Skip to main content

லதா சரவணன் எழுதும் விறுவிறு டெக்னோ தொடர்... இரவல் எதிரி #04

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

iraval edhiri part 4

 

இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்
 

 

இருள் தன் ஆக்ரோஷமான அலைகளால் உலகை தன்னுள் மூழ்கடிக்க போராடிக் கொண்டு இருக்க, அலைபேசியின் தொடுதிரை வெளிச்சம் லைப் சேவர் போட்டுகளாக மாறி அவர்களை வெளிச்சப் படகில் ஏற்றிக் கொண்டது. ரேகா கிச்சனை சீர் செய்தபடியே, மகனின் அறைக்கதவைப் பார்த்தாள் அதில் இலேசான வெளிச்சம் பாதி மூடியிருந்த கதவின் வழியே வழிந்தது.

 

அச்சு என்னும் அர்ஜுன் அந்த அறைக்குள் உறங்குவதாய் பாவனை செய்தபடியே, போர்வைக்குள் you tube ல் கார்ட்டூன் பார்த்துக் கொண்டு இருந்தான். வெகு லாவகமாக அந்த ஏழு வயது பிள்ளையின் விரல்கள் தொடுதிரையில் கொஞ்சியது. கார்ட்டூனின் நடுவில் சிறு வயதுக் குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போனை பார்ப்பதால் கண்களில், மூளைப் பகுதியிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்று 30நொடிகள் வந்த விளம்பரத்தை பார்க்க ஆர்வமின்றி வேறு வீடியோவிற்கு மாறினான். நான் வந்துட்டேன் என்று ஷின்சானின் வீடியோ ஓப்பன் ஆனது. அறைக்கதவு திறக்கும் சப்தம் போர்வைக்குள் சட்டென இருள் சூழ்ந்து கொண்டது.

“அச்சு..... தூங்கிட்டியா..!” என்று தலையை முடியைச் செல்லமாய் கலைத்து நெற்றியில் வலிக்காமல் முத்தமிட்டாள். இரவு விளக்கை எரியவிட்டு, அவள் வெளியே செல்ல, அச்சு மீண்டும் செல்லை உயிர்ப்பித்தான். ஜன்னலின் அருகில் ஏதோ மினுமினுத்தது. என்ன என்று பார்க்க எழுந்தவனின் கண்களில் ஒரு கிரிக்கெட் பந்து சைசில் ஸ்மைலி பிங்க் நிறத்தில் சிரித்தது. அச்சுவின் கண்களில் டன் டன்னாய் ஆச்சரியம். அதை தொட்டான் ஒரு சிறு அதிர்வில் அது இரண்டாக மாறியது இப்போது அவன் முன் இரண்டு நிற ஸ்மைலிகள். அவன் கைக்கு அகப்படாமல் அறை முழுக்க ஓடியது அச்சுவிற்கு அந்த விளையாட்டு வெகு சுவாரஸ்யமாய் இருக்க விரட்டி விரட்டி தொட்டான்.

 

அறைமுழுக்க ஸ்மைலிகளின் கிசுகிசுப்புக் கொஞ்சல்கள் ஒரு கட்டத்தில் அவற்றின் புன்னகை மாறி, அச்சுவின் உடலில் சுற்றிக் கொண்டு கீழே தள்ளியது. அதன் இறுக்கத்தில் மூச்சுவிடக் கூட சிரமப்பட்டான். கண்களில் கண்ணீர் வழிந்தது அவனால் எத்தனை முயன்றும் அம்மாவை அழைக்க முடியவில்லை. ரேகா ஏதோ நினைவு வந்தவளாக அச்சுவின் அறைக்கு வாசலில் நிற்கிறாள். அவளருகில் ஒரு மேஜிக் பட்டன் விட்டுவிட்டு ஒளிர்ந்தது. ரேகா அதைப் பயப்பார்வை பார்த்தாள்.

