'அருகில் பள்ளி உள்ளது வாகனங்களை மெதுவாக செலுத்துங்கள்; பள்ளிக்கு அருகில் வாகனங்களை நிறுத்தாதீர்கள்' என்ற வாசகத்தைக் கடந்து, நீ சொல்லி நான் என்ன கேட்பது என்ற மனோபாவத்துடன் நின்றது அந்த கருப்பு நிற காண்டஸா, உள்ளே இருந்தவனின் கண்கள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தன. மரங்கள் காற்றுக்கு மெல்ல அசைந்தன. இரண்டு பறவைகள் ஏதோ பெரும் சப்தத்தை எழுப்பிக் கொண்டு இருந்தது. ஏதோ குடும்பப் பிரச்சனை போலும். நாம் அதை ஒதுக்கிவிட்டு காரினுள் இருப்பவர்களைக் கவனிக்கலாம்.
இருவரும் தங்கள் முகத்தை கருப்பு கண்ணாடி போட்டு மறைத்திருந்தார்கள் கூடவே கரோனாவிற்காக இல்லையென்றாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக முகக்கவசம். காத்திருப்பு துவங்கியது. இது எதனால்? காதலிக்காகவா? அவளின் இதழணைப்பிற்காகவா? கண்ணாடியின் விளிம்பைத் தாண்டி அவர்களின் கண்களில் வழியும் குரூரத்தை பார்த்தால் அப்படியா தெரிகிறது. அது மீனைத் தேடி அலையும் கொக்கின் தீவிரம், மேகத்தின் உச்சியில் இருந்து தரை தவழும் பாம்பைப் பார்த்த பருந்தின் தீவிரம்.
உறை பிரிக்காத கத்தியின் முனை இரத்தத்துளிகளை ருசிக்கத் தவித்து காத்திருப்பது போல அவனும் காத்திருந்தான். தடுப்புச்சுவரின் மேலிருந்து எட்டிப்பார்த்த சிறு செடியும் நடக்கும் பாதகத்திற்குச் சாட்சியாய் காத்திருந்தது.
சீருடையணிந்த பட்டாம்பூச்சிகள் போல் மாணவர்கள் வெளியே வரத்தொடங்கினார்கள். அந்த தெரு முழுவதுமே சற்று நேரத்திற்குள் அழகானது. எதிர்சாரியில் முளைத்த சிறுகடையில் ஐஸ்கீரிமும், சேண்ட்வெஜ்ஜீம் பரபர விற்பனையில், சிலர் முனைப்பாய் பாடம் பற்றியும், சிலர் முனைப்பாய் பக்கத்தில் நின்றிருந்த மாணவிகளைப் பற்றியும் கலாய்த்து சிரித்துக் கொண்டிருக்க, நாங்களும் உங்களுக்குச் சளைத்தவர்கள் இல்லையென்றது அந்தப்பக்கமும். அவன் பள்ளியின் வாசலில் இருந்து வெளிவரும் மாணவ மாணவியர்களின் முகங்களை வெகுவாய் ஆராய்ந்தான்.
"என்ன இங்க கலாட்டா....! ம்...! போங்க" என்று இருபுறமும் விரட்டிக் கொண்டு இருந்த வாட்ச்மேனை, "இவனை ஒரு நாள் பொளீர்ன்னு போடணுடா" என்று ஒரு மாணவன் கமெண்ட் அடிக்க அங்கே கொல்லென்று சப்தம் வந்தது.
"என்னடா கவர்மெண்ட் ரிவிஷன்லே மார்க் இப்படியாடுச்சி ?"
"ஆமா ஆன்லைன் ஆஃப்லைன்னு மாத்திகிட்டே இருந்தா நமக்கும் எழுத ஒரு மூடு வரவேண்டாமா? விடு அடுத்த ரிவிஷன்லே பார்த்துக்கலாம்.ரொம்ப தைரியம்டா உனக்கு எங்கப்பா டின்னு கட்டிடுவாரு?"
