பார்க்கின் வளைவுகளில் பூத்திருக்கும் செடிகள் தன் தாகத்தைத் தணிக்க இரத்தத் துளிகளைக் கேட்டது என் காதருகில்... விடிந்தும் விடியாத ஒரு காலையின் சில்லிப்பில் சிங்கப்பூர் நகர மையத்தில் லிம் நாங்செங்கும் அவர்களின் எட்டு மகன்களும் எழுப்பிய மெர்லயன் சிற்பம் சுமந்த மெர்லியன் அருகில் மக்களின் காலைநேர கால்பதித்தலுக்காகக் காத்திருந்த பூங்காவின் ஒரு பக்க இரும்புக்கிராதியைத் திறந்தான் வாட்ச்மேன். வழக்கமாய் வாக்கிங் வரும் கண்ணாடித்தாத்தாவுடன் பழுப்பு நிற கண்களும் ஹிப்பித் தலையுமாய் ஒரு குட்டிப் பெண். பாப்பாவை ஏன் ஸார் இந்தக் குளிர்லே?
கிளம்பறப்போ அழுதுச்சி! என்றவர் சிறுமியைப் பார்க்க அவள் தன் கைகளில் முளைத்திருந்த லாலிப் பாப்பை எச்சிலாக்குவதில் மும்முரமாய் இருந்தாள்! காலைப் பனியில் சில்லென்று காலைத்தொடும் புல்லின் மிருதுத்தன்மையோடு குடையாய் மலர்ந்திருந்த பூச்செடிகளையும் அதைச் சுற்றி பறக்கும் பட்டாம்பூச்சிகளையும் ரசித்தபடியே தொடர்ந்த நடையில் கண்ணாடித் தாத்தா தன் வழுக்கைத் தலையில் ஏதோ சில்லிப்பாய் சில துளிகள் விழுவதை உணர்ந்து அண்ணாந்தார். அணிந்திருந்த கண்ணாடியிலும் அது வழிந்து கண்பார்வையை மறைக்க கழற்றிய கண்ணாடியினைத் தாண்டி கன்னத்தில் வழிந்தது, மனித ரத்தம்.
எதிரே படரும் கொடிகளுக்காக வைக்கப்பட்டு இருந்த வளைவில் இரண்டு கண்களும் வெறிக்க வட்டமாய்ப் பிசிறில்லாமல் இருந்த அந்தத் தலையின் அடிப்பகுதியில் இருந்து அவர் மேல் ரத்தம் வடிந்ததில் குளிர் அவரின் முதுகுத்தண்டு வரையில் சில்லிட்டது. வாட்ச்மேன் என்ற தீனக் குரலோடு சிறுமியை இழுத்துக் கொண்டு எதெதிலோ கால் இடற ஒடினார். கையிலிருந்து தவறி விழுந்த மிட்டாய்க்காக அழுதாள் சிறுமி. பயத்தில் பீதியடித்த வாட்ச்மேனிடமும், கண்ணாடித்தாத்தாவிடமும் எந்தத் தகவலும் பெயராமல் போனது. இன்னும் இன்னும் தாகத்திற்காகச் செடிகள் காத்திருக்கிறது. மனித ரத்தங்களைத் தேடி சப்பாத்திக்கள்ளியின் முள்ளில் கிறுக்கல்களாக எழுதியிருந்த அந்தச் சாய்வான எழுத்துகளையும் அந்தத் தலையையும் கைப்பற்றிக்கொண்டு மீதமிருந்த உடலைத் தேடும் பணியை முடுக்கிவிட்டிருந்தனர் காவல் துறையாட்கள்.
