முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், காணாமல் போனமகளும், அவளுடைய தோழிகளையும் கண்டுபிடித்த தருமாறு பெற்றோர் கொடுத்த ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
வேலை பார்ப்பதற்காக வெளியூர் வந்து வீடு எடுத்து தங்கியிருந்த மகளும், அவளோடு தங்கியிருந்த 3 பெண்களும் காணவில்லை எனப் பெற்றோர் என்னிடம் கூறி அவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கேட்டார்கள்.
நாங்கள் அந்த கேஸை எடுத்து, போலீஸ் உதவியுடன் அவர்களைத் தேட ஆரம்பித்தோம். அவர்களின் நம்பரை ட்ராக் செய்து பார்த்ததில், அவர்களின் நம்பர் ஒரு குறிப்பிட்ட நம்பரை காண்டாக்ட் செய்யப்பட்டிருக்கிறது. இது காதல் விவகாரம் கிடையாது என நாங்கள் முடிவு செய்துவிட்டோம். அந்த பிள்ளைகளின் நம்பர், கடைசியில் எந்த இடத்தில் ஸ்விட் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது என்பது சோதனை செய்துவிட்டு, அந்த குறிப்பிட்ட நம்பரையும், ட்ராக் செய்ய ஆரம்பிக்கிறோம்.
அந்த குறிப்பிட்ட நம்பர், ஒரு வெளி மாநிலத்தை காண்பிக்கிறது. நாங்கள், ஒரு குழுவுடன் அந்த மாநிலத்திற்குச் சென்று குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்தால் அங்கு அந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். நகை, பணம் எதுவும் இல்லாமல் இருந்த அவர்களை மீட்டு இங்கு அழைத்து வந்து விசாரித்தோம். பிள்ளைகள் வேலையில் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கவில்லை என நினைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில், ஒரு கும்பல் இந்த பெண்களிடம் நன்றாக பழகி ஃபாரினில் வேலை வாங்கி தருவதாகப் பொய் சொல்லியிருக்கிறது. அந்த பெண்களும் அவர்களை நம்பி அவர்களோடு அந்த மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு சென்ற கும்பல், விசா எடுப்பதற்கும், வேலை வாங்கி தரும் ஏஜெண்டுக்கும் பணம் தேவை என சொன்னதால், பெண்களும் தங்களுடைய நகைகள், பணத்தை எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். குறுகிய காலத்திலேயே அவர்களை மீட்டதால், அவர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
படிப்பிற்காகவோ, வேலைக்காகவோ வெளியூர் செல்லும் பிள்ளைகளைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். தனக்கு என்ன திறமை இருந்தால் இவ்வளவு சம்பாரிக்க முடியும் என்பதைப் பெற்றோர் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.