"அங்கிள் உங்க ஃபோன் இருந்தா கொடுங்களேன்... அம்மா இன்னமும் வரலை பேசணும்."
வாசலில் பிள்ளைகளுக்காக காத்திருக்கும் பாதிபேர் முகம் முழுவதும் செல்போன் திரையில் அமிழ்ந்து கொண்டு இருந்தது. மொபைல் போனின் டிஸ்பிளேக்கள் தங்கள் கற்பை சூறையாடிக் கொண்டிருந்த விரல்களைச் சபித்துக் கொண்டு இருந்தது.
சரிந்திருந்த கருப்பு கண்ணாடியை வெகு வேகமாக தூக்கிவிட்டபடியே தான் அமர்ந்திருந்த இடத்தின் அருகாமையில் உள்ள கேமிராவைப் பார்த்தான். அவன் உள்ளே நுழைய ஆரம்பித்த நிமிடமே அது வெறும் காட்சிப் பொருளாய் மாறியிருந்ததை யாரும் அறியவில்லை, அந்தவீட்டின் உள்ளிருந்து அடுத்த வருடம் ஆணழகன் போட்டிக்குச் செல்பவனைப் போல ஃபிட்டாய் ஒருத்தன் வந்தான்.
கேமிராவின் ஆங்கிளைச் சரிபார்த்தான். தன் அலைபேசியில் இருந்து, "விக்டர் கொஞ்ச நேரமா சிசிடிவியில் இருந்து எதுவும் பதிவாகலை, பிளாங்கா இருக்கு ஏதாவது ஒயர் லூசா இருக்குமான்னு செக் பண்ணிட்டேன். நீ உடனே வா சாருக்குத் தெரிந்தால் திட்டுவாங்க". அவன் குறிப்பிட்ட அந்த சார் நீதியரசர் சபேசன். குழந்தைகளுக்கு நடக்கும் குற்றங்களைத் தீர விசாரித்து வழக்குளை உடனுக்குடனே முடித்து வைக்க நியமிக்கப்பட்டவர். பெங்களூர் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதியரசராக இருந்தவர்.
காண்டஸாவின் உள்ளிருந்த இருவரும் சிரித்துக் கொண்டார்கள். "காமிராவை ஹேக் பண்ணியிருக்கிறோன்று யாருக்கும் தெரியலை பாரேன்".
"நீ வேணுன்னா போய் சொல்லிட்டு வாயேன்" டிரைவர் சீட்டில் இருந்தவன் கிண்டலாக கேட்டபடியே, "இங்கே பாருடா எங்க வந்தாலும் போனையே பார்த்துக்கிட்டு, சுற்றி ரசிக்க எத்தனை விஷயங்கள் இருக்கு அனலும், குளுமையும் சரிசமமா சேர்ந்து வீசற காற்று, டூவீலரில் அங்குமிங்கும் பறக்கும் ஆட்கள், அவர்கள் ஆடைகள் பறக்கும் லாவகம், மரம், அதில் பறவை களைப்பாய் இருந்தாலும் குதூகலமாய் வெளிவரும் பிள்ளைகள், உண்மையை விடுத்து இவனுங்களுக்கு நிழலை ரசிக்கிறதுதான் பிடிக்குது".
"அது நமக்கு நல்லதுதானே யாரும் நம்மை கவனிக்கலையே ?!"
"ம்.. ஆனா என்ன கிக் இருக்கு ?" தன் கைப்பையில் இருந்து சிறு கருவி ஒன்றை எடுத்து அங்கிருந்த மொபைல் போனின் டவரை ஜாமர் கொண்டு செயழிக்க வைத்தான். அனைவரையும் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.
ச்சே.... என்ற வார்த்தைகள்; ஆங்காங்கே ஆன் பட்டனும் ரீஸ்டார்ட் பட்டணும் அவர்களிடம் படாத பாடு பட்டுக் கொண்டு இருந்தது. அதுவரையில் நிமிர்ந்தே பார்க்காதவன் அக்கம் பக்கத்தில் எல்லாரிடமும் உங்க போனுக்கும் டவர் இல்லையா என்று விசாரிக்க ஆரம்பித்தான். விஞ்ஞானத்தை முடக்கினா மனுஷனுக்கு உணர்வுகளும், எதிரே இருக்கிற உலகமும் தெரிய ஆரம்பிக்கிறது.
"சரிடா நேரமாகுது இன்னும் எத்தனை நேரம் தேவுடு காக்கணும்."
"காத்திரு அவன் ஃபோனை இன்னும் ஆன் பண்ணலை. நான் காத்திருக்கல வருடக்கணக்கில்........."
"உன் அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லையே" அந்த உயரமானவன் அலுத்துக் கொண்டான். தன் மடியில் குழந்தையைப் போலக் கிடத்தப்பட்டு இருந்த லேப்டாப்பின் விசைப் பலகையைத் தட்டினான், அது ஒளிர்ந்து பின் அணைந்தது. திரையின் முதல் வெளிச்சத்தில் கிங்மேக்கிக் என்ற ஸ்கீரின் ஓப்பன் ஆகியது.
ஒரு இயந்திரப்பெண் கேம் பற்றிய விளக்கங்களைச் சொல்ல, அவன் எண்டர் பட்டனை தொட்டு அழுத்திவிட்டு விளையாட்டின் உள் சென்றான். பதினைந்து அடுக்குகள் கொண்ட கேம் அது, அதன் நான்காவது அடுக்கில் நுழைந்தான். நீங்கள் இன்னமும் முந்தைய கட்டத்தை முடிக்கவில்லை என்று ஸ்மைலி ஒன்று வந்து நாட்டியமாட தொடுதிரையின் மூலம் அதன் தலையில் தட்டினான்.
"இந்தப் பையன் எந்த லெவல்லே இருக்கான் மூன்றாவதுதானே"
"ம்...ஆரம்பத்தில் ...."
"ம்...." மூன்றாவது லெவல் ஆரம்பத்தில் ஒரு ஓரத்தில் டெக்ஸ்ட் பாக்ஸை திறந்தான்.
"காத்திருக்கிறேன் விரைந்து வா
பாதையில் கவனம் பதித்து வா
புதிய யுகம் அமைப்போம்
புத்தொளி பெறுவோம்"
என்று செய்தியை அனுப்பி எண்டர் பட்டனைத் தட்டிய ஐந்தாவது நிமிடம் மேலும் சலசலப்புகளுக்கு இடையில் அந்த மாணவன் வெளியே வந்தான். முதுகில் புத்தக சுமையுடன் சலனமில்லாத முகத்துடன், "ரவி, கேண்டீன் வரலையா" என்ற நண்பர்களின் கேள்வியை அலட்சியப்படுத்தி, செலுத்தப்பட்டவனைப் போல வந்தவன் காண்டஸாவினுள் அமர்ந்தான். அடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டி ஸ்டார்ட் ஆனது.
டிரைவர் சீட்டில் இருந்தவன் தன் பிரவுன் நிற உதட்டில் நிகோடின் புகைக்கு நடுவேன் சிரித்தான். தெரு முனையைத் தாண்டிய பிறகு எல்லார் போனிலும் பச்சை நிற சிம்பல் வளர்ந்து கொண்டே வர அதே வளர்ச்சியின் வேகத்தை நம் கருப்பு காண்டஸாவும் கடன் வாங்கியிருந்தது.
காண்டாஸாவின் பின் இருக்கையில் மூன்று சிறுவர்கள் வெவ்வேறு யூனிபார்மில் யாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவும் இல்லை பேசிக்கொள்ளவும் இல்லை அவர்களின் கண்கள் தங்கள் கரங்களில் இருந்த மொபைல் போனையே பார்த்துக் கொண்டு இருந்தது.
