"கவி,.. லில்லி மேடம் உண்மையைக் கண்டுபிடிச்சிட்டாங்களா?" என்று ராம் கேட்டதும், கவிக்கு சட்டென்று என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "எந்த உண்மையை ராம்?" என்று அப்பாவித்தனத்தைக் குரலில் வரவழைத்துக்கொண்டு கேட்டாள்.
கிட்டதட்ட கவியின் குரல் மாடுலேஷன் 'பஞ்சதந்திரம்' படத்தில் தேவயானி, கமலிடம் பேசுவது மாதிரியே ரொம்பவும் வெகுளித்தனமாக இருந்தது.
எப்போதாவது ஒரு தடவை பொய் சொல்வதென்றால் குரல் தடுமாறும். ஆனால், கவியைப் பொறுத்தவரை, தியா இறந்ததிலிருந்து பொய்யை மட்டுமே அதிகம் சொல்வதால் எதுவும் இல்லாமல் இயல்பாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.
"லில்லி மேடம் தனக்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்துங்கற உண்மையைக் கண்டுபிடிச்சிட்டாங்களா?" என்று அழுத்தமாகக் கேட்டான் ராம்.
"இது திட்டமிட்ட விபத்தா? அதெப்படி உனக்குத் தெரியும்?" என்று கேள்வியில் கொக்கி போட்டாள் கவி.
நோ பார்க்கிங்கில் நிற்கும் வண்டியைக் கொக்கி போட்டுத் தூக்குவது மாதிரி, நானே போய் கவியிடம் மாட்டிகிட்டேனா? என நினைத்து, "லில்லி மேடம் என்ன குழந்தையா? லேப்ல கவனக்குறைவாக இருக்க? இதை யாரோ ஒருவர்தான் நடத்தியிருக்க வேண்டும்" என்று ஏதேதோ சொல்லிச் சமாளித்தான் ராம்.
"லில்லி மேடம் வாக்குமூலம் கொடுத்திருக்காங்களே, விபத்துக்கு தன் கவனக்குறைவுதான் காரணம் என்று. அப்படியிருக்க பிறரை எப்படி சந்தேகப்பட முடியும்?" என்று நிம்மதியாகிவிட்ட குரலில் சொல்லிக்கொண்டே, காரை டிராஃபிக் அதிகமில்லாத தாம்பரம் டூ வேளச்சேரிக்கு இடையிலான மேடவாக்கம் சாலையில்.... அந்த பூந்தொட்டிகள் விற்கும் இடத்திற்கு அருகில் ஓரங்கட்டினாள். அப்போது ராம்,
"என்ன சொன்ன கவி, லில்லி மேடமே வாக்குமூலம் கொடுத்துட்டாங்களா?" என்று சொல்லிச் சிரித்தான்.
"ஏன் சிரிக்கிற? இதென்ன ஜோக்கா?" என்று கடுப்பான குரலில் கேட்டாள்.
"இல்லை, நீங்க எல்லாம் ஜோக்கர்ன்னு நினைச்சு சிரிச்சேன்"
"ராம் நிலைமை புரியாம நீ வேற புதிர் போடாத" என்று சற்று குரலை உயர்த்தினாள் கவி.
"அட அறிவு ஜீவித் தங்கையே, தீக்காயம்பட்டவங்க தொழிற்சாலை விபத்தில் உயிருக்குப் போராடுபவர்கள்னா, போலீஸுக்கு வாக்குமூலம் வாங்க அதிகாரம் கிடையாது. நீதித்துறை மாஜிஸ்திரேட்தான் வாக்குமூலம் பெற அதிகாரம் பெற்றவர். அதனால இப்ப கொடுத்திருக்கிற வாக்குமூலமே செல்லாது" என்று கவியின் வயிற்றில் அமிலம் ஊற்றினான் ராம்.
"இப்ப வேணும்னா மேடத்தோட கணவர் பாலு கேஸ் கொடுக்காம இருக்கலாம். ஆனால் பாலு கேஸ் கொடுத்தாா இந்த வாக்குமூலம் செல்லாது" என்று தான் ஊற்றிய அமிலத்தில் நெருப்பையும் பற்ற வைத்தான் ராம்.
கவி தன்னிலையில் இல்லை. பட்டாம்பூச்சியைப் பிடித்து ஒவ்வொரு இறகாகப் பிய்த்து எறிவதைப் போலத் துடித்தாள். தியா மரணத்திற்காக நியாயம் தேடப் போய் அவள் மரணக்குழியை நோக்கிப் போவதைப் போல உணர்ந்தாள். கவியின் தொண்டைக் குழி, சித்திரை வெயில் வீசியதைப் போல வறண்டிருந்தது. அப்படியே கார் மீது சாய்ந்து கண்களை மூடினாள்.
