Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #04

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

maayapura series part 4

 

’எங்கேயோ பறந்து எதை எதையோ கொத்தித் தின்று ஊர் மேய்ந்த  காக்கா, உழைச்சுக் களைச்சு ஏமாந்த எருது முதுகுல ஏரோப்ளேன் ஓட்டுச்சாம்’ ங்கற  கதையா, ஊரிலிருந்து வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு சுறுசுறுப்பாக  வேலை செய்து கொண்டிருக்கும் சங்கவியை, வேலைக்காரி என சொன்னதும் கொடுமைக்கார அத்தைக்கும் லேசாக உறுத்தல் இருந்தது. 

 

‘என்ன செய்வது? அண்ணன் மகளை எதிர்த்து பேசினால் அண்ணன் கோபித்துக் கொள்வார்’ என பயந்து அமைதியாக இருந்தார் தங்கம்.

 

புவனா சொன்னதைக் கேட்டுக் கொண்டே அங்கே வேகமாக உள்ளே நுழைந்த அசோக், "உழைக்கறவங்க  வியர்வை மண்ணுல விழறதால, அவங்க  சீவி முடித்து சிங்காரிக்காட்டியும் அழகாகத்தான் தெரிவாங்க. அடுத்தவங்களை அதிகாரம் பண்ணி வாழற  கூட்டத்துக்கு உடம்பு முழுவதும் அண்டாக் கணக்கில் கொழுப்புதான் இருக்கும் புவனா" என்று பொதுவில் சொல்லி விட்டு, “அது யாருன்னு தெரியாமலே வேலைக்காரின்னு சொல்றே...?”என்று சிரித்தான்.

 

இதை கேட்டதும் எண்ணெய்யில் போட்ட பணியாரம் மாதிரி "அசோக் மாமா நான் ’அண்டாவா?’ என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?  என் அழகுக்கு என்னைக் கட்டிக்க நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு ஒரு கூட்டமே எங்க வீட்டு வாசல்ல காத்துகிட்டு இருக்காங்க தெரியுமா?” என்று குதித்தாள் புவனா.

"உங்க வீட்டு வாசல்ல இளிச்சவாயன்கள் காத்துகிட்டு இருக்கலாம். பித்தளைக்கு முலாம் போட்டா மாதிரி  நீ போட்டுகிட்டு இருக்கற உன்  நகைகளுக்காகத் தான் அவங்க இருப்பாங்க. அன்பா இருக்கறவங்களுக்கு புன்னகைங்கிற நகையே போதும்" என்று புவனாவை வெறுப்பேத்தினான் அசோக்.

 

இதுக்குமேல அமைதியா இருந்தா சோளக்காட்டில் நெருப்பு பொறி பட்டா மாதிரி ஆகிடும் நிலைமைன்னு  நினைத்துப் பதறிய தங்கம் "டேய் அசோக், வந்ததும் வராததுமா என்னடா மாமன் பொண்ணு கிட்ட வம்பளந்துகிட்டு இருக்கற"என்று அவனை அமைதிப்படுத்தினார்.

 

புவனா வெடுக்கென்று முகத்தை வெட்டி, சங்கவியை ஒரு பார்வை பார்த்து விட்டு விருட்டென்று உள்ளே ஓடினாள்.

 

கை கால் கழுவுவது போல கொல்லைப்  பக்கம் வந்து சங்கவியிடம் ரகசிய குரலில்  ”புவனா சொன்னதை எல்லாம் மனசுல வச்சிக்காத சங்கவி" என்று ஆறுதலாக பேசி விட்டு அன்பாய் ஒரு பார்வை வீசி விட்டுப் போனான் அசோக்.

 

வெளியில் சென்ற பெருமாளும் மணியும் வீடு வந்து சேர்ந்தார்கள். மாமன் மச்சான் நலன் விசாரிப்புகள், அலமேலுவிடம்  நலம் விசாரிப்புகள் என்று வீடு கல்யாணக் களை கட்டியது. 