“ஸ்டாப்…!!!” என்று சத்தமாய் குரல் கொடுத்தான் கோபு. எப்படி மேடம் இருக்கு இந்த கேம் என்று டெவலபர் கோபு ஆர்வமாய் கேட்டான்.

“கோபு கான்செப்ட் நல்லாத்தான் இருக்கு ஆனா வைலண்டா இல்லையா? பசங்க பயந்துடமாட்டாங்களா?”

“இல்லை மேம்....! ஒவ்வொரு மோசமான சிச்சுவேஷன்லே இருந்தும் அவங்க எப்படித் தப்பிக்கிறாங்கன்னு கத்துக் கொடுக்கிறதுதான் கேமின் ஸ்பெஷல். இது ஒன்லைன்தான் இப்படி சிச்சுவேஷன்ஸ் மாறிகிட்டே இருக்கும். ம்யூசிக் எபெக்ட்ஸ் கொஞ்சம் கலர்ஸ் இன்கீரிஸ் பண்ணா இன்னும் சூப்பரா வரும்.!”

“ம்.....கேமுக்கு என்ன பெயர் வைச்சிருக்கீங்க?”

“ரிஸ்கி ஸ்மைலிஸ்....இதில முதல் இரண்டு லெவல் ஃப்ரீ..... அதுக்கு பிறகு இப்போ அச்சுவோட சிச்சுவேஷன்ஸ்லே அவனைச் சுத்தியிருக்கிற ஸ்மைலியைக் கிளியர் பண்ணனுன்னா ஒரு மேஜிக் பட்டன் தரணும். அவங்க மதர் கதவை திறக்க அது உதவும். அதை வாங்கணுன்னா 350 பே பண்ணனும். இல்லைன்னா லெவல் அப் ஆகிற வரையில் அதையே விளையாடணும். இங்கே அடுத்ததை அறியும் ஆர்வம் 350 ரூபாயினை பே பண்ண வைக்கும்.”

“ம்....எங்கே லான்ஞ்.....?!”

“நம்ம சென்னை பிரான்ஞ்லே மேம்......!”

“நானே கேட்கணுன்னு நினைச்சேன் கோபு சென்னை பிரான்ஞ் எந்த அளவில் இருக்கு.”

“இன்டீரியர் எல்லாம் தயார் நிலையில் இருக்கு. மெஷினரிஸ் எல்லாம் வந்தாச்சு. பிக்ஸ் பண்ண நீங்களும் நம்ம டீமும் போகிறோம். நீங்க கூட சென்னை வர ஒப்புகிட்டதா நம்ம சேர்மன் சொன்னாங்களே.”

“ஆமாம்....எனக்கு இன்னைக்கு நைட் பிளைட். ஒரு இரண்டு மூணு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு நான் அங்கே வந்திடறேன். ஒரு அவுட்லெட் போட்டுடலாம். அதுக்குள்ளே நீங்களும் வந்திடுங்க. அப்புறம் நம்ம ஃப்ளோரின் நீள அகலத்துக்கு ஏற்றாற் போல ஒரு கலர்புல்லான பேனர் அரெஞ்ச் பண்ணுங்க, நம்மோட டாப் கேம்ஸ் பிக்சர்ஸ் அங்கே இருக்கணும். அப்கம்மிங்ன்னு சில கேம்ஸ் இப்போ உங்க ரிஸ்கி ஸ்மைலிஸ் கூட போடலாம். மால் ஏற்கனவே தொடங்கியாச்சு. ஸோ மக்கள் வரத்து அதிகமாக இருக்கும். எதையும் மூடி வைக்கும் போது அதோட ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அதனால நம்மோட ப்ளோர் தயாராகிற வரையில் அதைச் சுற்றி இருப்பவர்களின் பார்வை நம்மைத் தாண்டி போகும் போது எதிர்பார்பை எகிறச் செய்யணும்.”

“டிசைனர் டீமைக் கூப்பிட்டு நைட்டுக்குள்ளே எனக்கு டிசைன் அனுப்ப சொல்லுங்க. நான் ஓகே சொன்னதும் உடனே சைஸ் செக்பண்ணி பேனர் ரெடியாகணும். உள்ளே நடக்கிற வேலைகள் எதுவும் வெளியே தெரியக் கூடாது. அப்பத்தான் கியூரியாசிட்டி அதிகமாகும். மீதி ப்ரமோஷன் வேலைகளை நான் அங்கே போய் சொல்றேன் .”

 

அவள் கிளம்ப “சரி மேடம்..” என்றார்கள் கோரஸாக, நான்ஸி அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டாள்.

“கவலைப்படாம போயிட்டு வா. இன்னும் ரெண்டு மூணு நாளில் நானும் அங்கே வந்து ஜாயின் பண்ணிக்கிறேன். உனக்கு வேண்டிய டீமில் என் பெயரையும் சேர்த்து சேர்மனுக்கு கொடுத்திருக்கியே... நாங்க தங்க சில ஏற்பாடுகள் எல்லாம் செய்யவேண்டியிருக்குன்னு அவர் சொன்னார். விஷ்வா என்ன சொன்னான்”

“அவனுக்கு பெரிசா எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வரேன்னு சொல்லிட்டான். நைட் கிளம்பறேன்.”

“உங்க வீட்டுலே சொல்லிட்டியா ?”

“அவங்களுக்கு ரொம்பவும் சந்தோஷம் நான்சி. நான்தான் எல்லாத்தையும் இழந்துட்டு இத்தனை நாளா இருந்திருக்கிறேன்.” விடைபெற்று மகனுடன் ஏரோடிராமிற்கு வந்துவிட்டாள். மேகக் கூட்டங்களுக்கு நடுவில் பெங்களூர் ஒரு புள்ளியாய் தெரிந்தது அருகிலிருந்த விஷ்வாவைப் பார்த்தாள். கண்களை அழுந்த மூடிக்கொண்டாள். அங்கு மாறனின் முகம் என்னை விட்டு எங்கும் ஓடிப்போக முடியாது என்று சிரித்தது.

 

நேரம் காலை 9-ஐ தொடப் போராடிக்கொண்டு இருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் கமிஷனரின் அலுவலகத்தில் இருக்க வேண்டும். நேற்று ஸ்டேஷனுக்கு வந்த பாக்ஸ் பற்றியும் இறந்த அந்த பையனைப் பற்றியும் விவரங்கள் இந்நேரம் பிரஸ்க்கு கசிந்திருக்கும். என்ன செய்ய போகிறேன் நான். கேஸ் மொத்தமும் ஒரு லூப் ஹோல் கூட கிடைக்கவில்லை. காணாமல் போன நான்கு இடங்களில் இருந்து விசாரணையைத் தொடங்க வேண்டும். நேற்று பெட்டிக்குள் இருந்த அந்த சிறுவனின் விழிகள் நினைவிற்கு வந்தது தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

 

மேஜை டிராயரில் இருந்து கூலர்ஸையும், பைலையும் எடுத்தான். டேபிளின் மேல் அவனும் மேகாவும் 15 வருடங்களுக்கு முந்தைய அந்த புகைப்படம் ஒன்றுதான் அவனின் நினைவுச் சின்னம். அவனின் பிறந்தநாளுக்கு இருவரின் புகைப்படங்களையும் வைத்து அவள் அளித்த போட்டோ ஃப்ரேம்.

 

ஒருமுறை அவளின் புகைப்படத்தை தடவிப் பார்த்துவிட்டு கலைந்தான் மாறன். சாவியைப் பொறுக்கியபடியே வெளியே வந்தான். வாசலையே மறைத்தபடி ஆறு அடி உயரமும், அகலமும் நீண்ட பிரவுன் நிறப்பெட்டி வழியை மறைத்தது.

 

கிட்டத்தட்ட நேற்று ஸ்டேஷனில் பார்த்த அதே நீள அகலம். ஒருவேளை உள்ளே என்று என்னும் போதே இதை யார் இங்கே கொண்டு வந்து வைத்திருக்க முடியும் என்று சுற்று முற்றும் பார்த்தான்.

 

ஃபோன் அடித்தது கமிஷனர்தான், லைனில் உயிர்ப்பித்தான். “சார் நேற்று ஸ்டேஷனுக்கு வந்ததைப் போல இன்று என் வீட்டில் பெட்டி ஒன்று இருக்கிறது. பாம் ஏதும் உள்ளே இல்லை பரிசோதித்து விட்டேன். ஆனால் ..... !”

“புரியுது மாறன் நான் இப்போ லோக்கல் ஸ்டேஷன் ஆட்களை அனுப்பறேன் இதுவும்... நேற்றைப் போல் இருந்து விட்டால், என்ன பதில் சொல்லப் போகிறோம்” அவர் பதறுவது போனில் தெரிந்தது. 

“நானே வர்றேன் அதுவரையில் ......”

“திறக்கமாட்டேன்” என்று லைனைக் கத்தரித்தான். பயம் இப்போது அவனுக்குள்ளும்.

 

மாறன் தன் வீட்டுக்கு செக்யூரிட்டிகள் வைத்துக் கொள்வதில்லை தன் தனிமை பாதிக்கும் என்பதாலும், அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவதால் தேவையில்லை என்பது அவனின் அவதானிப்பு. யார் வந்திருந்தாலும் சிசிடிவியில் பதிவாகி இருக்கும் என்று யோசித்தவன். உடனே அந்த எண்ணத்தை மாற்றினான் இத்தனை தெளிவாக காய்களை நகர்த்துபவனின் முதல் கணிப்பும் அதுவாகத்தானே இருக்க முடியும் இருப்பினும், தன் செல்போனில் ஃபுட்டேஜைக் கவனித்தான்.

 

ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பும்போது இரவு பதினோரு மணிக்கு மேல் இருக்கும் அதிலிருந்து முந்தைய நிமிடம் வரையில் ரேண்டமாக ஓடவிட்டான்.

 

காலை 7 மணியில் 8.30வரையில் பதிவுகள் அழிக்கப்பட்டு இருந்தது. எனில் நான் நினைத்தது சரிதான். அத்தெருவில் கடைசிவீடு அவனுடையது. இந்த காலை வேளையில் யாராவது வித்தியாசமாக எதையாவது பார்த்திருக்கிறார்களா என்று விசாரிக்க வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டான்.

 

இத்தனை பெரிய பெட்டியை ஆட்கள் தூக்கி வருவது சாத்தியமில்லை எனில், நிச்சயம் ஏதாவது வண்டி அல்லது லோடு ஏற்றும் டிராலி வந்திருக்க வேண்டும். மேஜையின் இழுப்பறையில் பாரன்ஸிக் ஆட்கள் தடயங்களைக் கண்டறிய பயன்படுத்தும் யுரேனியம் பாஸ்பேட் பவுடரை எடுத்து வந்து வாசலில் இருந்து பெட்டி இருக்கும் இடம் வரையில் கொட்டினான். ஒளிரும் தன்மையுள்ள அந்த வஸ்து இலேசான புழுதி சாரல்களுக்கு இடையில் வெவ்வெறு விதமான ஷூமார்க்குகளையும், டிராலியின் வீல் மார்க்குகளையும் தெளிவாகக் காட்டிக் கொடுத்தது.

 

டிராலி கணம் தாளாமல் சற்று வளைந்து சென்றிருக்க வேண்டும், அதற்கு ஏற்றாற்போல மொத்தம் நான்கு ஜோடி ஷூக்களின் தடங்கள். அனைத்தையும் தன் செல்போனில் வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்துக் கொண்டான். சாக்பீஸ் கொண்டு அந்த வழித்தடத்தில் கோடு இழுத்தான். பிறகு பெட்டியின் அருகே சென்று பெட்டியை முன்னும் பின்னும் பார்த்தான். நான்கைந்து பிளாஸ்டிக் கயிறுகள் கொண்டு கட்டப்பட்டு இருந்ததைத் தவிர வேறு எந்த அடையாளமோ குறிப்புகளோ இல்லை அவன் துல்லியமாய் சோதனையிட்டுக் கொண்டிருக்கும் போதே ஏரியா இன்ஸ்பெக்டர் சக்ராவும், எஸ்.ஐ வேந்தனும். சக்ராவின் பார்வையில் சத்தியமாய் ஸ்நேகம் இல்லை.

“மிஸ்டர் மாறன் இந்த பெட்டி இங்கே எப்படி வந்தது ? ஸ்டேஷனுக்குத் தகவல் தராமல் நேரா நீங்க கமிஷனருக்கு தகவல் தந்து உங்க செல்வாக்கை காட்டுறீங்களா ? எங்களுக்குன்னு ஒரு புரோட்டோகால் இருக்கு.”

“இன்ஸ்பெக்டர் சக்ரா இதே போல் ஒரு பெட்டி உங்க ஸ்டேஷனுக்கு வந்ததே அப்போது நீங்க.....சொல்லவா” என்பதைப் போல பார்த்தான் மாறன்.

“அது....கேஸ் பற்றிய தகவல்களை ஒரு இன்ஸ்பெக்டர்தான் சிபிஐக்குத் தரணும். 

“ஆனா நேத்து உங்க புரோட்டோகாலை ஃபாலோ பண்ணது இந்த எஸ்.ஐ. ஸ்டேஷன்லே உங்க ரூமிலிருந்து வந்த சத்தம் எனக்கும் கேட்டது சக்ரா. உங்க ஜம்பத்தை இங்கே காட்ட வேண்டாம், ஸ்டேஷனில் காட்டுங்க” என்றான் அவனைவிடவும் காட்டமாய் !

 

வாசலில் கமிஷனரின் வண்டி... தன் வியர்வையை வெள்ளை கர்ச்சிப்பால் ஒற்றியபடியே வந்த கிஷன்குமார் அவர்களை நெருங்கினார். சில நொடிகளில் மற்றவர்கள் விரைப்புக் குள்ளானார்கள்

“வெல்கம் சார் ?!”

 

விஷயம் கேள்விப்பட்டதும் என்னால வராம இருக்க முடியலை மாறன். நான்கு மாணவர்கள்... மீடியாவும் மேலிடமும் நம்மைப் போட்டு கிழிகிழின்னு கிழிக்குது. கடத்தினவனோட மோட்டிவ் இப்போ வரைக்கும் தெரியலை, ஆனா ஒருத்தனை கொன்னுட்டாங்க. இப்போ இந்த பெட்டி கொஞ்சம் நெருடலாவே இருக்கு. “பெட்டியைத் திறங்க ?!”

 

மாறன் எச்சரிக்கையாய் அந்த பெட்டியைத் தொடாமல் கூர் கத்தியின் உதவியில் திறந்தான். பெட்டியை பேக் செய்யும் போது ஏதாவது ரேகைகள் கிடைக்கும் என்பதால் பாதுகாப்பாக அந்த பெட்டி பாரன்சிக்கு அனுப்பபடவேண்டுமே. கத்தி நேர்வாக்கில் கோடு இழுக்க பெட்டி பிளந்து கொண்டே உள்ளே.....அனைவரின் கண்களும் திகைப்பில் விரித்தன.

 

சீருடையில் மற்றொரு மாணவன். நேற்று ஸ்டேஷனில் பார்த்த அதே காட்சிகள். இம்முறை ஆங்கிலத்தில் அவனை வரவேற்றுச் சரிந்தான் அந்த பையன். உதட்டின் ஓரத்தில் மெல்லிய ரத்தக்கோடு ?!

 

தொடரும்

 

- லதா சரவணன்