Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #05

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

maayapuraa part 05

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

’பொட்டல் காட்டுல, பொட்டநரி கூவயில 
ஒத்தைப் பனை மரமா ஒய்யாரமா நின்னாலும்
கூடுகட்டிச் சொந்தம் கொண்டாட 
கூவி அழைச்சதுவாம் ஊர் குருவியை’
-இதுல பனை மரம் மாதிரி ஒத்தையில நிற்பதால்தான் சொந்த பந்தம் வேண்டுமென்று உறவுகளை அரவணைத்துச் செல்ல நினைக்கிறாள் அலமேலு.

 

அதிகாலை நேரத்தில் அடுப்பைப் பற்றவைத்து வெந்நீர் போட்டுக் குளிக்கும் சுகம் இருக்கிறதே அதற்கு ஈடு அதுதான். சவுக்க மெலாரில் அடுப்பெரித்து, கரிப் பானையைச்  சூடாக்கும் போது, அதுல வரும் வாசம், அந்த  நீர் ஆவியோடு கலந்து வரும்போது இதமாக இருக்கும்.

 

கொதிக்கும் நீரை பித்தளை அண்டாவில் ஊற்றும்போது, அந்தக் காட்சி  வெண்மேகம் தரை இறங்கி மிதக்கிற மாதிரி இருக்கும். 

 

குற்றால அருவியில் வெந்நீர் வந்தால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு குளியலைப் போட்ட சொந்தபந்தங்கள் நலங்கு வைக்கத் தயாரானார்கள்.

 

தெருக்கூத்தில் அல்லிராணி வேஷம் போட்ட மாதிரி அலங்காரம் பண்ணி இருந்த புவனா, திருவாரூர் தேரோட்டம் மாதிரி அசைந்தசைந்து நடந்தாள்.

 

தழையத் தழைய தலையைப் பின்னி, அடுக்குச் செம்பருத்தியை சைடில் சொருகி, சிரித்த முகத்துடன் அனைவருக்கும் காபி கொடுத்து பௌர்ணமி நிலவாக வலம் வந்தாள் சங்கவி. 

 

இன்று தங்கத்தின் அண்ணன் வீட்டு நலங்கு. இன்றைக்கு முழுவதும் தாய்மாமன் தான் வீட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போடவேண்டும். காலையிலேயே வெளி  அடுப்பு, உள் அடுப்பு  அனைத்தும் ஹவுஸ்ஃபுல்லாக இருந்தது. சமையல் வேலைகளை அலமேலுவும் சங்கவியும் பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு காய் நறுக்கி கொடுப்பதற்கும் பாத்திரங்கள் கழுவுவதற்கும் பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள் உதவி செய்தனர். அடுப்படி வேலையும் பார்த்துக் கொண்டு நலங்கு வைக்கும் வேலைகளையும் செய்து கொண்டு சிட்டாக சிறகடித்தனர் தாயும் மகளும்.

 

நலங்கு வைக்கும் இடத்தில் அனைத்து பூஜை பொருள்களும் வெள்ளியில் மின்னின. அங்கு வந்திருந்த அனைவரின்  கண்களும்  இதனைப்  பார்த்ததும் அகல விரிந்தன. அந்த ஊரிலேயே முதன் முதலில் கல் வீடு கட்டியவர்கள் இவர்கள் தான். அதனால் தனம்மாவை அனைவரும் ‘கல் வீட்டுக்காரம்மா’ என்று தான் அழைப்பார்கள். அவர்கள் வீட்டில் சம்பந்தம் வைத்துக் கொள்ள அனைவரும் போட்டி போட்டனர். ஜாதகப் பொருத்தம் பார்த்து, அந்தஸ்து பார்த்து, பெண்ணின் அழகைப் பார்த்து, அரக்கோணத்தில் பெண் எடுத்தனர்.  இந்த இடத்தை முடித்ததும் தங்கத்தின் அண்ணன் தான். அப்பதான் சீக்கிரமாக தன் பெண்ணுக்கும் அசோக்கும் திருமணம் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் அசோக்கின் அண்ணன் மணிக்கு கண்ணுசாமி திருமண ஏற்பாட்டை முன்னின்று செய்தார்.