திடீரென்று அவள் மூடிய விழிகளுக்கு முன்னால் நிழலாடியது. இமை திறந்தபோது அவளை நோக்கி ஒரு கை நீண்டது. ராம் இளநீரை அவள் முகத்தருகே நீட்டிக்கொண்டிருந்தான்.
அதைக் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு மெல்ல ராமின் கைகளைப் பிடித்தாள். பட்டாசு வெடிக்கும்போது பயம் அறியாமல் இருப்பதற்காக அவன் கைகளைப் பிடிப்பாள். தந்தையின் பாதுகாப்பில் இருப்பதைப் போல உணர்வாள். இப்போதும் அந்த மனநிலையில்தான் கைகளைப் பிடித்தாள். ராம் அந்த கைகளுக்கு அழுத்தம் கொடுத்து அந்த பாதுகாப்பை உணர்த்தினான்.
"கவி... தியாவின் மரணம் உன்னை அதிகமா பாதிச்சிருக்குன்னு எனக்குத் தெரியும்" என்று ராம் பீடிகைப் போட்டு அதில் அமர்ந்தான். கவியும் ஆமாம் என்பதை மெளனத்தில் சொன்னாள்.
"இதைவிடக் கொடுமைகளெல்லாம் நான் நேரில் பார்த்திருக்கேன் கவி. நான் வேலை செய்யும் அரசு மருத்துவமனையில் OSCCன்னு ஒரு வார்டு இருக்கு, அந்த வார்டில் பாலியல் வன்முறைக்கு ஆளான பெண் குழந்தைகள் மட்டும்தான் இருப்பாங்க. தனக்கு நடந்த கொடுமை என்னன்னு கூட விவரமா சொல்லத் தெரியாம, டாக்டர்கள் மெடிகல் செக்கப் பண்ணும்போது அந்தக் குழந்தைகள் அலறுவதைக் கேட்கும்போது ஒட்டுமொத்த ஆண்களையும் சுட்டுத்தள்ளலாமான்னு தோணும். குழந்தைகளை இப்படி பண்றவன்கள் யார் தெரியுமா? 50% அவங்க குடும்பத்தில் இருக்கற ஆண்கள்தான். மீதி பள்ளிக்கூட பிரின்சிபல், ஆஸ்டல் வார்டன், அக்கம் பக்கத்தில் இருப்பவனுங்க..
இதுல இன்னும் கொடுமை என்னன்னா 14, 15 வயதிலேயே பெண் குழந்தைகளில் சிலர் தாய்மை அடைஞ்சிருப்பாங்க. பெத்தவங்க அந்தப் பொண்ணை வெறுக்கவும் முடியாமா, குழந்தையை வச்சிகிட்டு எப்படி வளர்க்கறதுன்னும் தெரியாம தவிக்கிற தவிப்பையும், துடிக்கிற துடிப்பையும் பார்க்கும்போது இந்த சமுதாயமே வேணாம் ஒட்டுமொத்தமா குண்டு போட்டு அழிச்சிடலாமான்னு வெறுப்பு வரும் கவி".
அவன் குரலில் தெரிந்த தீவிரம், அவளை மகிழ வைத்தது. அவன் மீது திடீரென மதிப்பு கூடியது. அவனே தொடர்ந்தான்... சைல்ட் அப்யூஸுக்கு எதிரான அமைப்பைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்ன்னு சொல்லு? ஏன் உனக்கே தெரியுமா? தெரியாது. 1098 என்ற எண்ணிற்கு ஃபோன்செய்து, எங்கு குற்றம் நடந்தாலும் சொன்னால் தீர்வு கிடைக்கும். ஆனால் அது தெரியாம எத்தனை மாணவிகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திடறாங்க? இல்லைன்னா அவங்க தற்கொலை செய்துகறாங்க. தியாவும் மனசுவிட்டு பேசியிருந்தாள் அவளும் உயிரோட இருந்திருப்பா" என்று மிகவும் ஆதங்கத்துடன் சொன்னான் ராம்.
ராம் பேசியதைக் கேட்டதும் தியாவைப் பற்றிய அனைத்து விசயங்களையும் சொல்லி அவனிடம் உதவி கேட்க மனம் துடித்தது. இனிமேல் தனியாக என்னால் போராட முடியாது என்ற மனநிலைக்கு வந்தாள் கவி.
அந்த நேரம் பார்த்து ராமிற்கு ஒரு ஃபோன் வந்தது, "சொல்லுங்க சித்தப்பா, எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டிருக்கு. கவி என் கண்ட்ரோலில்தான் இருக்கா" என்று ராம் சொன்னதைக் கேட்டதும், ரோட்டில் போகிற கண்டெய்னர் லாரி அவள்மீது போவது போன்ற உணர்வில், யாரை நம்பறதுன்னு தெரியலையே என்று குழம்பினாள்.
(திக் திக் தொடரும்)
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #34