உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்ட ஒரு கவுன்சிலிங் குறித்து பார்ப்போம்.
கிராமத்தில் விவசாயி ஒருவர், தன்னுடைய சம்பாத்தியத்துக்கும் அதிகமான கடனை வாங்கிக் கொண்டு அதை மனைவிக்கு தெரியாமல் மறைத்து கடனை திருப்பி கொடுக்க வேறொருவரிடம் கடன் பெற்று வாழ்ந்து வந்தார். விவசாயம் செய்வதோடு மட்டுமில்லாமல் சின்ன சின்ன மற்ற தொழில்களையும் அவர் செய்து வந்திருக்கிறார். அவரின் மனைவி என்னிடம் வந்து, தன்னுடைய கணவர் முறைப்படி பார்த்தால் இத்தனை வருடங்களில் ரூ. 16 லட்சம் சேமித்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் கடன் வைத்திருப்பாரோ என்ற சந்தேகமாக இருக்கிறது என்றார். பின்பு அந்த விவசாயியை கவுன்சிலிங் வரவழைத்து அவரிடம் பேசியபோது, சரியான காரணத்திற்காகத்தான் கடன் வாங்கினீர்கள்? என்று கேட்க, ஆமாம் சரியான காரணத்துக்காகத்தான் கடன் வாங்கினேன் என ஒப்புக்கொண்டதோடு சின்ன தடுமாற்றத்துடன் கொஞ்சம் தேவையில்லாமல் சில காரணத்துக்காக கடன் வாங்கியதாகச் சொன்னார்.
அதன் பின்பு வாங்கிய அனைத்து கடன்களைப் பற்றி ஒவ்வொன்றாக விளக்கிக் கேட்டேன். அவர் சொன்ன கடன்களைக் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது ரூ.37 லட்சம் இருந்தது. அவர் சொன்ன வருமானத்தை வைத்து இந்த கடனையும் அவர் அடைப்பதற்கு ஒரு ஜென்மம் பத்தாது. ஏனென்றால் அவருடைய மாத வருமானத்தைவிட அதிகமான கடன்களை அவர் மாதம் மாதம் கட்டி வந்திருக்கிறார். இவ்வளவு பெரிய கடன் தொகையை எப்படி அடைக்கப் போகிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது பாத்துக்கொள்ளலாம், வீடு இருக்கிறது அதை விற்றால் கடனை அடைத்து விடலாம் என்றார். தன்னிடம் இருக்கும் பொருளுக்கும் திறமைக்கும் மதிப்பு தெரியாதவர் சொல்வதைப் போல் அந்த பதில் இருப்பதாக நான் புரிந்துகொண்டேன். அவர் சொன்ன அந்த ரூ.37 லட்சம் கடன் பற்றி அவரது மனைவி கேள்விப்பட்டதும் மயக்கம் அடைந்துவிட்டார்.
தொடர்ந்து அவரிடம் பேசியதில், தான் யாரிடமாவது கடன் வாங்கி ஏற்கனவே வாங்கியிருந்த கடனை அடைத்து வந்துள்ளார். பின்பு அந்த கடனை அடைப்பதற்கு வேறொரு கடனை வாங்கி அடைப்பது என ரொட்டேசனில் கடன் வாங்கி வாங்கி அடைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். எப்படி தொடர்ந்து கடன் கிடைக்கிறது? என்று நான் அவரிடம் கேட்க, அதெல்லாம் யாராவது ஒருவர் கடன் கொடுத்துவிடுவார்கள் என்றார். அருகில் அமர்ந்து கணவர் பேசுவைதைக் கேட்டுக்கொண்டிருந்த மனைவி தலையில் அடித்துக்கொண்டு புலம்பிக்கொண்டே இருந்தார். ஏன் தலையில் அடித்துக்கொள்கிறீர்கள்? என்று அந்த அம்மாவிடம் கேட்டால் இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? கடன் கொடுத்தவர்கள் தன்னைப் ரோட்டில் பார்த்தால் எப்படி நினைப்பார்கள்? என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
அந்த விவசாயி எதனால் இப்படி கடனுக்கு கடன் வாங்கி கொடுக்கிறார் என்று விசாரித்ததில், அப்படி கடன் வாங்குவதிலும் கொடுப்பதிலும் தனக்குப் பணக்கார மனநிலை உருவாகி மகிழ்ச்சியைத் தருவதாக அவர் நினைத்து வந்தது தெரிந்தது. உதாரணத்திற்கு அவர் கடன் குறித்து யாரிடமாவது பேசி அவர்கள் தான் பேசுவதை ரசிக்க வைத்து அவரிடமே கடன் பெற்று விட்டுச் செல்வார். அந்தளவிற்கு கடன் வாங்குவதில் மோசமாக இருந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் அவரிடம், கடன் வாங்கும் மனநிலையைச் சாக்கடை என நினைத்துக்கொண்டு சில நாட்கள் சொந்த வருமானத்தில் வாழ்க்கையை வாழ முயற்சியுங்கள் அதோடு நீங்கள் வாழ்ந்த அந்த சாக்கடையான நாட்களை நினைத்துப் பாருங்கள் என்றேன். அவரே தான் வாழம் வாழ்க்கையை ஒருவர் சாக்கடை எனச் சொல்லிவிட்டார் என்பதை உணர்ந்து நான் சொன்னதுபோல் சில காலம் வாழ்ந்து வந்தார்.
அதன் பின்பு தன்னுடைய கடன் வாழ்க்கையை அவர் திரும்பிப் பார்க்கையில் அதிலிருந்த துர்நாற்றம் அவருக்குத் தெரிந்தது. சில நாட்களுக்குப் பிறகு அவர் என்னிடம் வந்து, இப்போது கடன் வாங்குவதைக் குறைத்துவிட்டேன் என்றார். அதன் பிறகு சில காலங்களுக்குப் பிறகு வந்து கடன் வாங்குவதை நிறுத்திவிட்டேன் என்றார். அடுத்ததாக அவர் என்னிடம் வந்து, கடன் வாங்குவது நல்லது என்று வித்தியாசமாகப் பேசினார். அதற்குக் காரணமாக தான் வாங்கிய கடனிலிருந்து வருமானம் ஈட்டப் போகிறேன் என்றார். தான் கடன் வாங்கி அதில் தொழில் செய்து கடனையும் அடைத்து வருமானத்தையும் ஈட்டுவேன் என்ற மனநிலைக்கு வரும்போதுதான் அவருடனான கவுன்சிலிங் முடிவுக்கு வந்தது என்றார்.