 

அலங்காரம் செய்து வந்ததில் இருந்து அல்லி ராணியின் கண்கள் அல்லி ராஜனைத் தேடிக்கொண்டிருந்தது. அதாங்க புவனாவின் கண்கள் அசோக்கை தேடின. 

 

அசோக், ’தம்பிக்கு எந்த ஊரு?’ படத்தில் வரும் ரஜினி மாதிரி வேட்டி சட்டையில் கம்பீரமாக நடந்து வந்தான். கட்டம் போட்ட சட்டையை பெல்சில் டக்−இன்  பண்ணி, மைக் மோகன் மாதிரி அசோக் வருவான் என்று எதிர்பார்த்த புவனாவின் ஆசை, தோசை ஆனது.

 

அசோக் வருபவர்களை வரவேற்றான். பந்தக்கால் நடுவதற்கு பள்ளம் தோண்டினான். பூஜை சடங்குகள் முடிந்து பந்தக்கால் நடப்பட்டது. 

 

மணிக்கு தாய்மாமன் பட்டு வேட்டி, பட்டு சட்டை, 2 பவுன் தங்கச் சங்கிலி போட்டு பழம், பட்சணம் எல்லாம் ஐம்பத்தொரு தட்டுகள் வைத்து, மிகச் சிறப்பாக நலங்கு வைத்தார். நலங்குக்கு வந்தவர்களுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் தாம்பூலமாக  கொடுக்கப்பட்டது. அங்கு வந்திருந்தவர்கள் எல்லாம் கண்ணுசாமியின் செல்வச் செழிப்பைப் பெருமையாகப் பேசினர். 

 

புவனாவின் நகைகளையும், நாகம்மாவின் நகைகளையும் தொட்டுப்பார்த்து, தொட்டுப்பார்த்து புகழ்ந்து கொண்டிருந்தார்கள். தனம்மாவிற்கு தற்பெருமை அதிகமாகியது. மகனின் நலங்கு சீரில் புல்லரித்து கொண்டிருந்தார். செல்லரித்துப் போகும் உடம்பில்  பகட்டும் படாடோபமும்  கும்மி அடித்துக் கொண்டிருந்தது.

 

தனம்மாவிற்கு வாய் நம நம வென்று இருந்தது. வெற்றிலையை இடிப்பதைவிட பிறர் மனதை உரலில் போட்டு வார்த்தைகளால் இடிப்பது தான் தனம்மாவின்  பொழுதுபோக்கு. கண்களை நோட்டம் விட்டார். அனைவரையும் உபசரித்துக் கொண்டிருந்த அலமேலுவும் சங்கவியும் கண்களில் பட்டனர்.

"என்னடி அலமேலு? நீ அத்தை சீர் கொண்டு வரலையா? நீ என்னைக்கு நலங்கு வைக்க போறே” என்று வம்புக்கு இழுத்தாள் தனம் . 

“இன்னும் கல்யாணத்துக்கு ஏழு நாள்கள் இருக்கு. நடுவில் ஏதாவது ஒரு நாள் வைத்துக்கொள்கிறேன்" என்று  பட்டும் படாமல் சொன்னாள் அலமேலு.

 

இன்றைக்கு கோழியை சுக்கா பண்ணாம விடறது  இல்லை என்ற முடிவோடு," நீ தனியா நலங்கு வச்சா, வரவங்களுக்கு  வடை பாயாசத்துடன் சாப்பாடு போடணும்.  அந்த அளவு உன்கிட்ட வசதி இருக்கா? என் மகனைப்  பாரு.  தடபுடலாக எப்படி விருந்து சாப்பாடு போடறான்னு, ஊரே மூக்கு மேல விரல் வைக்குது" என்று மகனின் பெருமையைப் பறை அடித்தார் தனம்.

 

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஏழ்மை மனம் வலிக்க சங்கடமாக நின்றாள் அலமேலு. இதையெல்லாம் தூர இருந்து பார்த்துக் கொண்டிருந்த அசோக், பாட்டி தனம்மா அருகில் வந்தான்.

"பாட்டி உங்க புள்ள பாயாசத்துக்கு போடற முந்திரியை எண்ணிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறார். மாமா, ஏழைகளுக்கு அள்ளிக் கொடுக்கிற கை இல்லை. கிள்ளிக் கொடுக்கிற  கை. அவர் கிட்ட பணம் இருக்குது செலவு செய்கிறார். அலமேலு அத்தைகிட்ட குணம் இருக்குது. அதான் இரண்டு நாளா வந்து இந்த குடும்பத்து  வேலைகளை இழுத்துபோட்டுச் செய்துகிட்டு இருக்காங்க" என்று அழுத்தமாகவே சொன்னான்.

" பந்தல் போட்டு பக்குவமா ஏத்தன அவரை கொடியில பாவக்காய் காய்ச்சி தொங்கன கதையா, பொம்பளைங்க பஞ்சாயத்துக்கு ஆம்பள சிங்கம் நீ ஏன்டா நாட்டாமை பண்ண வரே?” என்று தனம்மா கேட்டார்.

 

டின் கணக்கில் அசடு வழிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் அசோக். சங்கவியும் அசோக்கை நன்றியுடன் பார்த்தாள். இந்த கண்கள் விடும் தூதை பொறாமையுடன் கவனித்தாள் புவனா.

 

அசோக்கே ஆட்களை வைத்து அழகாக தெரு அடைத்து பந்தல் போட்டான். பந்தல் போடும் ஆட்கள், பண்ணையாட்கள் அங்கு வந்தவர்கள் என 150 பேருக்கு மேல் இருப்பார்கள். அவர்களுக்கு காலை சிற்றுண்டி மதிய விருந்து சாப்பாடு தயாரிக்க வேண்டும். அலமேலு சங்கவியைத்  தவிர அனைவருமே கூட்டம் கூட்டமாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

வேலைகளுக்கு நடுவே சங்கவியை  கண்களால் மேய்ந்து கொண்டிருந்தான் அசோக். காரணம் சங்கவி அடிக்கடி கொல்லைப்புறம் சென்று தன் வயிற்றில் கை வைத்தபடி  சிறிது நேரம் அமர்ந்து விட்டுப் பிறகு வந்தாள். அசோக்கின் மனிதநேயம் மிக்க அறிவு, அவளுக்கு வயிற்றுவலி இருக்குமோ என உணர்த்தியது.

 

சட்டென மாயமான அசோக் எங்கேயோ ஓடிவிட்டான். சிறிது நேரம் கழித்து தானியக் கிடங்கில் இருந்து குரல் கொடுத்தான். "அத்தை ..அத்தை.. இங்கே வாங்களேன்” என்று காட்டுக் கத்து கத்தினான். அனைவரும் கூட்டத்தில் இருந்தனர். அலமேலு அடுப்படியில் வேலையாக இருந்ததால், "சங்கவி.. அசோக் கூப்பிடறான் பாரு. என்னன்னு கேளு" என்று சங்கவிக்கு கட்டளையிட்டு விட்டு வேலையில் மூழ்கினாள்.

"என்னங்க.. என்ன வேணும்?" என்று தானிய கிடங்கு வாசலிலேயே நின்று கேட்டாள். 

"சங்கவி.. திடீரென்று மழை வந்தால் பந்தலை மூடுவதற்கு கோணிப் பாய் இருக்கு, இங்கேதான் எங்கேயோ இருக்கு கொஞ்சம் தேடி கொடு" என்றான்.

