Skip to main content

அட்டூழியம் ஆரம்பம்! ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #6

Published on 02/11/2019 | Edited on 02/11/2019


நாஜிகள் ஆட்சிக்கு வந்தால் சுபிட்சம் நிச்சயம் என்றார்களே... அப்படியெல்லாம் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஹிட்லர் சர்வாதிகாரி ஆன கையோடு, அட்டூழியம்தான் ஆரம்பமாகியது.  எங்கும் பிரவுன் சீருடை அணிந்த நாஜி அதிரடிப்படையின் ராஜ்ஜியம்தான். அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஹிட்லருக்கு முதல் குறி கம்யூனிஸ்ட்டுகள்தான். அந்தக் கட்சிக்கு தடைவிதித்தார் ஹிட்லர். ஜெர்மனியின் முக்கியமான அரசியல் சக்தியான அந்தக் கட்சியை தடை செய்தது மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் என்று யாரும் தன்னை சொலிக்கொள்ளக் கூடாது.

மீறிச் சொன்னால், கைது, சிறை, சித்திரவதை என்று மிரட்டல் விடுத்தார். உயர்மட்டத் தலைவர்கள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தார். மற்றவர்கள் அரண்டுவிட்டனர். தனது அவசர சட்ட மசோதாவை எதிர்த்து வாக்களித்த சமூக ஜனநாயக கட்சிக்கும் தடை. அரசியல் சதுரங்கத்தில் இஷ்டப்படி தனது எதிரிகள் என்று நினைப்பவர்களை எல்லாம் வரிசையாக ஒழிக்கும் வேலையில் அவர் தீவிரமாக இருந்தார். அதேசமயம் நாஜிகள் தங்கள் நெடுங்கால வன்மத்தை தீர்த்துக் கொண்டிருந்தார்கள். யூதர்களின் கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்குள் புகுந்து கொள்ளையடித்தனர். எதிர்த்து பேசுகிறவர்களை நடுத்தெருவில் அடித்துத் துன்புறுத்தினர். கொலையும் செய்தனர்.
 

jk



முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாரபட்சமில்லாமல் தாக்கினர். கற்பழித்தனர். கொன்று குவித்தனர். அவர்களுக்கு எதிராக எந்த புகார் கொடுத்தாலும், அது கொடுத்தவர் மீதே பதிவு செய்யப்பட்டது. இதைப்பற்றியெல்லாம் ஹிட்லருக்கு கவலையில்லை. அதிகாரம் முழுவதையும் தன்வசம் கொண்டுவர என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதிலேயே கவனமாக இருந்தார். பவேரியன் கத்தோலிக்க கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக கட்சி, மக்கள் கட்சி என்று வரிசையாக அனைத்துக் கட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. நாஜிக் கட்சி மட்டுமே இருக்க வேண்டும். ஹிட்லர் மட்டுமே தலைவராக மதிக்கப்பட வேண்டும்.

மிச்சமிருந்தது தொழிற்சங்கங்கள் மட்டும்தான். அவற்றுக்கும் தடை விதிக்க வேண்டும். ஆனால், பக்குவமாக கையாள வேண்டும். தொழிலாளர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. அதற்கான நேரம் வந்தது. மே தினம் வந்தது. தொழிலாளர்களின் தலைவராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார். ஜெர்மானிய தேவதையின் குழந்தைகள் என்று தொழிலாளர்களை வர்ணித்தார். “மூளை வேலை செய்வோர், தொழிலாளர், விவசாயிகள் ஆகிய மூவரும், சமூகத்தின் அறிவு, ஆன்மா, தேகம் போன்றவர்கள். மெய்வருந்தி உழைப்பது இழிவானதல்ல. தனக்கிட்ட வேலையை உண்மையாகவும், மனப்பூர்வகவும் செய்கிறவருக்கு கூடுதல் கவுரவம்தான் கிடைக்கும்.

