மாயப் புறா - முந்தைய பகுதிகள்
"நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடிவு பண்ணினால் வீட்டை விட்டு வெளியே போங்க" என்று அதட்டலாக கோபமாக வந்த அந்தக் குரலை கேட்டதும், அசோக்கும் சங்கவியும் மிரண்டு போனார்கள். இதுவரை கேட்டிராத இடி முழக்கம் அது. அனைத்திற்கும் வாயை திறக்காமல் அமைதியாக இருந்த மாப்பிள்ளை மணிதான் அப்படிக் குரல்கொடுத்தான். அதுவரை மணவறையில் இருந்ததால் மௌனமாக இருந்த மணி, தம்பி அசோக் மீதான கோபத்தை இப்போது கொட்டினான்.
திருமணம் என்பது ஒரு மஞ்சள் கயிறும் அரை பவுன் தங்கமும் தான் என்று நினைத்த அசோக்கின் அறியாப் பருவம் அங்கே கூனிக்குறுகி நின்றது. வீட்டை விட்டு வெளியே போங்க என்ற வார்த்தையை கேட்டதும் அவன் அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்து நின்றான். வீட்டிற்குத் தெரியாமல் இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குச் சென்று வந்தால், கன்னத்தில் அறை விட்டு, வீட்டில் சேர்த்துக்கொள்வார்கள். அதுபோல இப்போதும் எளிதில் மன்னிப்புக் கிடைக்கும் என்று நினைத்த அசோக்கிற்கு பதட்டம் அதிகமானது.
12 வயதில் ஆலமரத்தடியில் மறைந்து கொண்டு, துண்டு பீடி பிடித்ததற்கு அப்போது அம்மாவிடம் கரண்டி காம்பால் சூடு வாங்கிய அனுபவச்சூடு போல் இப்போதும் அவனுக்கு வலித்தது. 16 வயதில் கோடி வீட்டு மிலிட்ரிக்கார மாமா, மறைத்து வைத்திருந்த ரம்மை இருமல் மருந்து என்று குடித்துவிட்டு, வீட்டில் விளக்குமாற்று பூஜையை அனுபவித்தானே, அது போன்ற ரணம் இப்போதும் ஏற்பட்டது.
என்னையும் சங்கவியையும் வீட்டில் சேர்த்துக் கொள்வார்களா? இல்லை என்றால் என்ன செய்வது? எங்கே போவது?.என்று அவன் மனம் பல்வேறு யோசனைகளில் தாவியபடியே இருந்தது.
எந்தச் செயலைச் செய்யும்போதும் அதனால் என்ன பின் விளைவுகள் வரும் என்று எல்லா மனிதர்களும் யோசித்துதான் முடிவு எடுப்பார்கள். என்ன? அவர்கள் கோணத்தில் மட்டுமே யோசிப்பார்கள். மற்றவர்கள் கோணங்களில் பலராலும் யோசிக்க முடிவதில்லை. அந்த சூழ்நிலையில் தான் விதியின் மீது பழி விழுகிறது. சங்கவி, அசோக் இருவர் மனநிலையும் தண்ணீரில் விழுந்த எறும்பு கரைசேரத் தத்தளிப்பது போல் பரிதவித்தது. குழப்பமும் கவலையும் பலமடங்கு இருந்தது.
அசோக், தன் அப்பாவிற்கு அடுத்த இடத்தில் அண்ணன் மணி மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தான். அதனால் அண்ணனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்து நின்றான். தங்கத்தால் தன் பெரிய மகன் மணியை மீறி எதுவும் பேச முடியாது. ஏனெனில் அவன்தான் குடும்பத்தின் மாலுமி என்று ஒரு மாயையை அவள் மனதில் உருவாக்கி வைத்திருந்தான் அவன். அதனால் பெற்ற மனம் தவித்தது.
மணி எடுக்கும் முடிவுகளுக்கு எல்லாம் தலையாட்டியே பழகிய அம்மாக்காரியான தங்கத்தின் தலை, இப்போது ஆமாம் என்று ஆமோதிக்கவும் முடியாமல், அசோக் வெளியே போக வேண்டாம் என்று மறுதலிக்கவும் முடியாமல் கண்ணீருடன் பூமியைப் பார்த்தது.
"மணி, அவன் செய்தது தப்புதான். அதுக்காக அவனை ஏம்பா வீட்டை விட்டு வெளியே போகச் சொல்றே" என்று அப்பாக்காரர் செல்வத்தின் குரல் கெஞ்சியது. எப்போது ஒரு குடும்பத் தலைவரின் குரல் கெஞ்சுகிறதோ அப்போது அந்த வீட்டில் பாரபட்சம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.
அசோக் கடும் உழைப்பாளி. மணியும் வயல் வேலைகளை எல்லாம் பார்த்துக் கொள்வான், இருந்தாலும் அசோக் அளவிற்கு அவனுக்குப் பண்ணையாட்கள் மத்தியில் பெரிதாக பேர் இல்லை. அதுவும் இல்லாமல் மணி தன் சிறு வயதில் இருந்தே இந்த மொத்த சொத்தையும் தான் மட்டுமே ஆள வேண்டும் என்று மனக்கோட்டை கட்டி வைத்திருந்தான். ஆனால் அதை வெளியில் காட்டாமல் நல்லவனாக நடித்து கொண்டிருந்தான்.
நல்லவனாக மட்டுமே வாழ்வது கொஞ்சம் சிரமம். இருந்தாலும் வாழப் பழகிவிட்டால் கடைசி வரை அப்படியே வாழ்ந்து விடலாம். கெட்டவனாக வாழ்வது ரொம்பவும் சுலபம். இதில் மற்றவர்கள் பார்வைக்கு நல்லவனாகவும் உள்ளே வில்லனாகவும் வாழும் இரட்டை வாழ்க்கை இருக்கிறதே... அதுபோல வாழ்வது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். அப்படி ஒரு வாழ்க்கையைத்தான் இவ்வளவு நாட்கள் வாழ்ந்து கொண்டிருந்தான் மணி. இப்போது அசோக்கிற்கு எதிராக ஒரு பெரிய துருப்பு கிடைத்துவிட்டது. விட்டுவிடுவானா?
"அப்பா நீங்க அவனுக்கு வக்காலத்து வாங்காதீங்க. மாமாவுக்கு இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை பண்ணிட்டு எப்படி நிற்கிறான் பாருங்க. எப்படிப்பா அவன் முகத்தில் விழிப்பேன்? எனக்கு அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை" என்று, மாமாவுக்கு ஆதரவாக பேசினான் மணி.
அப்பதான் மாமாவின் ரைஸ் மில்லில் இடம் கிடைக்கும் என்று நினைத்தான். வேறு வழியில்லாமல் அனைவரும் மௌனமாக இருக்க, அசோக் சங்கவியின் கையை பிடித்துக்கொண்டு இரண்டடி நகர்ந்தான். புனிதா ஓடி வந்து அசோக்கைக் கட்டிப் பிடித்துக் கொண்டு "டேய்.. தம்பி, வீட்டை விட்டு வெளியே போகாதடா. வெளில போய் என்னடா செய்வே... அதுவும் சங்கவி பச்ச மண்ணு. அது என்ன பண்ணும்?" என்று கதறினாள்.
"எங்கப் போறதுன்னு தெரியலைக்கா. நான் அதைப் பத்திக் கவலைப் படலை. உங்களை எல்லாம் விட்டுட்டு என்னால் எப்படி இருக்க முடியும்னு தெரியலக்கா" என்று அழுதான் அசோக்.
