பல்வேறு சவால்களைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வரும் பெண் துப்பறிவாளர் யாஸ்மின் அவர்கள் தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
மூன்று வருடங்களுக்கு முன் நடந்த கேஸ் இது. ஒரு பெண் தன்னுடைய கணவரின் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக நம்மிடம் வந்தாள். தன்னுடைய மாமியாரைப் பார்த்துக் கொள்வதற்கு தன்னுடன் படித்த ஒரு பெண்ணையே காலை நேரத்துக்கு மட்டும் ஹோம் நர்ஸாக சேர்த்தாள். அதன் பிறகு தன்னுடைய கணவர் அந்தப் பெண்ணிடம் ஃபோனில் அதிக நேரம் பேசுவது தெரிந்தது. இது குறித்த உண்மையைக் கண்டறிந்து தரவேண்டி நம்மிடம் அந்தப் பெண் வந்தாள்.
ஒரு பத்து நாட்கள் அவரை ஃபாலோ செய்த பிறகு அவரிடம் தவறான நடவடிக்கைகள் இருப்பது போல் எங்களுக்குத் தோன்றவில்லை. தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்த போது அவர் அடிக்கடி ஒரு வீட்டுக்கு செல்வது தெரிந்தது. அந்த வீட்டுக்கு இந்த நர்ஸ் பெண்ணும் வந்தாள். அப்போது தான் தெரிந்தது இன்னொரு பெண்ணை இவர் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டார் என்று. அவர்களுக்குத் திருமணமாகிப் பத்து ஆண்டுகள் ஆகியிருந்தன. நம்மிடம் கேஸ் கொடுத்த பெண்ணோடு அவருக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் தான் ஆகியிருந்தன.
அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது அவருடைய இரண்டாவது மனைவிக்கும் தெரிந்திருந்தது. தற்போது விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருப்பதாக அவர் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் உண்மையில் அந்த விவாகரத்து வழக்கு என்பது ஒரு நாடகம். அவருடன் திருமணம் நடந்ததாக நம்பப்படும் அந்தப் பெண்ணிற்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது இன்னொருவருடன். ஆனால் இவர்கள் இருவரும் தங்களுக்குள் விவாகரத்து வழக்கு நடந்து வருவது போல் அனைவரையும் ஏமாற்றி வந்தனர். இதன் மூலம் அவர்களுடைய உறவு தொடர்ந்து வந்தது.
இப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்த வழக்கு இது. அந்த நர்ஸ் பெண்ணுக்கும் பணம் தேவைப்பட்டதால் இவருக்கு அவள் உதவிகள் செய்து வந்தாள். சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் விசாரணைக்குப் பிறகும் நம்மிடம் வருவார்கள். பழைய வழக்குகளை விசாரிக்கும்போது சம்பந்தப்பட்ட நபர்களோடு பழகியவர்களை முதலில் நாங்கள் கண்டுபிடிப்போம். அவர்களிடம் விசாரணை மேற்கொள்வோம். பெரும்பாலும் குடும்பப் பிரச்சனைகள் குறித்த வழக்குகள் தான் நம்மிடம் அதிகம் வரும்.
குற்றவாளிகளின் கண்களைப் பார்த்து அவர்கள் பேசுவது உண்மையா என்று கண்டறிவது எல்லாம் இன்று கடினமாகிவிட்டது. நம்முடைய அனுபவத்தின் மூலம் ஒருவர் பேசுவது உண்மையா இல்லையா என்பதை நம்மால் அறிய முடியும்.