துப்பறியும் பணி என்பது சவால்கள் நிறைந்தது. ஒரு பெண்ணாக அந்த சவால்கள் அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக நடைபோட்டு வரும் துப்பறிவாளர் யாஸ்மின் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
சினிமாவில் காட்டும் துப்பறியும் பணிக்கும் நிஜத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சில ஒற்றுமைகளும் இருக்கும். 'தெகிடி' திரைப்படக் காட்சிகள் ஓரளவு எங்கள் பணியைத் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தன. ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வழக்கில் கணவனுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் குழந்தை பெற முடியாத நிலையில், மனைவி மீது பழி வந்தது. அனைத்தையும் சமாளித்து செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி முடிவெடுத்து கணவனின் அனுமதியையும் பெற்று குழந்தையும் பிறந்தது. ஆனால், அதன் பிறகு கணவர் மனைவியை விட்டு விலகிச் சென்றார்.
வீட்டிற்கு தாமதமாக வருவது, குடிப்பது என்று அவருடைய நடவடிக்கைகள் மாறின. அப்போதுதான் அந்தப் பெண் எங்களிடம் வந்தாள். அவளுடைய கணவரை நாங்கள் பின்தொடர்ந்தோம். வேலை முடிந்தவுடன் நேராக ஒயின்ஷாப் செல்பவராக அவர் இருந்தார். அதன்பிறகு தான் வீட்டுக்குச் செல்கிறார் என்பதை அறிந்தோம். வேறு யாருடனும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை. இதை நாங்கள் அந்தப் பெண்ணிடம் தெரிவித்தோம். அவளுக்கு அப்போதும் சந்தேகம் தீரவில்லை. எனவே இன்னும் தீவிரமான ஆராய்ச்சியில் இறங்கினோம்.
எங்களைச் சேர்ந்த ஒருவரை ஒயின்ஷாப்பில் அவரை சந்தித்து நண்பராக நடிக்க வைத்தோம். அவரிடம் பேசிய போது தான் தெரிந்தது, தன்னுடைய மனைவிக்கு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதன் மூலம் தான் குழந்தை பிறந்தது என்று அவர் அப்போது வரை நம்பிக்கொண்டிருக்கிறார் என்று. அது பற்றி அவளிடம் நாங்கள் விசாரித்தபோது செயற்கை கருவூட்டல் முறையில் டோனர் வழியாகத்தான் குழந்தை பெற்றுக்கொண்டதாக விளக்கினாள். அனைத்தையும் அறிந்திருந்தபோதும், தன்னுடைய கணவர் தன் மீது சந்தேகப்பட்டது அவளுக்கு ஆத்திரத்தை மூட்டியது. இருவரையும் வரச் சொல்லி கவுன்சிலிங் கொடுத்து தான் அந்த வழக்கை முடித்தோம்.
சில நேரங்களில் டிடெக்டிவ் ஏஜென்சிக்களையே நாங்கள் பின்தொடர வேண்டிய சூழ்நிலை வரும். நம்பகத்தன்மை சார்ந்த பிரச்சனை இது. காதலில் இருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் உளவு பார்க்கச் சொல்லும் வழக்குகள் நிறைய வரும். பொதுவாக உளவு பார்ப்பது கடினமான ஒன்றுதான். சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் உளவு பார்க்கச் சொல்வதை நாங்கள் ஊக்குவிப்பதில்லை. பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடுவதே சரியானது. எங்களுக்கு கொடுக்கப்பட்ட காலத்திற்குள் ஒருவர் பற்றி நாங்கள் அறியும் தகவல்கள் முழுமையானவை என்று சொல்ல முடியாது. மனிதர்கள் பற்றிய தகவல்கள் புதிது புதிதாக ஒவ்வொரு நாளும் முளைக்கக் கூடியவை.