குடும்பம் என்கிற அழகான கூட்டுக்குள், தனக்கு ஜோடியாக ஒரு பறவையைச் சேர்க்கலாம் என்று நினைத்தானே தவிர, அந்தக் கூட்டைப் பிரிக்க அவன் நினைக்கவில்லை. காகத்தின் கூட்டுக்குள் குயிலை வைத்தது போல, அனைவரும் விரட்டி அடிக்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் நிலைகுலைந்த நிலைக்கு ஆளானான் அசோக்.
அப்போது ஆவேசமாக எழுந்துவந்த மணி "அக்கா, .என்னக்கா ஊர்ல இல்லாத தம்பிக்காக இப்படி உருகற? அவன் எவ்வளவு பெரிய காரியம் பண்ணி வச்சிருக்கான். அவனுக்குப் போய் சப்போர்ட் பண்றியே. அவனுக்கு நீ சப்போர்ட் பண்றதா இருந்தா, நீயும் அவன் கூடவே போக வேண்டியதுதான்" என்று அக்காவின் பாசத்திற்கு கேட் போட்டான் மணி. வேறு வழியில்லாமல் விசும்பலுடன் நின்றார்கள் அம்மா தங்கமும் அக்கா புனிதாவும்.
"ஊரையெல்லாம் சுத்தின ஊமைக் கோட்டான், உல்லாசமாக உட்கார்ந்துக்கிட்டு, ஒய்யாரக் கொண்டையிலே ஈறும் பேணும்ங்கிற மாதிரி, இந்த சிங்காரி சங்கவி என் மாமாவை வளைச்சுப் போட்டுட்டா" என்று புவனா புலம்ப ஆரம்பித்தாள். இந்தப் புலம்பலைக் கேட்டதும் அசோக், அவளிடம் திரும்பி, "புவனா இவ்வளவு நாள் நாம ஒன்னாத் தானே வளர்ந்தோம். என்னிக்காவது எந்த சந்தர்ப்பத்திலாவது உன் மேல ஆசை இருக்கிற மாதிரிப் பேசி இருக்கேனா? இல்ல நடந்துதான் இருக்கேனா? உறவு முறையில் மாமான்னு கூப்பிடுவ. இது தவிர என் மனசுல அந்த மாதிரியான எண்ணம் ஒரு துளியும் இல்லை. புவனா நீ படிச்சவள். புரிஞ்சுக்க. என்னை மீறி உன் மனசுல தவறான எண்ணத்தை நான் விதைச்சிருந்தா என்னை மன்னிச்சிடு” என்று மனதார மன்னிப்புக் கேட்டான் அசோக்.
"எனக்குன்னு ஒரு எண்ணம் ஆசையெல்லாம் இருக்காதா மாமா? இவ்வளவு நாளா, நான் அந்த எண்ணத்தில் தானே உங்கிட்டப் பேசினேன். உனக்குத் தெரியும்ல்ல. அப்ப நீ சொல்லியிருக்கலாமே.. எனக்கு உன்னை பிடிக்கலைன்னு சொல்லி இருக்கலாமே? உறவுக்காகச் சகிச்சிக்கிட்டு இருந்தியா?”என்று புவனா கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வ்து என்று தெரியாமல் திணறினான் அசோக். கோழைத்தனமாக பல நேரங்களில் நாம் மௌனமாக இருந்துவிட்டு திடீரென்று வீரமாக முடிவெடுக்கும் போது, மௌனமாக இருந்த அந்த நொடிகள் நம்மை தோட்டாக்களாக வாழ்நாள் முழுவதும் துளைத்தெடுக்கத் தான் செய்யும்.
அந்த வேதனையுடன் நடைபிணமாக அங்கிருந்து நகர்ந்தான் அசோக். சிறிது தூரம் அசோக்கின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்த சங்கவி, வாசல் வரை வந்தாள்.
திடீரென்று அசோக்கின் கைகளை உதறிவிட்டு மீண்டும் மண்டபத்திற்கு உள்ளே வேகமாக ஓடினாள். அசோக் செய்வதறியாது தனி மரமாக நின்றான்.
(சிறகுகள் படபடக்கும்)