தாமதாக வந்த வேனில் இருந்து இறங்கிய டிரைவர், "டேய் சீக்கிரம் ஏறுங்கடா" என்ற மாணவர்களை அவசரப்படுத்திட, கையிலிருந்த திண்பண்டங்களை வாயில் திணித்தபடியே தங்கள் உடைமைகளோடு வேனில் ஏறினார்கள். அங்கே ஒருவித பரபரப்பு ஒட்டிக் கொண்டது. வாட்ச்மேன் யாரிடமோ கத்திக் கொண்டே இருந்தார்.
"தினமும் இதே பக்கமா வர்றீங்க அடுத்த முறைப் பார்த்தேன் போலீஸ்ல பிடிச்சிக் கொடுத்துடுவேன்" என்று கத்தினார்.
"என்னன்னே ஆச்சு ?"
"நாலைஞ்சு பொறுக்கிப் பசங்க கரெக்டா பள்ளிக்கூடம் விடற நேரம் வண்டியிலே இந்தப்பக்கம் அந்தப்பக்கமா போறதும் ஹாரனை அடிக்கிறதும், பொண்ணுங்க வெளியே வர்ற நேரம் ஹோன்னு கத்தறதும் அலும்பல் தாங்கலை".
"நிர்வாகத்துக்கிட்டே சொல்ல வேண்டியதானே"
"சொல்லியாச்சுப்பா, வருஷத்துக்கு எத்தினி ரூபா பீஸூ வாங்குறாங்க ? வெளிவாசல்ல ஒரு கேமிராவைப் போடலாம்மா இல்லை, அட அதுதான் வேணாம் கொஞ்சாநாளைக்கு ஸ்டேஷன்லே சொல்லி இரண்டு கான்ஸ்டபிளைப் போடலாம். போன முறை ஸ்டாஃப் மீட்டிங்லே பேசினா ஸ்கூலுக்குள்ளே இருக்கிறவரைக்கும் தான் நாம பாதுகாப்புத் தர முடியும் வெளியே போயிட்டா அவங்க பெத்தவங்கதான் பாதுகாக்கணுன்னு சொல்றாங்க. அதுக்காக காம்பெளண்டு கேட்டைத் தாண்டறவரைக்கும் கூட பொறுப்பு ஏத்துக்கலைன்னா என்ன அர்த்தம். ம்...நாம சொல்லி யாரு கேக்கிறது.
பணத்தைக் கொட்டி இங்கே படிச்சாத்தான் பிள்ளைகளுக்கு எதிர்காலன்னு கொண்டு வந்து விடுறாங்களே அவங்களைச் சொல்லணும். எல்லாம் பணம்தான் இங்கே. வீட்டுல எனக்கும் பொம்பளைப் பிள்ளைங்க இருக்காங்க தம்பி, இந்தப் பிள்ளைங்க ஸ்கூலு விட்டா நேரா வூட்டுக்குப் போகமா சில நேரங்களில் முட்டுச்சந்துலே நிக்கறதும், வெளியே சுத்தறதும் பார்க்க பயமாத்தான் இருக்கு. படிக்கிற வயசில நல்லது கெட்டதை நாமதான சொல்லித் தரணும். நிர்வாகம் கண்டுகல, பெத்தவங்களும் கண்டுகிறது இல்லை, எல்லாம் காலம்... அக்கறை இல்லாத பிறப்பா போச்சுங்க". அவர் நீண்ட பெருமூச்சில் அங்கலாய்த்து கொண்டே இருக்க, கதவு ஜன்னல்களை எல்லாம் மூடி வெளிவந்த மருது இணைந்தான்.
"நைனா எல்லாம் செக் பண்ணியாச்சு, நீ இன்னும் அரைமணியிலே கேட்டைப் பூட்டிட்டுப் போ. நான் இராத்திரிக்கு ட்யூட்டிக்கு வந்துடறேன்" என்று சொல்லி நகர அதுவரையில் தன்னுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்த வேன் டிரைவர் நகராமல் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த வாட்ச்மேன் கேட்டார்.
"என்ன தம்பி ! பிள்ளைகளை வண்டியிலே ஏத்திகிட்டு இன்னமும் ஏன் நிக்குறே ? போக வேண்டியதுதானே" என்றார்.
"இன்னும் ஒரு பையன் வரலையே ? உள்ளேதான் இருக்கானா ?"
"உன் முன்னாடிதானே மருது யாரும் இல்லை ஜன்னல் க்ளாஸ் ரூமெல்லாம் சாத்திட்டேன்னு சொல்லிட்டுப் போறான். உள்ளே எப்படியிருப்பான். அவன் கூட ஏதாவது அட்டிப்பய உன் வண்டியிலே இருக்கும். நீ போய் கேளு. நான் எதுக்கும் ஒரு நடை உள்ளார போய் பார்த்துட்டு வர்றேன்" என்று அவர் உள்ளே நகர்ந்தார்.
அவர்கள் தேடிக் கொண்டு இருந்த ரவிதான் காண்டஸாவில் பயணித்துக் கொண்டு இருக்கிறானே? வேன் டிரைவரின் விசாரிப்பும், வாட்ச்மேனின் தேடுதலும் பொய்த்துப் போக ரவியின் தந்தை மருத்துவர் ஆகாஷுக்கு ஃபோன் போனது. வாட்ச்மேனும் தன் பங்குக்கு ஹெச்.எம்மிற்குத் தெரிவித்தார்.
"எங்கே போறோம் ? வழியில செக்கிங் இருந்தா என்ன செய்றது ?"
"இந்த மூணு பேரையும் காணோன்னு இப்போதான் தேட ஆரம்பிச்சி இருப்பாங்க. இனிமே ஸ்கூல் நிர்வாகம் மூலமாகவோ, இல்லை வேன் டிரைவர் மூலமாகவோ தகவல் அவங்க பேரண்ட்ஸ்க்கு போய் அப்பறம் போலீஸ் நிதானமா விசாரிச்சு லாஸ்ட்டாதான் செக்கிங். சினிமா படத்துலேதான் உடனே நடவடிக்கை எல்லாம் ?! அவங்க நம்மை ஸ்மெல் பண்றதுக்குள்ளே நாம போயிடலாம்.
அப்படியே செக் பண்ணாலும் ? நான் கார்லே போட்டு இருக்கிறே பெயிண்ட் கலரும், நம்பரும் ஆரல்வாய் ஏசி உடையது எவனும் நிறுத்தமாட்டான் போன வாரம் நீ டிவி பார்க்கலையா ?
அவரு ஒரு விளையாட்டு வீரர். நேரடியா எஸ்.ஐ போஸ்ட்டுக்கு வந்தவர். படிப்படியா பெரிய பதவிக்கு வந்தவர். இந்த கார் அவருடைய நண்பர் பரிசா தந்ததுன்னு டிவியிலே போன வாரம் பேட்டி கூட கொடுத்தாரே, அதனால் மாட்ட வாய்ப்பில்லை, பசங்க என்ன பண்றாங்க."
"மூணு பேரும் பின்னாடிதான் ஆனா அமைதியா ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கக் கூட இல்லை அவனுங்களுக்கு கேம் இன்ட்ரஸ்ட். மூணு பேருமே தேர்ட் லெவல்தான். அதனால நீ தகவலைத் தட்டிவிடு".
அவனும் ஸ்லீப்பிங் மோட் என்று தகவலைத் தட்டிவிட பின்னிருந்த பையன்கள் அனைவரும் ஒருவர் மேல் ஒருவர் சரிந்தார்கள்.
ஒரே நேரத்தில் மூன்று முக்கிய பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மூன்றுபேர் மாயம். கடத்தப்பட்டார்களா ? காணாமல் போன காரணம் தெரியவில்லை என்று பள்ளி நிர்வாகம் கையை விரிக்க; காப்பாற்றுங்கள் என்ற பெற்றோர் கதற; எதுகை மோனையாய் தொலைக்காட்சியில் பேசிக்கொண்டே போனாள் அந்த செய்தி வாசிப்பாளர்.
-லதா சரவணன்.