 

 

j



தொழில் தொண்டர் படை ஒன்று உருவாக்கப்படும். இனி தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் குறைகளை அந்த அமைப்பிடமே முறையிடலாம்.
ஜெர்மனியில் பிறந்தவர் யாராக இருந்தாலும், சமுதாயத்தின் எந்தப் பிரிவினராக இருந்தாலும், குறைந்த காலமாவது கைத் தொழிலாளியாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களை வேலை வாங்கும் ஆற்றலைப் பெறமுடியும்” ஹிட்லரின் மே தின உரை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. அடுத்த நாள், தொழிற்சங்கங்கள் அனைத்தும் தடை செய்யப்படுவதாக அறிவித்தார். யாரும் மூச்சு விடவில்லை.

முதலாளிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டார். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வழியின்றித் தவித்தார். வேலையில்லாத் திண்டாட்டம் அப்படியே இருந்தது. நாஜிகளின் அட்டூழியம் தவிர, வேறு எதையும் மக்கள் அனுபவிக்கவில்லை. ஆயுதத்தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஹிட்லர் அறிவித்திருந்ததால், கனரக தொழிற்சாலைகள் ஆயுத உற்பத்தியைத் தொடங்கியிருந்தன. மக்களுக்கு வேலை கொடுக்க என்ன செய்வது? அவர்களுடைய அதிருப்தியை முதலில் போக்க வேண்டுமே.

 

 

jh



“யூதர்கள் ஜெர்மானியர்கள் அல்ல” நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தார் ஹிட்லர். மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களின் கணக்கைச் சேகரியுங்கள். அதில் யாரேனும் ஒருவர் யூதராக இருந்தால் நாட்டைவிட்டு ஓடிவிட வேண்டும். இல்லையென்றால் உயிரை விட வேண்டும். “எவ்வளவு காலம் அவர்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமோ, அவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் மாறவே இல்லை. அவர்களுடைய விதி விரைவில் முடிவு செய்யப்படும்” என்றார். யூதர்கள் நடத்தும் கடைகளை மற்றவர்கள் அனவரும் புறக்கணிக்க வேண்டும். ஆரியர் எனப்படும் ஜெர்மானியரின் வளாகத்திற்குள் யூதர் எவரேனும் இருந்தால் உடனடியாக கைது செய்யப்பட்டு கான்ஸன்ட்ரேஷன் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள்.

அங்கு போய்விட்டால் அப்புறம் என்னவானார் என்பதே வெளியே தெரியாது. யூதக் குடியிருப்பில்தான் யூதர்கள் வசிக்க வேண்டும் வெளியே தலை காட்டக் கூடாது. நடக்கப்போவதை முன்கூட்டியே யூகித்த பல்லாயிரக்கணக்கான யூதர்கள் வேறு நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். மிகச்சிறந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசை மேதைகள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என எல்லோரும் ஓடிவிட்டனர். யூதர்கள் தங்களுடைய இஸ்ரேல் முத்திரையை உடையில் அணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது. நாஜி அதிரடிப்படையினர் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள வசதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

jk



ஜெர்மனியின் இந்த கொடூரமான இனவெறி உத்தரவு, பக்கத்து நாடுகளை ஆவேசப்படுத்தியது. ஆனாலும், அவை வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தன. வெளியேறும் யூதர்களுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும்தான் அடைக்கலமாக இருந்தன. ஆனால், அவர்களுக்கு பரிந்து ஜெர்மனியை கண்டிக்கக்கூட அவை முன்வரவில்லை. ஆயிரக்கணக்கான யூதர்களின் கதி என்னாயிற்று என்றே தெரியவில்லை. கான்சென்ட்ரேஷன் முகாம் என்று அழைக்கப்பட்ட சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் அங்கேயே கொல்லப்பட்டு, அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டனர்.