அன்றைய தினம் முழுவதும் ரத்தம் வழிந்த முண்டமில்லாத தலையின் உருவம் பற்றிய வர்ணனைகள் கருப்பு வெள்யைாய், கலர்கலராய், வாசகங்களாய் தொலைக்காட்சிகளிலும் ரேடியோக்களிலும் வலம் வந்து கொண்டிருக்க, அதைப் பார்த்துக் கொண்டே தன் முன்னால் கிடத்தப்பட்டு இருந்த உடலை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொண்டு இருந்தான் பெடரரிக். இப்போது காலையினைப் போல் ரத்தம் ஆங்கேங்கே பீச்சியடிக்கவில்லை மாறாக உறைந்து போய் இருந்தது. அதை வெட்டுவது கூட சுவாரஸ்யம் அற்றுப் போக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். உறைந்த ரத்தத்தை நீரில் கூழாக்கி ஜாடியில் இருந்த செடிகளின் மேல் தெளித்தான். இன்னும் தாகம் அடங்கவில்லை என்று அவன் காதில் செடிகளின் சப்தம் அது அந்தப் பூங்கா வளைவில் கேட்டதைப் போல, மீண்டும் ஒரு கழுத்திற்காக அது தரும் செந்நிறக் குழம்பான ரத்ததிற்காகக் கோடு இழுத்தாற்போல் ஒரு வளைவாக வெட்டப்படும் போது கருவிழிகளில் உறைந்திருக்கும் பயத்திற்காக!
க்ளீன் ஷேவ் செய்திருந்தான். நேற்றைப் போல இன்று மற்றொரு வாயிற்புற பூங்காவைத் தேர்ந்தெடுத்தான். ஊருக்குச் சற்று ஒதுக்குப்புறமாகக் கேளிக்கை விடுதிகளின் நடுவில் அந்த வளைவு ஆஹா எத்தனை அழகான இடம், மரங்களில் முணுக் முணுக் என்று எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில் காம இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் வெறியோடு ஆடிக்கொண்டிருக்கும் இருவர் கண்ணில் பட்டனர். பட்டப்பகலில் பயங்கரம் என்று நாளை காலையில் இவர்களின் தலைகளைக் காட்டி டன்டன்னாய் கவலை வழியும் முகத்தோடு செய்தி வாசிப்பதைக் கேட்டால் எத்தனை சுவாரஸ்யமாக இருக்கும் அடுத்த முறை அந்தச் செய்திவாசிக்கும் பெண்ணைக் கூட கழுத்தை அறுத்து என்ன வாசனை வருகிறது என்று பார்க்க வேண்டும் என்று அவனின் அடி மனது எக்களித்தது. இரையைக் கண்டுகொண்ட புலியின் ஆசை அக்கண்களில் சாலையைக் கடந்து போனான் அதற்குள் அவன் அவளிலிருந்து பிரிந்து இன்னொருத்தியைத் தொடர ஏமாற்றம் சுரந்தாலும் அவள் பெடரரிக்கின் மேல் வழிந்ததில் அதே வாசம் முகத்தைச் சுழிக்கவைக்கும் வெறுக்கத்தகுந்த வாசம்.
ச்சீ.... காலையில் அந்தத் தலை தொலைத்த முண்டத்திடம் இருந்த வாடை எத்தனை ரம்மியமாய் இருந்தது இவளையும் அப்படியே முகரவேண்டும், ரகசிய குறீயிடுகளோடு பயணித்தாள் அவள். மறுநாள் காலை அந்தப் பூங்காவின் வளைவுச் செடிகளுக்கும் தாகம் தணிக்கப்பட்டது கூடவே போனஸாய் தலைமுடியின் உபயத்தில் சுருக்கிடப்பட்ட அவளின் தலையும். இந்த இரை அனைவருக்கும் வெகு பரிச்சயமாய் இருந்திருந்தாள். அன்று மாலையே என்னுடன் நடமாடினாள், அதன் பிறகு நீள கோர்ட் அணிந்த ஒருவனுடன் ரோல்ஸ்ராயில் பயணித்தாள் என்று விவரம் சொன்னான். நேற்று அவளுடன் இருந்தவன் கொஞ்சம் தாமதித்திருக்கலாம் இன்று அவனும் வேறு யாராவதால் அடையாளம் காட்டப்பட்டு இருப்பான். முட்டாள் அழகான ஒரு கத்தியின் ஸ்பரிசத்தை இழந்துவிட்டான். மனதிற்குள்ளேயே சபித்தான் பெடரிக். மக்கள் சாலையில் நடக்கவே அஞ்சினார்கள். தன்னுடன் நடமாடினால் ரோல்ஸ்ராய் வைத்திருப்பவர்களின் பட்டியல்கள் அலசப்பட்டது.