 

மறுநாள் பந்தக்கால் நட்டு நலங்கு வைக்க வேண்டும். அதற்கு ஊராருக்குச் சொல்ல வேண்டும். வீட்டில் இருக்கும் சின்னப் பொண்ணுங்க  தான் போய் சொல்லிட்டு வருவார்கள். 

"கம்புக்கு களை எடுத்த மாதிரியும் ஆச்சு. தம்பிக்குப் பொண்ணு பார்த்தா மாதிரியும் ஆச்சு " என்கிற கதையாக  எங்கள் வீட்டிலும் திருமண வயதில் பெண்  இருக்கிறது என்று,  ஊராரும் உற்றாரும் தெரிந்து கொள்வார்கள் என்று இந்தச் சடங்கெல்லாம்  வைத்துள்ளார்கள்.

 

அன்று மாலை அலமேலுவை அழைத்த தங்கம் "நீயும் சங்கவியும் போய் ஊர் சொல்லிட்டு வாங்க" என்று சொல்லி வைத்தாள். அதற்குள் தங்கத்தின் அண்ணி நாகம்மா "என் மகள் புவனாவும் போகட்டும்" என்று சொன்னாள். புவனா "எனக்கு கால் வலிக்குது. என்னால் போக முடியாது" என மறுத்தும் வலுக்கட்டாயமாக ஊர் சொல்லக் கிளம்பிப் போகச் சொன்னாள் தங்கம். 

 

காரணம் தன் அண்ணன் மகளை அனைவரும் பார்க்கவேண்டும். அவளின் செல்வச் செழிப்பை எல்லாரும் பார்த்து வியக்க வேண்டும் என்பதற்காகத்தான் இது. 

 

சங்கவி, தான் கட்டியிருந்த பாவாடை தாவணியைச் சரி செய்தாள். "லைபாய்" சோப்பு போட்டு முகம் கழுவி, தலையைச் சீவி காலையில் வைத்த கனகாம்பரத்தையே மீண்டும் வைத்து எளிமையாக கிளம்பினாள். 

 

எளிமையாக இருந்தாலும் பிறர் கண்களைக் கவரும் அழகியாக  இருந்தாள். சலவைக்குப் போய் வந்த நிலவு போல. புவனா நேர்மாறாகக் கிளம்பினாள்  ‘சின்தால்’ சோப்பு போட்டுக் குளித்துவிட்டு, சும்மா கமகமன்னு, வீட்டிலிருந்து கட்டிவந்த மல்லிப் பூச் சரத்தை யாருக்கும் கொடுக்க மனமில்லாமல், தானே வைத்துக்கொண்டாள். என்ன பூவை விட முடி குட்டையாக இருந்தது.

 

தாமரையைச் சுற்றிலும் முத்துச் சலங்கை வைத்த அழகான வெள்ளி குங்குமச் சிமிழைக் கையில் வைத்துக்கொண்டு, ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, குங்குமம் கொடுத்து  மறு நாள் விசேஷத்திற்கு வரச் சொல்லிவிட்டு வந்தனர். நிறைய வீடுகளில் சங்கவி யாரென அலமேலுவைக் கேட்டனர். அலமேலு அடிக்கடி அண்ணன் வீட்டிற்கு வருவதால் அவரை அனைவருக்கும் தெரிந்திருந்தது. சில வீடுகளில் புவனாவையும் சங்கவியையும் ஒப்பிட்டுப் பேசினார்கள்.

 

தங்கம், தன் அண்ணன் மகள் புவனாவைத் தன் இரண்டாவது மகன் அசோக்குக்கு மணம் முடிக்கப் போகிறார். அண்ணன்காரன் திருமணம் முடிந்ததும், அதே மேடையில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது என்றெல்லாம் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த விஷயம் அலமேலுவுக்கோ சங்கவிக்கோ தெரியாது.

