Skip to main content

பஸ் ஸ்டாண்டில் ஆரஞ்சு விற்று பள்ளிக்கூடம் கட்டிய ஹரேகலா ஹஜப்பாவின் வெற்றிக்கதை | வென்றோர் சொல் #43

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

harekala hajabba

 

கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் அண்மையில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்வானவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் 102 பத்ம ஸ்ரீ விருதுகள், 7 பத்ம விபூஷன் விருதுகள், 10 பத்ம பூஷன் விருதுகள் என மொத்தம் 119 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், 29 பெண்களும் ஒரு திருநங்கையும் அடக்கம். கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் கல்வி, சமூகப் பணி, வணிகம், மருத்துவம், விளையாட்டு எனப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், சமூகப் பணிக்காக பத்ம ஸ்ரீ விருதுபெற்ற ஹரேகலா ஹஜப்பா பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். ஆரஞ்சு பழ வியாபாரியான ஹரேகலா ஹஜப்பாவிற்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது ஏன்? அப்படி என்ன சாதித்திருக்கிறார் இவர்..?

 

கர்நாடக மாநிலம் மங்களூர் தாலுகாவில் உள்ள ஹரேகலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹஜப்பா. ஆரஞ்சு பழ வியாபாரியான ஹஜப்பாவின் குடும்பத்தில் மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் என மொத்தம் 5 பேர். கூடையில் ஆரஞ்சு பழங்களை எடுத்துக்கொண்டு மங்களூர் நகரின் பஸ் ஸ்டாண்டில் விற்று, அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலமாக குடும்பத்தை நடத்திவந்தார் ஹஜப்பா. கல்விக்காக பள்ளி பக்கமே சென்றிடாத ஹஜப்பாவிற்கு தெரிந்த மொழி கன்னடம் மட்டுமே. ஒருமுறை, பஸ் ஸ்டாண்டில் ஆரஞ்சு பழத்தை விற்றுக்கொண்டிருந்த ஹஜப்பாவிடம் வெளிநாட்டு பயணி ஒருவர், ஒரு கிலோ ஆரஞ்சு என்ன விலை எனக் கேட்கிறார். ஆங்கிலம் தெரியாத ஹஜப்பா அவர் கேட்டது புரியாமல் தடுமாறுகிறார். அந்தத் தருணம் ஹஜப்பாவை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறது. படிப்பறிவு இல்லாமல் நான் சிரமப்படுவதைப்போல நம்முடைய கிராமத்தில் உள்ள எந்தக் குழந்தையும் எதிர்காலத்தில் சிரமப்படக்கூடாது என முடிவெடுத்த ஹஜப்பா, அதற்கான தீர்வாக கிராமத்தில் பள்ளி ஒன்றையும் தொடங்க முடிவெடுக்கிறார்.

 

அதே நேரத்தில் பள்ளி தொடங்குவது அவ்வளவு எளிதான ஒன்றும் இல்லை என்பதும் அவரது உணர்விற்கு எட்டுகிறது. உடனே தொடங்காவிட்டாலும் எதிர்காலத்தில் நம் ஊரில் நிச்சயம் ஒரு பள்ளி தொடங்கவேண்டும் என உறுதியாக எண்ணிக்கொண்ட ஹஜப்பா, தன்னுடைய தினசரி வருமானத்தில் இருந்து சிறு பகுதியை சேமிக்கத் தொடங்குகிறார். அப்போதைய ஹஜப்பாவின் தினசரி வருமானம் 150ரூபாய். அந்த 150 ரூபாயில் இருந்து சிறுகசிறுக சேகரித்த பணத்தைக் கொண்டு ஒருகட்டத்தில் பள்ளி தொடங்குவதற்கான வேலையை ஆரம்பிக்கிறார். ஹஜப்பாவின் இந்தச் செயல் கர்நாடக அரசையும், பல தனியார் தொண்டு நிறுவனங்களையும் வெகுவாக ஈர்த்தது. 2000ஆம் ஆண்டு சிறு பள்ளியாக தொடங்கப்பட்ட அப்பள்ளி, 2007ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக உயர்த்தப்பட்டது. ஆங்கிலம் தெரியாமல் வெளிநாட்டினர் முன் ஹரேகலா ஹஜப்பா தடுமாறியது 1978ஆம் ஆண்டு; அவர் முயற்சியால் பள்ளி தொடங்கப்பட்டது 2000ஆம் ஆண்டு. ஏறக்குறைய 22 ஆண்டுகள் சிறுகச்சிறுக சேகரித்து தன்னுடைய எண்ணத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார். அதேபோல, வெறும் 28 பேருடன் தொடங்கப்பட்ட இப்பள்ளி தற்போது 175 குழந்தைகள் கல்வி பயிலும் 10ஆம் வகுப்புவரை கொண்ட அரசுப்பள்ளியாக உயர்ந்து நிற்கிறது.

 

harekala hajabba

 

பள்ளி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தனக்குள் ஏற்பட்டது குறித்து கூறும்  ஹரேகலா ஹஜப்பா, "ஒருநாள் மங்களூர் பஸ் ஸ்டாண்டில் நான் ஆரஞ்சு பழம் விற்றுக்கொண்டிருந்தபோது, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் பழம் என்ன விலை என்று ஆங்கிலத்தில் கேட்டார். அவர் கேட்டது அப்போது எனக்கு புரியவில்லை. அந்த இடத்தில் அவருக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினேன். இது போன்ற தருணத்தை என் ஊரில் உள்ள குழந்தைகள் எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக ஒரு பள்ளி தொடங்க வேண்டும் என முடிவெடுத்தேன். என்னுடைய வருமானத்தில் இருந்து சிறு தொகையை சேகரிக்க ஆரம்பித்து, ஐந்தாயிரம் ரூபாய் சேர்ந்தவுடன் பள்ளி கட்டுவதற்கான வேலையை ஆரம்பித்தேன். பின், நிதி கேட்டு நன்கொடையாளர்கள் மற்றும் பெரிய தொழிலதிபர்களின் வீட்டு வாசலுக்கு வெளியே நிற்பேன். அவர்கள் பார்த்துவிட்டு 'யார் நீ... என்ன வேண்டும்...' என்பார்கள். நான் பள்ளி கட்டுவதற்காக நிதி வேண்டும் என்பேன்.

 

என்னுடைய தோற்றத்தை வைத்து அவர்கள் என்னை வித்தியாசமாக பார்ப்பார்கள். பொய்யான காரணம் கூறி பணம் கேட்கிறேன் என்றும்கூட நினைத்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லியதும் முழுமனதுடன் அவர்கள் நன்கொடை கொடுப்பார்கள். அப்படித்தான் பள்ளிக்கூடம் கட்ட ஆரம்பித்தேன். தற்போது 10ஆம் வகுப்புவரை எங்கள் ஊர் பள்ளியில் உள்ளது. இனி எங்கள் ஊருக்கு 12ஆம் வகுப்புவரைக்கான பள்ளியையும் கல்லூரியையும் கொண்டு வருவதுதான் என்னுடைய இலக்கு. அதற்காக நிறைய பேர் நன்கொடை கொடுத்துவருகிறார்கள். மேலும், எனக்கு வரும் பரிசுத்தொகை அனைத்தையும் பள்ளி கட்டுவதற்கான நிதிக்கு செலவிடுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியிடமும் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளேன்" என்கிறார்.  

     

மேலும், பத்ம ஸ்ரீ விருது பெற்றது குறித்து அவர் கூறுகையில், "நான் பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் கடை வரிசையில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு திடீரென ஒரு ஃபோன் வந்தது. அந்த முனையில் இருந்து பேசியவர் இந்தியில் பேசியதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கு ஓர் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் ஃபோனை கொடுத்து பேச சொன்னேன். அவர் பேசிவிட்டு, எனக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இவையனைத்தும் கடவுளால் கிடைக்கப்பெற்றவை. இது மாதிரியான பின்புலத்தில் இருந்துவந்து இவ்வளவு பெரிய விருதை நான் பெறுவேன் என்றெல்லாம் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை" என்கிறார்.

 

இன்றும், காலையில் எழுந்து பள்ளியின் அனைத்து வகுப்பறைகளையும் திறந்துவைத்துவிட்டு, மங்களூருவிற்கு ஆரஞ்சு பழம் விற்க சென்றுகொண்டிருக்கும்  ஹரேகலா ஹஜப்பா, தன்னுடைய குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை என இரண்டிலும் எந்த பிரதிபலனும் பாராமல் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துவருகிறார். இதுவரை கர்நாடகாவிலேயே பெரும்பாலான மக்களால் அறியப்படாமல் இருந்த ஹரேகலா ஹஜப்பாவின் புகழை, இந்த பத்ம ஸ்ரீ விருது நாடறியச் செய்யட்டும்.