பழுப்புக் காகிதம் சுமந்த பட்டியிலில் பெடரரிக் பெயரும் 1942 இல் ஜெர்மன் பொறியாளர் வால்டர் புருச் ஏவுகணைகளின் தவறுகளைக் கண்டுபிடிக்க உதவிய சி.சி.டி.வி. 1968இல் நியூயார்க்கிலுள்ள ஓலனில் தெருக்களில் பொருத்தப்பட்டு 1986 இல் சிங்கப்பூரில் அந்தப் புறநகர் பகுதியில் இருந்த பூங்காவில் யாருடைய குற்றத்தையோ புனிதத்தையோ நிரூபிக்க சி.சி.டி.வி. இல்லை. ஆனால் அப்போதைய கேமிராக்களாக மனிதர்கள் மட்டுமே இருந்தார்கள். அதனால் பெடரரிக் கூரைக்கு மேலிந்து பூமி தொடலாமா வேண்டாமா என்று யோசிக்கும் மழைத்துளியானான். அவனின் செடிகள் மீண்டும் தன் வேர்களின் தாகத்தைச் சொல்லி தொண்டை வறண்டு கத்திக்கொண்டே இருக்க, அந்தத் தாகத்திற்குப் பதிலாய் அவன் அடுத்த கழுத்தைத் தேடிச் சென்றான். இம்முறையும் அதிர்ஷ்டம் பெடரரிக்கிற்குத்தான்.
இரை அவனுடைய இடத்திற்கு வெகுஅருகில், இம்முறை தன் பெருமையை அவன் உலகிற்குப் பறைசாற்ற நினைத்தான். பக்கத்துவீட்டு ராபர்ட் தன் மனைவியிடம் இரைந்தது காதில் விழுந்தது. நினைச்சா செடிவாங்கிட்டு வர்றே யார் தண்ணி ஊத்துறது? காசுப் பிடிச்ச கேடு என்று இரைந்தான். அவன் மனைவி லாராவிற்குத் தோட்டம் அமைப்பதில் வெகு ஆர்வம். மூன்றாவது இரையான ராபர்ட்டை மறுநாள் அதிகாலையில் பெடரிக் வீழ்த்தியபோது லாராவின் தோட்டத்துச் செடிகள் எழுப்பிய தாகக்குரல்கள் ராபர்ட்டின் ரத்தத்துளிகளால் தீர்க்கப்பட்டன. உயிரற்ற பாதி உதடுகள் கிழிந்தும் நிலைகுத்திய கண்களோடும் உள்ள அவனை இல்லையில்லை அதைத் தொங்கவிட்டான் பெடரிக் விடிந்ததும் லாராவின் உதடுகளில் இருந்து புறப்பட்ட சப்தத்தில் மோப்பநாயால் பெடரிக் கண்டுபிடிக்கப்பட்டு மீதமுள்ள உடல்கள் அவனின் படுக்கையறையில்! சிதைந்த நிலையில் கம்பிகளுக்குப் பின்னால் விலங்கோடு அமைதியாய் நின்றான் பெடரிக்.
அவனிடம் மீண்டும் மீண்டும் செடிகளின் தாகக் குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது. பரபரத்த கைகளுக்கு இரை கிடைக்கவில்லை, நீ ஏன் இந்தக் கொலைகளைச் செய்தாய் என்ற நீதிபதியின் கேள்விக்கு ஒவ்வொரு நொடியும் அதிகரிக்கும் செடிகளின் தாகத்தைத் தணிக்க என்று கூலாகப் பதில் சொன்னான் பெடரிக்.