Skip to main content

‘வரும் முன் காக்க நினைத்த பெற்றோர்; செய்த தவறை சொல்லாத குழந்தைகள்’ - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்:86

Published on 11/01/2025 | Edited on 11/01/2025
jay zen manangal vs manithargal 86

உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்ட ஒரு கவுன்சிலிங் குறித்து பார்ப்போம்.

ஒரு குடும்பம் என்னை சந்திக்க வந்தது, அதில் பெற்றோர் மிகவும் நல்லவர்களாகவும் கணவர், மனைவி உறவுக்கிடையே என்ன பிரச்சனை வந்தாலும், மிஞ்சிப் போனால் மூன்று நாளைக்குத்தான் சண்டை வரும். அதன் பிறகு இருவரும் சமாதானம் அடைந்துவிடுவார்கள். இப்படிப்பட்ட புரிதல் உள்ள அந்த பெற்றோரின் என்ன பிரச்சனை எதற்காகச் சந்திக்க வந்தீர்கள்? என்று கேட்டபோது, தங்களுக்கு ஒரு பையன் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்கள் இருவரும் தற்போது நல்ல வருமானத்தில் சம்பாதித்து வருவதாகவும் தெரிவித்தனர். அதோடு குழந்தைகளை இதுவரை நல்லபடியாக வளர்த்துவிட்டோம். இப்போது அவர்களுக்கு வயது அதிகமாகிவிட்டது அதனால் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியாது. குழந்தைகள் இதுவரை தவறு செய்யவில்லை. இருந்தாலும் அவர்கள் எதாவது தவறு செய்துவிட்டால் முன்பே ஏன் கண்டிக்கவில்லை என சொல்லிவிடக்கூடாது. ஒருவேளை குழந்தைகள் வாழ்க்கையில் எதாவது பிரச்சனை வந்துவிட்டால் அப்போதும் அவர்களுடன்தான் இருப்போம் என்றனர்.

அந்த பெற்றோர் சொன்னதைக் கேட்ட பிறகு, கவுன்சிலிங் போகச் சொன்னால் நான் என்ன பைத்தியமா? என்று கேட்கும் இந்த காலத்தில் இப்படி பிரச்சனை வருவதற்கு முன்பே வந்துள்ளார் என ஆச்சரியமாக இருந்தது. அந்த பெற்றோரிடம் பேசிய பிறகு அவர்களின் குழந்தைகளிடம் பேச ஆர்வமாக இருந்தேன். அதன் பின்பு அவர்கள் குழந்தைகளிடம் பேசியபோது இருவரும் பள்ளி, கல்லூரி என மெரிட்டில் பாஸ் ஆகி இப்போது வேலை பார்ப்பதாகச் சொன்னார்கள். அந்தளவிற்கு சிறுவயதில் இருந்து இரண்டு குழந்தைகளையும் அந்த பெற்றோர் நன்றாகப் படிக்க வைத்து வளர்த்திருந்தனர். அதைத் தொடர்ந்து அந்த குழந்தைகள் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்தேன். ஒரு 10 டாப்பிக் பற்றி அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தேன். அதில் அந்த பையனுக்கு மூன்று டாப்பிக் பற்றிப் பேசும்போது முகம் வேறுபட்டது. அதேபோல் அந்த பெண்ணுக்கும் ஒரு சில டாப்பிக் பேசும்போது முகம் வேறுபட்டது. அந்த 10 டாப்பிக் பற்றிப் பேசும் வரை இருவரும் என்னோடுதான் பயணித்தார்கள்.

இறுதியாக கவுன்சிலிங் முடிந்து ஃபீட் பேக் கேட்டபோது. அந்த பையனும் அந்த பெண்ணும், நீங்கள் விஷயங்களைத் தெளிவுபடுத்தாமல் இருந்திருந்தால் வழி மாறிப் போகியிருப்போம். அதற்காக நன்றி என்றனர். நான் அவர்கள் செய்த தவறுகள் எதையுமே கேட்கவில்லை அவர்களும் என்னிடம் சொல்லவில்லை. அதே போல் அந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் என்ன தவறுகள் செய்தீர்கள் என்று கேட்கவில்லை அந்தளவிற்கு கவுன்சிலிங் சிறப்பாக முடிந்து. சிலர் குடும்ப உறவில் எதாவது பிரச்சனை வந்து பிரிந்துவிட்டால், அதன் பிறகு சில நாட்கள் கழித்து முன்பு எப்படியெல்லாம் சந்தோஷமாக இருந்தோம் என்று எண்ணி வருந்துவதற்குப் பதிலாக இந்த பெற்றோர்களைப்போல் வரும் முன் செய்ய வேண்டிய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். அதனால் பிரச்சனை வருவதற்கு முன்பே அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார்.