"சங்கவி அழகா இருக்கா, குணமாய் இருக்கா, இவளையே பேசி முடிக்கலாம்" என்று சிலர் வாயாலேயே பந்தல் போட்டனர். "தங்கத்தைப் பற்றி தெரியாதா உனக்கு?  ரசத்தில் இருக்கும் மிளகாயை எடுத்துவைத்து, கார குழம்பு வைக்கிற கஞ்சகி. பணமோ பணம்ன்னு அலையறவ" என்று சிலர்  வாய்ப் பந்தலில் கொடியை ஏற்றினர். 

 

ஒரு வழியாக இவர்களின் ஊர்வலம் முடிந்து, வீடு சேரும் போது இருட்டி நீண்ட நேரம் ஆகியிருந்தது. வீட்டிற்குள் நுழைந்த சங்கவி, அங்கே 12 வயதில் ஒரு சிறுமியும்  பத்து வயதில் ஒரு பையனும் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவர்கள் யாராக இருக்கும்? என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே 

"வாம்மா கோமளம்? எப்படி இருக்க? மாப்பிள்ளை வந்திருக்கிறாரா?” என்று அன்புடன் விசாரித்தார் அலமேலு.

"நல்லா இருக்கேன் அத்தை. அவருக்கு லீவு இல்லை. நேராக கல்யாணத்திற்கு வந்துவிடுவார்" என்று கூறினாள் விசேசத்துக்கு வந்திருந்த தங்கத்தின் மூத்த மகள் கோமளம்.

 

இவர்களையே பார்த்துக்கொண்டிருந்த சங்கவியிடம் "என்னடி அப்படி பார்க்குற? இது செல்வம் அண்ணனோட மூத்தப்  பெண் கோமளம்” என்றாள் அலமேலு.

 

பளிச்சென்று இருந்த கோமளமோ  "இதாரு அத்தை. உன் மவ சங்கவியா? பார்க்க நல்லாத்தான் இருக்கா. படிக்கிறாளா? கல்யாணத்துக்கு வளர்ந்து நிக்கிறா? காலத்தோட முடிச்சிட வேண்டியதுதானே?? என்று அவளது யூகங்கள் கேள்விகளாக வந்தது. 

"பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சை எழுதி இருக்கா. எங்க தகுதிக்கு ஏற்ற மாதிரி நல்ல இடமாக வந்தால், முடித்துவிட வேண்டியதுதான்” என்று என்னவோ எல்லாம் நாளைக்கே நடக்கிற மாதிரி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். 

"அம்மா நான் காலேஜ் போய் படிக்கணும். இப்ப கல்யாணமெல்லாம் வேண்டாம்" என்று சங்கவி சிணுங்கினாள்.

"இந்த 12 ஆம் படிப்புக்கே மாப்பிள்ளைய, எங்க போய்த் தேடுறதுன்னு தெரியலை. எல்லாரும் பண்ணையம் பண்றவங்களா இருக்காங்க" என்று நீட்டி முழக்கினாள் அலமேலு.

"எவடி அவ காதுல கயிறு திரித்து, ஆகாசத்துல வலையை பின்னி, தரையில மீனப் பிடிக்கிறவ? வந்திருக்கற சொந்த பந்தங்களுக்கு நாக்குக்கு ஒனவா  சமைத்துப் போடறதை விட்டுட்டு, வீண் கதை பேசுறவங்க”ன்னு தனம்மா சத்தம் போட்டதும் அலமேலு தாமாக அடுக்களைக்குள் சென்றாள்.

 

அவசர அவசரமாக இரவு நேர உணவு தயாரித்து அனைவருக்கும் சாப்பாடு போட்டு வேலைகளை முடிப்பதற்கும், சுவர்க் கடிகாரத்தில் மணி 11 முறை மணி அடிப்பதற்கும் சரியாக இருந்தது.

"அலமேலு காலையில ரெண்டு மணிக்கெல்லாம் எழுந்து எல்லாரும் குளிப்பதற்கு வெந்நீர் போட்டுவிடு, நலங்கு வைக்க வர்றவங்களுக்கு சாப்பாடு செஞ்சுடு" என்று என்னவோ ஓட்டலில் ஆர்டர் கொடுப்பது போல சொன்னாள் தங்கம்.