யூதர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை எல்லாமட்டத்திலும் விரிவடைந்தது. ராணுவத்தில் இடம்பெற்றிருந்த யூதர்கள் முதலில் வெளியேற்றப்பட்டிருந்தனர். அரசு வேலைகளில் இருந்தவர்கள், தொழிற்சாலைகளில் வேலை பார்த்தவர்கள், வங்கிகளில், வர்த்தக நிறுவனங்களில் என எல்லா இடங்களிலும் யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய இடங்களில் ஜெர்மானியர்களர் நியமிக்கப்பட்டனர். இதுதான், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஹிட்லர் போக்கிய லட்சணம். யூதர் ஒருவர் கடை நடத்தினால், அந்தக் கடையை நாஜிக் கட்சியின் செல்வாக்குப் பெற்ற யாரேனும் ஒருவர் அபகரித்துக் கொள்ளமுடியும்.

அவர்கள் நடத்திய வங்கிகள், தொழிற்சாலைகள், அவர்களுடைய சொத்துக்கள் அனைத்தும் அரசு அபகரித்துக் கொண்டது. இந்தக் கொடுமை நடந்து கொண்டிருக்கும்போதே, ஜூலை மாதம் 20 ஆம் தேதி, ரோம் நிர்வாகத்துடன் ஹிட்லர் ஒரு ஒப்பந்தம் செய்தார். ஜெர்மனியில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்திருந்தார் ஹிட்லர். ஆனால், வாக்குறுதியெல்லாம் ஹிட்லருக்கு எம்மாத்திரம். ஐந்தே நாளில் அதைக் காற்றில் பறக்கவிட்டார். கத்தோலிக்க இளைஞர் கழகம் சட்டவிரோதமானது என்று அறிவித்தார். ஒழுக்கக் கேடாக நடந்துகொண்டனர் என்று குற்றம்சாட்டி, கத்தோலிக்க கன்னிமாரையும், பாதிரியார்களையும் கைது செய்தனர். அரசுக்கு எதிராக சதி செய்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
 

j



மார்ட்டின் லூதர் கிங் மீது ஹிட்லருக்கு மிகுந்த பற்று உண்டு. கிறிஸ்தவ மதத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்று கூறுவார். ஆனால், புராட்டஸ்ட்ன்ட்டுகளும் அவரிடமிருந்து தப்ப முடியவில்லை. ஜெர்மன் தேசிய தலைமைத் தேவாலயம் ஒன்றை அமைக்க வேண்டும். அங்கு ஏசு படங்களோ, சிலுவைகளோ இருக்கக் கூடாது. பாதிரியார்களுக்கு பதிலாக தனது கட்சியின் சொற்பொழிவாளர்கள் ஹிட்லர் வேதம் போதிப்பார்கள். பைபிளுக்கு பதிலாக ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்று நூலான மெயின் கேம்ப் வாசிக்கப்படும்.

