Skip to main content

துபாயில் வந்த நெஞ்சு வலி; சென்னையில் எடுத்த இன்சூரன்ஸ் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 23

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 rajkumar-solla-marantha-kathai-23

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நோயை மறைத்து ஏமாற்றிய ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.

பணியில் சேர்ந்த பொழுது நான் பாண்டிச்சேரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், ஒரு பெண்மணியுடன் வந்திருந்தார். வந்ததும்  கடினமாக எல்லாரையும் பேசிக் கொண்டிருந்தார். என்னிடமும் அப்படித்தான் பேசினார். சரி என்று கூப்பிட்டு அறைக்குள்ளே அழைத்து பேசியபோது, நான் முதலில் அவரை சந்தேகப்படும்படி ஒரு காரியம் செய்தார். திடீரென்று சட்டை பட்டனை அவிழ்த்து அங்கே சிகிச்சையினால் இருக்கும் வடுவை காண்பித்து, உங்களிடம் பாலிசி வாங்கியதன் விளைவைப் பாருங்கள் என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு, இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு பாலிசி பணத்தை எங்களிடம் வாங்குவது கடினமாக உள்ளதாக புகாரளித்தார்.

எனக்கு பயமாக இருந்தாலும், உண்மையா பொய்யா என்று தெரிவதற்குள் முடிவுக்கு வரக்கூடாது என்று அவருக்கு தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்தி அவரை பற்றி விசாரித்தேன். 80களில் நெய்வேலியிலிருந்து துபாய்க்கு ஓட்டுநராக சென்று வேலை பார்த்தேன். பின்பு பிடிக்கவில்லை என்று வந்துவிட்டு, இங்கே எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு வண்டி ஓட்டிக் கொண்டு  இருந்தேன். அப்போது முதல் முறை நெஞ்சு வலி வந்தது. ரயில்வே ஆஸ்பத்திரி சென்று பார்த்தேன் என்று அவர் கூற ஆரம்பித்தார். நாங்கள் அவர் சொல்ல சொல்ல ஸ்டேட்மேன்ட் எழுதி குறித்துக் கொண்டே வந்தோம். பின் அவரிடம் படித்துக் காட்டி உறுதி செய்து கொண்டோம். அவரை நான்கு நாட்கள் கழித்து வரச் சொல்லிவிட்டு, அவர் இப்போது எடுத்த பாலிசி பற்றி பார்த்தோம்.

பார்த்தால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒரு மாதம் முன்னரே பாலிசி வாங்கியுள்ளார். நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஆலோசித்தோம். அந்த நபருக்கு சிகிச்சை அளித்த டாக்டரை அணுகினோம். அங்கே அவர் எங்களுக்கு தேவையான எல்லா தகவல்களையும் கூப்பிட்டு ஒத்துழைத்து அளித்தார். அதன் பேரில் அந்த நபருக்கு துபாயில் இருக்கும்போதே  ஒருமுறை மாரடைப்பு வந்திருக்கிறது. அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க வேண்டாமென்று மறுத்து இங்கே இந்தியா வந்திருக்கிறார். இங்கே வந்த பிறகு உடனடியாக பாலிசி எடுத்துவிட்டார். ஆபரேஷனுக்கு பணம் கட்டி பார்த்து முடித்தவுடன், பாலிசியும் கிளைம் செய்து இருக்கிறார்.

துபாயில் இருக்கும் எங்களுடைய அலுவலகம் மூலம், இவர் எந்த நிலைமையில் அங்கிருந்து இங்கே வந்தார் என்று இவருடைய பேப்பர்ஸ் அனுப்பி கேட்டிருந்தோம். அவர்கள் அளித்த தகவலின் பேரில், இவர் அங்கிருந்து வேலையை விட்டு சஸ்பெண்ட் ஆகி வரும்போது, அவர் கம்பெனியே இவரின் உடல் பிரச்சனையால் தான் வேலையை விட்டு அனுப்புகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறது. துபாய் மற்றும் இந்திய தூதரகமும் இதையே உறுதி செய்து மருத்துவ அடிப்படையில் தான் இவரை அனுப்பி இருக்கிறது. நாங்கள் அவரை கூப்பிட்டு விஷயத்தை சொல்லிய பின், அவர் இதையும் மீறி கோர்ட்டில் கேஸ் போடுவேன் என்று போட்டு அதிலும் தோற்றுவிட்டார். நாங்களும் கிளைம் பணத்தை கொடுக்கவில்லை. இவர் உண்மையை சொல்லியிருந்தால் கூட ஏதாவது உதவி இருக்கலாம். 

இதுபோன்ற பாலிசி இன்சூரன்ஸில் ப்ரி எக்சிஸ்டிங் டிசீஸ் என்று வரும். இதில் தகவல் ஒழுங்காக இல்லையென்றால், கிளைம் கிடைக்காது. முன்னாடியெல்லாம் ஒரு நபருக்கு மட்டுமே பாலிசி என்று இருந்தது. இப்போது பேமிலி மொத்தத்திற்கும் கொடுப்பது வந்துவிட்டது. இப்போதெல்லாம் மன நலம் பாதிக்கப்பட்டவருக்கும் பாலிசி கொடுக்கிறார்கள். சைக்கியாட்ரிக் சிகிச்சை எடுத்துக் கொள்பவருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

சார்ந்த செய்திகள்