அந்த விளையாட்டு அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் பூனையின் நிலையோ ஆங்காங்கே சிராய்ப்போடு ஏன் அவளை நோக்கிச் செல்கிறோம் என்றே அறியாமல் பூனையின் மூளைக்கு ஏதோ தவறு இழைத்துவிட்டோமோ என்று தயக்கம் தோன்ற ஒரு நொடி நிதானித்தது மீண்டும் அவளின் வா....என்ற சைகையிலும் பாதி நிரப்பிய பால் குவளையிலும் ஈர்க்கப்பட்டு ஆவலாய் ஓடி வந்தது. ருசி கண்ட பூனை இம்முறை ருசி அவளுடையதாயிற்று பூனையின் ரத்தம் முழுக்க அந்த பால் கிண்ணத்தில்! அவளின் அதரங்கள் இப்போது நனைந்திருந்தது மெல்லிய சிரிப்புக்கோடோடு அந்தப் பூனையின் ரத்தக்கோடும் ஏதோ திரில்லர் அல்லது சைக்கோ கதையின் தொடக்கத்தைப் போன்று இந்த வாரத் தொடர் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் அதன் மையக்கருவை ஆராயும் போது சில அதிர்வலைகள் நம்மைச் சுற்றி சிலந்தி வலையாய் பின்னியிருக்கும். 

அவள் தினசரி மூன்று வேளைச் சாப்பாடு என்பதே ஊர்ஜிதம் இல்லாத ரெயில்பெட்டிக் குடும்பத்தில் கடைக்கோடியாய் ஏழாவதாய் பிறந்த ஜீவன். வட்டில் கிடக்கும் சோற்றுக்கு எட்டிக்காயாய் அவளைக் காணத் தோன்றும் போலும், ஆறு பிள்ளைகளுக்கும் அளந்தெடுத்து அரைடம்பளர் அமுது படைக்கும் அவளன்னை ஏழாவதாய் பிறந்த அவளை ஏழரை என்றே விளிக்கத் தோன்றும். என்ன சொல்றீங்க நீங்க அதெப்படி ஒரு தாயால் தான் பிள்ளைகளில் ஒன்றை வெறுக்க முடியும் என்று நீங்கள் கேட்பது காதுகளில் விழுகிறது. ஆனால் முடியும் அதற்கு மேற்குறிப்பிட்ட கதையின் நாயகியே சான்று. ஒரு பெண் தாய்மை அடையும் போதுதான் முழுமையடைகிறாள் என்ற கூற்றுக்களை எத்தனையோ முறை நம் காதுகளில் கேட்டுப் புளித்திருக்கும். ஆனால் ஒரு பெண் தன் தாய்மையை உணரும்போதும் அது தொடர்பான உபாதைகளிலும், பேற்றின் போதும் முதலில் அப்பாடா இறக்கி வைத்துவிட்டேன் என் பாரத்தை என்று பெருமூச்சு விடுகிறாள். அதேபோல் ஒரு பிள்ளையை சுமக்கும் போது ஏற்படும் மனநிலையும் அந்த பிள்ளையின் வளர்ப்பில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது அறிவியல் ரீதியான உண்மை.
 

 

sd



அப்படித்தான் இந்த ஏழாவது ஜீவன் அவள் அன்னையின் வயிற்றில் உருவெடுத்த போதே, ஒரு சாளரத்தின் நுனியில் உயிர்போகத் துடிக்கும் பறவையின் நிலைப்பாட்டை அவள் கொண்டிருக்கிறாள் அப்படித்தான் அந்த ஏழாவது குழந்தையை ஈன்றபோது அன்னைக்கு மிகப்பெரிய ஒரு வெறுப்பு அது குழந்தையின் தவறு என்பதைப் புரிந்து அவளின் சில கிலோகிராம் எடையுள்ள மூளைக்குப் புரியவில்லை. அன்றிலிருந்து நம் ஏழரைப் பிள்ளைக்கு அடியும் உதையும் தான் மாற்றாந்தாய் வேதனையை மனதளவிலும் உடலளவிலும் அவள் சுமந்தாள். வெகு அபூர்வமாய் கிடைத்த தோழமையிடம் தன் வேதனைகளை சொல்லித் தீர்த்த போது அதை தொடர்ந்து கிடைத்த அத்தனை பாவப் பார்வைகளும் வேதனைகளின் போர்வையாக அவளைத் தாங்கின. பாவப்பட்டு உணவும், உடையும், அன்பும் கூடவே காதலும் கிடைத்தது.  யாருக்காகவும் காலமும் நேரமும் காத்திருக்கப் போவதில்லை என்பதைப் போல குழந்தை சிறுமியாகி சிறுமி யுவதியாகி யுவதி மணமகளாய் மாறி மனைவியாய் அவள் கொண்டாடப்பட்டாள். இது நாள் வரையில் இருந்த உதாசீனம் அத்தனையும் மாறி ரத்தினக்கம்பள தேவதையாகிப் போனாள். ஆனால், பாவம் சொரிந்த கண்களும், வார்த்தைகளும் தற்போதைய பாராட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவளின் சுய பச்சாதாபம் தலை தூக்கத் தொடங்கியது. 

அதில் அவள் இன்பம் காணத் தொடங்கினாள். பாவப்பட்ட இவளுக்கு வந்த வாழ்வைப் பார்த்தாயா என்ற பொறாமைகள் கூட இனித்தன. தன் சுயத்தை அவள் இழப்பதை அறியாமலேயே கணவன் சிறு சுணக்கம் கூட இல்லாத தாம்பத்தியத்தை அளித்தான். முதல் குழந்தை கருவுற்று இருந்த போது அவளுக்கு எல்லையில்லா சந்தோஷம். ஆனால் அது காலத்தால் கலைந்த போது அவளின் துரதிருஷ்டம் துரத்துவதாகவும், அந்த பாவத்தின் சாயல் தன்னைத் தொடருவதைப் போலவும் மீண்டும் தன் மேல் விழுந்த பச்சாதாபத்தில் அவள் அதை ரசிக்க ஆரம்பித்தாள். மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பம் தரித்த போது அவளே அதை அழித்தாள் பச்சாதபக் கட்டிலில் தவழும் குழந்தையாய் மாறினாள். ஆனால் மூன்றாவது குழந்தையின் கர்ப்பம் தரிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் கண்ணின் மணியாய் கண்காணிக்கப்பட்டதால் குழந்தை பிறந்து இரு மாதங்கள் ஆகிவிடவே, இன்று கடைசி முயற்சி தன் பிஞ்சுப் பிள்ளையைப் பறிக்க முடியாமல் போனதால் அவளின் அத்தனை கோபமும் பூனையின் மேல் போய் விழுந்தது. 


கடவுளே என்று சத்தம் எழுப்பாமலே அவளின் துணைவன் திகைத்தான் மனைவியின் இந்த செய்கைக்கு உண்டான காரணத்தை அவன் அறிந்திருக்கவில்லை, மறுநாள் ஏதேதோ காரணம் சொல்லி மருத்துமனைக்கு கூட்டிச் சென்று சோதனைக்கு உட்படுத்திப் பார்க்கையில் தெரிந்து போனது அவளின் மனச்சிதைவு. அந்த மனசிதைவு தீர்ந்து அவளை மீண்டும் தன் சிம்மாசன மகாராணியாக்க காத்திருக்கிறான் அந்த அன்பு கணவன்.

"ஒவ்வொரு கம்பிக்குப் பின்னாலும் ஒவ்வொரு மனிதர்கள்.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #26