Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #17

Published on 04/04/2022 | Edited on 04/04/2022

 

maayapura part 17

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

வரிசையாய் ஊர்ந்து  செல்லும் எறும்பு கூட எதிரில் வரும் எறும்புக்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்லும். விண்ணில் பறந்து செல்லும் பறவை கூட தன்னுடன் பறக்கும் பறவைகளுக்கு வழிகாட்டுவதற்காக முதலில் சிறகை விரித்து காற்றின் திசையை எளிதாக்கும். அதில் மற்ற பறவைகள் பறந்து செல்லும். முதல் பறவை சோர்ந்ததும் வேறு ஒரு பறவை வழிகாட்டும்.

 

அதே போல குரங்கு இனத்தில் எந்தக் குரங்கும் இறந்து கிடப்பதை நம்மால் பார்க்க முடியாது. காரணம் இறந்த குரங்கை அதன் இனத்தைச் சேர்ந்த குரங்குகள் ஏதோ ஒரு புற்றின் அருகில் இழுத்து சென்று போட்டு மண்ணை மூடிவிடும். கரையான்கள் அதன் மீது புற்று கட்டி விடும்.

 

பெண் யானைகள் பிரசவ வலியில் துடிக்கும் போது ஆண் யானைகள் கூட்டமாக உடன் இருந்தாலும், அரண் போலப் பாதுகாப்பாகத் திரும்பி நின்று கொள்ளும். ஐந்தறிவு உள்ள விலங்குகள் கூட தன் இனத்தை அழிக்க முன்வருவதில்லை. மனிதன் மட்டும்தான் பிறரை அழித்து தான் வாழ நினைக்கிறான். மன்னராட்சிக் காலத்தில் இருந்து  மக்கள் ஆட்சிக் காலம் வரை, பதவிக்காக எத்தனை எத்தனை யுத்தங்கள், சதித்திட்டங்கள்... அத்தனையும் தாண்டி மனித இனம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 

இந்தத் துர்குணங்களுக்கு கண்ணுசாமியும், மணியும் மட்டும் விதிவிலக்கா என்ன? கண்ணுசாமி மாமா அசோக்கிற்கு சகுனி மாமாவாக மாறிவிட்டார். பாசமலர் மணி பாகப்பிரிவினை மணியாக மாறியாகிவிட்டான். 

 

எனவே, மாமாவும், அண்ணனும்  தன் அருகில் வருவதைப் பார்த்ததும் லேசாக  நெளிந்தான் அசோக். ஊர்க்காரர்கள் மத்தியில் தன் மாமனார் குடும்பத்தை அசிங்கப்படுத்தி விடப்போகிறார்கள் என்று உள்ளுக்குள் பயந்தான்.

"எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த வீட்டில் வாழ வந்திருக்க?" என்று மணி அசோக்கிடம் கோபமாக கேட்டான்.

"உன்   தம்பிங்கற உரிமையிலும், இந்த வீட்டில் நானும் பிறந்தவன்தான் என்ற எண்ணத்திலும் வந்திருக்கேன்" என்று அழுத்தமாகவே பதில் சொன்னான் அசோக்.

" ஏம்பா வீட்டில் கூடத்தில் வைத்துப் பேச வேண்டியதை எல்லாம், கூட்டத்தில் வைத்துப் பேசிகிட்டு இருக்கியே... உள்ள வாங்க பா" என்று ஒரு பெரியவர் சொல்லவும்,  தங்கம் ஆரத்தியுடன் வருவதற்கும் சரியாக இருந்தது. ஆரத்தி எடுத்து முடித்து உள்ளே வலது காலை வைத்து போகும்போது சங்கவிக்கு பயத்தில் வியர்வை கங்கையானது. 

 

இவர்களைப் பார்த்ததும் தனம்  பாட்டி முகத்தை அருங்கோணம் ஆக்கி , அதைத் தோள்பட்டையில் இடித்து ஒரு வட்டம் ஆக்கினாள். மூத்த மருமகள் மல்லிகா, தனக்கும் இந்தக் குடும்பத்திற்கும் நூறுகாத தூரம் என்பது போல ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தாள்.

 

வெளியில் சென்ற செல்வம், அசோக்கையும் சங்கவியையும் பார்த்ததும்  உற்சாகமாக "வாங்க .. வாங்க" என்று  வரவேற்றபடி, உள்ளே நுழைந்தார். பெருமாள் பொண்ணுக்கு வாங்கிய சீர் செனத்தியை எல்லாம் தோள் மீது சுமந்தபடி, எடுத்துவந்து கூடத்தில் வைத்து, ஒரு தட்டில் பழங்களை எல்லாம் அடுக்கி வைத்து சம்பந்திக்கு எடுத்து வந்திருந்த துணிமணிகளை எல்லாம் வைத்துக் கொடுத்தார்.

" சின்னாளம்பட்டியில தறி போட்டு காஞ்சியில் கடை போட்டு, தகதகக்கும் பொன் ஜரிகையில பொட்டி  நிறைய பட்டு இருக்கு. உன் சீரான பட்டுக்கு ஒன்னும் பல்லை இளிக்கலை" என்று தனம் பாட்டி வழக்கம்போல வார்த்தை ஈட்டியாலே  குத்த, பொண்ணைப் பெத்தவர்கள் மனதில் அந்த ஈட்டி மோதியது. ஆனாலும் சகித்துக்கொண்டு  பெருமாளும்,அலமேலுவும் புன்னகைத்தபடி நின்றனர்.

 

வந்தவங்களுக்கு வேண்டா வெறுப்பாக காபித் தண்ணி கொடுத்தாள் தங்கம். "நடந்தது நடந்து போச்சு. இந்த சின்னஞ் சிறுசுகள் சந்தோஷமாக வாழணும். பெரிய மனசு பண்ணி ஏத்துக்கம்மா" என்று ஊர் பெரியவர்கள் சொன்னதும், ”இனிமே என்ன பண்ண முடியும். அதான் தாலி கட்டியாச்சே. கண்ணாத்தா வாழ்க்கை கண்ணீரில் கரைஞ்சுதாம், பொன்னாத்தா  வாழ்க்கை பொலம்பியே போச்சுதாங்கற கதையாக இருக்கு எங்க நிலமை” என்று படபடவென்று  பொரிந்தாள் தங்கம்.

 

சொந்த பந்தம் எல்லாம் அறிவுரை சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். பெருமாளும் அலமேலுவும் மகளைப் பிரிய முடியாமல், கண்ணீர் விட்டு நின்றனர். சங்கவியும் சிங்கத்தின் குகைக்குள் மாட்டிய மான் போல கலங்கினாள். எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் சிலையென மகளிடமும் மருமகனிடமும் விடைபெற்று நடந்து சென்றனர் சங்கவியின் பெற்றோர்கள். 

"என் மருமவ எடுத்து வந்த சீரை அடுக்கவே இங்கே இடமில்லை., உன் சீரை எல்லாம் எடுத்துட்டு போய், தட்டு முட்டு சாமான் போட்டு வச்சிருக்கற அறையில  வச்சுக்கோ. அங்கேயே  நீங்களும் தங்கிக்கங்க” என்று வெறுப்பாக சொன்னாள் தங்கம். மனசுல தான் இடம் கிடைக்கலை வீட்டிலாவது இடம் கிடைச்சுதே என்ற ஆறுதல் சங்கவிக்கு.