ஹிட்லரின் கேலிக்குரிய இந்த ஆசை, அவரை தொடக்கத்தில் ஆதரித்த கிறிஸ்தவ மதத் தலைவர்களையும் எதிரியாக்கியது. இது ஒருபுறமிருக்க, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்கு, புதிய புதிய திட்டங்களை அறிவித்தார். ஜெர்மனி முழுவதும் மிக அகலமான நெடுஞ்சாலைகளை அமைக்க உத்தரவிட்டார். ஆனால், தொடக்கத்திலிருந்தே ராணுவத்தில் குழப்பம் நீடித்து வந்தது. ராணுவத்தில் உள்ள யூதர்களை நீக்க வேண்டும் என்று ஹிட்லரின் அதிரடிப்படைத் தலைவர் எர்னஸ்ட் ரோம் வற்புறுத்திவந்தார். அவருடைய நிர்ப்பந்தத்தை முதலில் ஏற்க மறுத்த ராணுவத் தலைவர்கள், பிறகு ஒப்புக் கொண்டனர். இதன் காரணமாக திறமை வாய்ந்த யூத ராணுவ தலைவர்கள் உள்பட பலர் வெளியேற்றப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, அதிரடிப்படையினரை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினார் ரோம். ராணுவத்தலைவர்கள் இதை ஏற்க மறுத்தனர். ஹிட்லரும் அவர்கள் முடிவுதான் சரி என்று ரோமிடம் கூறினார். இது ரோமுக்கு ஆத்திரமூட்டியது. ராணுவத்தின் உதவியோடு ஹிட்லரை கவிழ்த்துவிட்டு, ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டான். அவனுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. அத்தோடு, முன்னாள் பிரதமர் வான் ஸ்லெய்ச்சர், வான் பாப்பென், இவர்களுடன் வான் போஸ் என்பவனும் இணைந்து சதித்திட்டத்தை தீட்டினர். பேச்சுரிமை மறுக்கப்பட்டிருப்பதாக வெளிப்படையாக குறைகூறத் தொடங்கியிருந்தனர். அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். ஹிட்லர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், ஹிட்லரின் நண்பரான ருடால்ப் ஹெஸ் முன்கூட்டியே யூகித்தான். ஹிட்லரின் அந்தரங்கச் செயலாளராக செயல்பட்டு வந்த அவன், இப்போது துணைத்தலைவராக இருந்தான். கட்சிக்குள் ஹிட்லருக்கு நெருக்கமானவர்கள் சேர்ந்து நடத்தும் சதி குறித்து அவனுக்கு தெரியவந்தது. ஹிட்லரிடம் இதுகுறித்து விவாதித்தான். கோயரிங், கோயபல்ஸ் ஆகியோரிடம், சதியில் ஈடுபடுகிறவர்களின் பட்டியலைத் தயாரிக்கும்படி உத்தரவிட்டான். மே மாதம் அந்தப் பட்டியல் கைக்கு கிடைத்தது. அதைக் கொண்டுபோய் ஹிட்லரிடம் கொடுத்தான் ஹெஸ். பட்டியலை வாங்கிப்பார்த்த ஹிட்லர், மறுவார்த்தை பேசாமல், ஈவா பிரவுன் இருந்த அறைக்குள் போனார். துரோகிகள் என்றோ, முதுகில் குத்தி விட்டார்கள் என்றோ கத்துவதுதான் ஹிட்லரின் வழக்கம். ஆனால், இந்த முறை, ஈவா பிரவுனின் மார்பில் முகம் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழுதார்.

அடுத்தநாள், அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார் ஹிட்லர். அதை ருடால்ப் ஹெஸ் ஏற்கவில்லை. கோயரிங்கும், கோயபல்ஸும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர். ஜூன் 30 ஆம் தேதிவரை இந்த இழுபறி நீடித்தது. சதிகாரர்கள் மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும், தான் ஆதரிப்பதாக ஹிண்டன்பர்க் தெரிவித்துவிட்டார். மிகக் கொடூரமான தண்டனை. விசாரணையே இல்லாமல் கொல்லப்பட்டனர். முன்னாள் பிரதமர் ஸ்லெய்ச்சர், தனது வலதுகரமாக அதிரடிப்படையை தலைமையேற்று நடத்திய ரோம், வான் போஸ் உள்பட 77 பேர் கொல்லப்பட்டதாக ஹிட்லர் கூறினார். இந்தப் படுபாதகச் செயலுக்கு தானே பொறுப்பேற்பதாக உருக்கமாக தெரிவித்தார்.

சதித்திட்டத்தில் பங்குபெற்ற வான் பாப்பென் மட்டுமே கருணை அடிப்படையில் உயிர்தப்பி ஓடினார். இந்தச் சதி தொடர்பாக கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 287 முதல் 401 வரை இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், 1957ல் யுத்தக்குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் ஆயிரம்பேருக்கு மேல் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. (இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்குப் பிறகு, இந்தப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஸ்பாண்டவ் சிறையில் அடைக்கப்பட்ட ஒரே குற்றவாளி ருடால்ப் ஹெஸ் மட்டுமே. அவரே இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது)