 

சங்கவி நடுங்கிக்கொண்டே உள்ளே நுழைந்தாள். சங்கவி உள்ளே நுழைந்ததும் அருகில் வந்தான் அசோக். சங்கவியின் உடல் நடுங்கியது. கத்துவதற்கு வாயைத்  திறந்தாள். நாக்கு உலர்ந்து ஸ்ட்ரைக் பண்ணியது.

 

அங்கிருந்து உடனே சென்று விடலாம் என்று திரும்பிய சங்கவியை," அத்தை மவளே நில்லு. உள்ளே இளநீர் வெச்சிருக்கேன். யாருக்கும் தெரியாம குடிச்சிடு" என்று  சொல்லிவிட்டு மற்றவர்கள் பார்ப்பதற்கு முன் விருட்டென்று அங்கிருந்து சென்றான். 

 

தன் அம்மாவிடம் கூட சொல்லாமல் மறைத்த என் வலியை புரிந்து கொண்டு, இளநீர் கொடுத்த அசோக்கின் அன்பு அவள் உயிரை என்னவோ செய்தது. முதல் முறையாக அப்பாவைத் தவிர வேறு ஒரு ஆணிடம் நம்பிக்கை வந்தது. இதையெல்லாம் அசோக் உடன் வேலை செய்து கொண்டே அவன் அப்பா செல்வம் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனம் இதை தங்கமும் அவள் குடும்பத்தினரும் பார்த்திருக்கக் கூடாது என்று நினைத்து பயந்தார்.

 

அனைவருக்கும் மதிய விருந்து பரிமாறப்பட்டது. உணவு பரிமாறுவதற்கு அசோக்கின் நண்பர்கள் உடன் வந்திருந்தார்கள்.  பந்திப் பாய் விரித்து தலைவாழை இலை போட்டு உணவுவகைகள் வைக்கப்பட்டது. சங்கவியும் உடன் பரிமாறினாள். அசோக்கின் நண்பர்கள் கண்கள் அங்கேயே வட்டமிட்டது. சிறிது நேரம் இதை கவனித்த அசோக், ”புவனா நீயும் கூட வந்து உதவி செய்யக்கூடாதா?” என்று கேட்டான்.

"மாமா, வேலைக்கு தான் ஆட்கள் இருக்காங்களே. என்னால் வேலை செய்ய முடியாது மாமா" என்று மறுத்துவிட்டாள். 

"அவங்களை ஏன் தொந்தரவு பண்றீங்க. நான் பார்த்துக்கிறேன்" என்று அடக்கமாக சொன்னாள் சங்கவி.

"மத்தவங்க உன்னை பார்க்கறாங்க என்று தானே உன்னை இங்கிருந்து அனுப்ப நினைக்கிறேன்" என்று மனதிற்குள் மென்று விழுங்கினான்  அசோக். பண்ணையில வேலை செய்யும் பெண் ஆட்களும் உதவிக்கு பரிமாறிக் கொண்டிருந்தனர். இருந்தாலும் சங்கவி குனிந்து நிமிர்ந்து பரிமாறியதை, பசங்க ஓரக் கண்ணால் பார்ப்பதை அசோக்கால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

"சங்கவி நானும் அப்ப இருந்து பார்க்கிறேன். எல்லாத்தையும் கொட்டி கவிழ்த்து பரிமாறற, தெரியாத வேலைக்கு ஏன் வர? உள்ளே ஏதாவது வேலை இருந்தா பாரு" என்று கோபமாகக் கத்தினான் அசோக். அவமானத்தில் கூனிக்குறுகி உள்ளே ஓடினாள் சங்கவி.

 

அசோக்கின் நண்பர்கள் அவனை வியப்பாக பார்த்தனர். "டேய் ...மச்சான் என்னாச்சு? ஏன் அந்த பிள்ளைக் கிட்ட இப்படி கத்துற "? என்று கேட்டனர்.

 

அசோக் கோபப்பட்டதும், புவனாவின் மனதில் சந்தேகப் பாம்பு, படம் எடுக்க ஆரம்பித்தது.

 

( சிறகுகள் படபடக்கும் )