"டேய்... அசோக், பத்து நாளா பருத்திக் காட்டுக்குத்  தண்ணி பாயாம இருக்கு. முதல்ல போய் என்னன்னு பாரு" என்று சொல்லிட்டு, தன் சொகுசு அறைக்குச் சென்றுவிட்டான் அண்ணன்காரனான மணி. மணியின் மனைவி மல்லிகா ஏற்கனவே தலைவலி என்று அறைக்குள் போயாச்சு. அசோக் வயக்காட்டுக்கு போவதற்குக்  கிளம்பினான். வழியனுப்ப வெளியே வந்த சங்கவியின் கைகளை அழுத்தமாகப் பற்றினான். அந்த அழுத்தம் ஆயிரம் உணர்வுகளைச் சொன்னது. "நான் இருக்கிறேன். உடைந்து விடாதே" என்று கண்களால் உணர்த்தி விட்டுக் கிளம்பினான்.

 

சங்கவி வேலையெல்லாம் முடித்துவிட்டு அசோக்குக்கு கேரியரில் சாப்பாடு கட்டிக்கொண்டு இருந்தாள். அங்கு வந்த தங்கம், "என்ன பண்ற? இந்த வீட்ல என் மூத்த புள்ள சாப்பிட்ட பிறகுதான் மத்தவங்க சாப்பிடணும்.  துரை.. அதான் உன் புருசன்... கலெக்டர் ஆபீசில் உத்தியோகம் பார்க்கறான் பாரு. பெருசா, கேரியர்ல சாப்பாடு எடுத்துட்டு போற" என்று கேரியரைப் பிடுங்கி உள்ளே வைத்தாள், தன் பெயருக்குச் சம்மந்தம் இல்லாதவளாகத் தங்கம்.

 

காலையில் வயலுக்குப் போன அசோக், வியர்வை வாடையுடன் மதியம் மூன்று மணிக்கு தான் வீட்டுக்கு வந்தான். அதுவரை சங்கவி சாப்பிடாமல் காத்திருந்தாள். அசோக்  வந்ததும், ஆசை ஆசையாக அவள் வைத்த அயிரை மீன் குழம்பைப் பரிமாறுவதற்கு சட்டியைத் திறந்தால், அதில் ஒன்றிரண்டு முள் மட்டும்தான் இருந்தது. மீன்களைக் காணோம்.

"அத்தை குழம்புல  மீன் இல்லைங்க.  வெறும் குழம்பு தான் இருக்கு" என்று சங்கவி பயந்து கொண்டே சொன்னாள். "க்கும்..கொக்கு  வந்து தூக்கிட்டு  போய் இருக்கும். பெரியவனுக்கு மீனுன்னா உசுரு. அதான் அவன் சாப்பிட்டு மீந்ததை, நைட்டுக்கும் கொஞ்சம் தனியா எடுத்து வச்சிருக்கேன்" என்று தெனாவெட்டாகவே பதில் சொன்னாள் தங்கம். எதுவும் பேசத் தோன்றாமல் அசோக்கும், சங்கவியும் மீந்ததை சாப்பிட்டனர்..

"த.. பாரு சங்கவி என் மூத்த பையன் கண்ணுல அதிகம் பட்டுடாத. அவன்  உன்மேல கொலைவெறியில் இருக்கான்" என்று வீட்டுக்குள்ளேயே சங்கவியைத் தள்ளிவைத்தாள் தங்கம். ஒரு வேலைக்காரிக்கு கிடைக்கும் மரியாதை கூட சங்கவிக்கு அந்த வீட்டில் இல்லை. இரவு வேலைகளை முடித்துவிட்டு 10 மணிக்கு படுக்கை அறைக்குள் அசோக்கும் சங்கவியும் வந்தனர்.

" சங்கவி, உனக்கு என்னால பூ கூட வாங்கி தர முடியல" என்று வருத்தப்பட்டான் அசோக். "விடுங்க.. மாமா நீங்க உழைக்கிற இந்த வியர்வை வாசத்துக்கு  முன்னாடி  பூ வாசம் தோத்துப் போயிடும்" என்று ஆறுதல் சொன்னாள் அவள். இவர்கள் இதமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே இவர்கள் அறைக்கதவு "டம..டம" என்று அதிர்ந்தது.

 

(சிறகுகள் படபடக்கும்)