ரத்தத்தின் ருசியை ஒருமுறை சுவைத்து விட்டால், பின்னர், ரத்தவெறி பிடித்து அலைவார்கள் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், ஹிட்லர் அப்படிப்பட்ட இயல்பு இல்லாதவர். அவருடன் நெருங்கிப்பழகிய பெண்கள், அவரை மிகவும் நல்லவர் என்றே கூறுகிறார்கள். மியூனிக் புரட்சியின் போதுகூட வன்முறைக்கு வன்முறை என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இல்லாதவராகத்தான் இருந்தார். காவல்துறையினருடன் மோதக்கூடாது. யாரையும் துன்புறுத்தக் கூடாது என்றுதான் ஊர்வலமாக புறப்படுவதற்கு முன் கட்சிக் காரர்களிடம் கூறினார். அதையும் மீறி கலவரம் வெடித்தபோது, காயமடைந்து கிடந்த சிறுவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிற மனிதாபிமானம் அவரிடம் இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் இல்லாத நேரத்தில், நண்பர்களுடன் சிரித்துப் பேசுவார். இசையை ரசிப்பார். கலையை ஆராதிப்பார். இயற்கையை வியப்பார்.

விலங்குகளிடம் மிகவும் பிரியமாக இருப்பார். இரண்டு ஷெப்பர்டு நாய்களை வளர்த்தார். ஒருமுறை நீச்சல் குளத்தில் விழுந்த வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றி, அது இறக்கை விரித்துப் பறக்கும் வரை காத்திருந்தார். மற்றவர் துன்புறுவதைப் பார்ப்பதும் அவருக்கு பிடிக்காது. ஈவா பிரவுன் ஒருமுறை பல்வலியால் துடித்தபோது ஹிட்லர் பதறிப்போனார். பிறகெப்படி இத்தனை கொடுமைகளும் அரங்கேறுகின்றன? இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் ஹிட்லர் நேரடிப் பொறுப்பாளி அல்ல. அவருடன் இருந்தவர்கள் மிக மோசமான “சாடிஸ்ட்”டுகள். யூதர்களைத் தாக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசுவார் ஹிட்லர். ஆனால், அவரைச் சுற்றியிருந்தவர்கள், ஜெர்மனியின் ஆயிரம் நகரங்களில் யூதர்களை தாக்கினர்.

தனது அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் பாதிரியாரை ஹிட்லர் கண்டித்துப் பேசினார். ஆனால், அவரைச் சுற்றியிருந்தவர்கள் அந்தப் பாதிரியாரை நையப்புடைத்து சிறையில் தூக்கிப் போட்டனர். தனது கட்சிக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஹிட்லருக்கு தெரிந்திருந்தது. ஆனால், கண் தெரியாதவர் போலவும், காது கேட்காதவர் போலவும் நடித்துக் கொண்டிருந்தார். ஹிட்லருக்கு மிகவும் நெருக்கமானவர்களின் கோணல் புத்தியைப் பற்றித் தெரிந்துகொண்டால், அவர் மீதான வெறுப்பு கொஞ்சம் குறையக்கூடும். ஆனால், தன்னைச் சுற்றிலும் இப்படிப்பட்டவர்களை வைத்திருந்த நபரா இவர்? என்று, வெறுப்பு அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு.

ஹிம்லர் மிகக் கொடூரமான பாலியல் வன்புணர்ச்சிக்காரர். ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் மட்டமான ரசனைக்காரர். மனைவியிடம் கூட முரட்டுத்தனமான முறையற்ற உறவு கொள்ளும் பழக்கமுடையவர். 1930 தேர்தல் பிரச்சாரத்திலேயே இவருக்கும், ஆண் மருத்துவர் ஒருவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மூக்குக்கண்ணாடி அணிந்த வாத்தியார்போல இருப்பார். புழுப் பூச்சிக்குக் கூட தொந்தரவு தாரதவர் போன்று தோற்றமளிப்பார். இளைஞர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட பல்துர் வான் ச்ராச் படு கேவலமான செக்ஸ் வெறியன். இயக்கத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களை, கூச்சநாச்சமில்லாமல் கற்பழிப்பான். தன்னைப்பற்றி புகார் செய்ய அவர்களுக்கு துணிச்சல் இல்லை என்று கிண்டலாக கூறுவான். நகக்கண்ணில் ஊசிகளை ஏற்றி விதவிதமாக கொடுமைப் படுத்துவான்.