"அம்மா எல்லாரும் போல, நாமளும் கல்யாணத்தன்னைக்கு  வந்திருக்கலாம். ஏன்தான் முன்னாடி வந்து இப்படி கஷ்டப்படுறோமோ தெரியலை?” என்றாள் சங்கவி.

"செல்வம் அண்ணனுக்காக தான் சங்கவி இதையெல்லாம் செய்றோம்.  இங்க நாம படுற கஷ்டத்தை எல்லாம் அப்பாக்கிட்ட சொல்லாத.". என்றாள் அலமேலு.

"அம்மா உனக்குப் புரியுதா? நாம ஏழைன்னு  எப்பவாவது அவங்க சொல்லிக்  காட்டினா  பரவால்ல. பேசுற ஒவ்வொரு சொல்லுமே அப்படித் தான் இருக்கும்மா" என்று வேதனையுடன் சொன்னாள் சங்கவி.

"நமக்கு இப்ப சொந்தமா 4 காணி இருக்குன்னா, அதுக்கு செல்வம் அண்ணா தாம்மா காரணம். அவர் நிலத்தை குத்தகைக்கு பயிர் செஞ்சு,  20 வருஷமா கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, அவர் கிட்டக் கொடுத்து வந்தோம். அவர் பெரிய மனசு பண்ணி அந்த நிலத்தை நமக்கே எழுதிக் கொடுத்திட்டார்.  கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளே  ஏமாத்தற இந்த காலத்துல,  நமக்கு இதை எவ்வளவு பெரிய உதவியா செஞ்சிருக்கார். அதுக்கு நான் நன்றியோட இருக்கேன். அதனாலதான் அண்ணி என்ன மாதிரி திட்டினாலும் பொறுத்துகிட்டு, அண்ணனுக்காக வேலை செய்யறேன்." என்று பாசமலர் சாவித்திரி மாதிரி பேசினாள் அலமேலு.

”என்ன இருந்தாலும் கஞ்சோ கூலோ நம்ம வீட்ல இருக்கிற மாதிரி நிம்மதி இங்க இல்லம்மா. உங்க அண்ணனுக்கு நன்றி செய்யணும்னா வெளில எங்கயாவது வேலை செய்து, அதில் கிடைக்கிற பணத்தில் ஏதாவது செய்யலாம். நீ இந்த வயசுல கஷ்டப்படுறதையும், மத்தவங்கக்கிட்ட அவமானப்படுறதையும் என்னால தாங்கமுடியலம்மா?” என்று சொல்லும் போதே சங்கவியின் விழிகளில் ஈரம் கோத்துக்கொண்டது..

"விடு சங்கவி, கல்யாணம் முடிஞ்சதும் நமக்கு இங்கே என்ன வேலை இருக்கு? ஊரைப்  பார்க்கப் போக வேண்டியதுதான்" என்று சங்கவிக்கு ஆறுதலாகப் பேசினாள் அலமேலு. இவர்களின் இந்த உரையாடல் முழுதும், அடுத்த அறையில் இருந்த அசோக்கின் காதில் அப்ப்பட்டமாக விழுந்துகொண்டுதான் இருந்தது. அவன் இறுக கண்களை மூடிக்கொண்டான்.

 

அடுக்களை அருகே இருந்த அறையில் மகளுடன் உறங்கச் சென்றாள் அலமேலு. படுக்கையில் படுத்த பின்னர், அலுமேலுவுக்குத் தெரியாமல் சங்கவியும், சங்கவிக்குத் தெரியாமல் அலமேலுவும், கண்ணீர் பதுமையாக மாறி இருந்தனர். 

 

அடுத்த நாள்  நடக்கப் போகும் விதியின் விளையாட்டை யார் அறிவார்?

 

(சிறகுகள் படபடக்கும் ) 
 

 

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #03