முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், கணவனோடு வாழ பிடிக்காமல் வீட்டுக்கு வந்த மகளைப் பற்றி பெற்றோர் கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
ஒரு பேரண்ட்ஸ் என்னிடம் வந்து, தங்களுடைய ஒரே மகள் அவரது கணவரோடு தன்னால் வாழ முடியாது என்று கூறி வீட்டில் இருக்கிறாள். என்ன விஷயம் என்று கேட்டாலும் மகள் சொல்வதில்லை. மகளுக்கு என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை என்று கூறினார்கள். நான் அவர்களிடம் விசாரிக்கும் போது, பையனும் வீட்டுக்கு ஒரே பிள்ளை எனத் தெரியவந்தது.
அதன்படி, இந்த வழக்கை நாங்கள் எடுத்துக் கொண்டு, வழக்கம் போல் அந்த பையனை ஃபாலோவ் செய்தோம். பையனுக்கு எந்தவித பிரச்சனை இல்லை என்றும் சந்தோஷமாக இருக்கிறான். அதே போல், பெண்ணும், அவளது வீட்டில் சந்தோஷமாக இருக்கிறாள். பையன் வீட்டில் இரண்டு பேரும் சேர்ந்து இருப்பதா? அல்லது பெண் வீட்டில் இரண்டு பேரும் சேர்ந்து இருப்பதா? என்ற பிரச்சனை தான் இவர்களுக்குள் இருக்கிறது என்பது எங்களுக்கு புரியவந்தது.
அதன் பிறகு, நான் பெண்ணுடைய பெற்றோரிடம் கவுன்சிலிங் ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே பையன் வீட்டுக்கு ஒரே பையன், திருமணம் ஆனபிறகு அவனது வீட்டில் தான் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை உங்கள் மகளுக்கு சொன்னீர்களா? என்று கேட்டதற்கு இல்லை என்றனர். அதே போல், பையன் வீட்டில் பெண் எங்களுடன் தான் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை உங்களிடம் சொன்னார்களா? என்று கேட்டதற்கும் அதற்கும் இல்லை என்றனர். திருமணத்திற்கு முன்னரே இது போன்ற விஷயங்களை சொல்லி திருமணம் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை. இவர்களிடம் விட்டுக்கொடுக்கக்கூடிய தன்மை ஒன்றே இல்லாமல் போய்விட்டது.
அதன் பின்னர், தம்பதி இருக்கும் இடத்தில் அருகாமையிலே தனித்தனியாக இரண்டு வீட்டாரையும் தங்கச் சொன்னேன். இந்த வீட்டிற்கு எத்தனை நாள் வந்து தங்குகிறார்களோ அதே போல், கணவன் வீட்டிலும் அத்தனை நாள் தங்க வையுங்கள் எனச் சொன்னேன். காலையில் சீக்கிரம் எழ வேண்டும், சமைக்க வேண்டும் என்ற கண்டிசன் எல்லாம் கணவன் வீட்டில் போடுகிறார்கள் என அந்த பெண் கூறினாள். அம்மா பேச்சை கணவன் கேட்கிறான் என்றும் கூறினாள். அதன் பிறகு, கணவனோடு தனியாக இருங்கள் என்றும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் அப்பா வீட்டிலும் மாமனார் வீட்டிலும் மாறி மாறி இருங்கள் என்று அட்வைஸ் செய்தேன். மேலும், இரண்டு பேருக்கும் சேர்த்து கவுன்சிலிங் கொடுத்தேன். சிங்கிள் குழந்தைகளாக இருந்ததால், விட்டு கொடுக்கும் மனப்பான்மை அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. இரண்டு பேருக்கும் கவுன்சிலிங் கொடுத்ததில், புரிய ஆரம்பித்து சேர வாழ ஆரம்பித்தார்கள்.