ஜூலியஸ் ஸ்ட்ரெய்ச்சர் என்பவன், தொடக்கத்தில் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தவன். யூதர்களைக் கடித்துக் குதறுவது என்றால், இவனுக்கு ரொம்பவும் இஷ்டம். யூதப் பெண்களை இழிவுபடுத்தும் ஏராளமான செக்ஸ் கதைகளை எழுதியிருக்கிறான். யூதப்பெண்களின் உடையை களைந்துவிட்டு நிர்வாணமாக பார்த்து ரசிப்பதில் ஆனந்தப்படுவான். நாஜிகள் ஆட்சிக்கு வந்தபின்னர், கான்ஸன்ட்ரேஷன் முகாம்களில், யூதப்பெண்களை கற்பழிக்கும்படி தனது உறுப்பினர்களுக்கு உத்தரவிடுவான். அவர்கள் கற்பழிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பான். யூதர்களை பழிதீர்ப்பதில் மிகத் தீவிரமாக இருந்தவர்களில் மற்றொருவன் ஹெய்ட்ரிச். இவன் சிறுவயதில் பல்வேறு குற்றங்களுக்காக பலமுறை சிறை சென்றவன். அதிக எண்ணிக்கையில் யூதர்களைக் கொன்றவன் என்பதற்காக ஹிம்லரின் பாராட்டுக்களை பெற்றவன். அல்லது அவனுடைய பாராட்டுக்களைப் பெறுவதற்காகவே யூதர்களைக் கொன்று குவித்தவன்.

இவர்களுக்கெல்லாம் மேலாக கோயபல்ஸ் மிகப்பெரிய சாடிஸ்ட்டாக இருந்தான். ஜெர்மன் மொழியில் யூதர்கள் எழுதிய புத்தகங்கள், அவர்களைப் பெருமைப்படுத்தும் புத்தகங்கள், அவர்களை அடையாளப்படுத்தும் புத்தகங்கள் எத்தனை இருக்கிறது என்பதை பட்டியலிட்டான். அவற்றை அழித்துவிட ஹிட்லரின் ஒப்புதல் பெற்றான். 1933 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி, அந்தப் புத்தகங்கள் அனைத்தும் பெர்லின் நூலகங்களில் இருந்து சேகரிக்கப்பட்டன. பல்கலைக்கழகத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட மிகப்பெரிய குவியலாக குவிக்கப்பட்டு, சொக்கப்பனை போல கொளுத்திக் கொண்டாடினர்.

அந்தத் திருவிழா ஜெர்மனி முழுவதும் தொடர வேண்டும் என்று கோயபல்ஸ் உத்தரவிட்டான். 1933 அக்டோபர் 4 ஆம் தேதி ஜெர்மனியிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் எத்தகைய செய்திகளை வெளியிட வேண்டும். எந்தச் செய்தியை எப்படி வெளியிட வேண்டும் என்பதை கோயபல்ஸ்தான் தீர்மானிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்த பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வானொலி ஒலிபரப்பு, செய்தித்திரைப்படம் தயாரிப்பு போன்றவையும், விரைவிலேயே கோயபல்சின் கட்டுப்பாட்டில் வந்தன.

இந்நிலையில்தான், 1934 ஆகஸ்ட் 2 ஆம் தேதி, குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்க் மரணமடைந்தார்.  குடியரசுத்தலைவர் தேர்தல் எதற்கு நடத்த வேண்டும்? அது ஒரு தொல்லை பிடித்த வேலை. அதுதான் நான் இருக்கிறேனே. எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன். அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆக, ஹிட்லர் முழுமையான சர்வாதிகாரி ஆகிவிட்டார்.

 

சார்ந்த செய்திகள்