முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மகனே தன் அம்மாவை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.
மனதிற்கு கஷ்டமான வழக்கு இது. தனது அம்மாவிற்கு வேறொருடன் தொடர்பு இருக்கிறது என்று ஒருவர் வந்தார். நான் பத்தாவது படித்தபோதே இருந்தது. ஆனால் அப்போதே அந்த உறவை முறித்தோம். அதற்கு பிறகு நன்றாக இருப்பதாகத்தான் நினைத்தோம். ஆனால் இப்போது மீண்டும் தொடர்வது போல் உள்ளது. எனவே நீங்கள் என்னவென்று கண்டுபிடித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சரி என்று கேஸ் எடுத்து, அவரை பின்தொடர்ந்ததில் அந்த மகன் சொன்னது உண்மைதான் என்று உறுதி ஆனது.
ஒரு வாரம் கழித்து அவர் அம்மா வெளியே கிளம்பும்போது அந்த பையன் எங்களுக்கு தகவல் கொடுத்தார். அதை வைத்து பின்னால் தொடர்ந்தோம். அப்படி அந்த அம்மாவின் கார் சிறிது தூரம் சென்று ஒரு இடத்தில் நிற்கிறது. அதில் ஒரு நபர் ஏறுவதை பார்த்தோம். இருவரும் இ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஒரு ரிசார்ட்டில் செல்வதைப் பார்த்து, தேவையான வீடியோ ஆதாரங்களை வெளியிலிருந்து எடுத்துவிட்டு அந்த மகனிடம் கொடுத்தோம். அந்த பையனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எப்படியாவது இதனை தடுத்தாக வேண்டும். என்ன செய்யலாம் மேடம் என்று என்னிடம் கேட்டார். அவர்களுடையது வசதியான குடும்பம். பெயர் கெட்டுப் போய்விடும் என்று கவலைப்பட்டார். உங்கள் அம்மா பழகும் அந்த மர்ம நபரை பற்றி தெரியுமா என்று கேட்டோம். அவர் தெரிந்த பழக்கமான நபர் தான் என்றார் அவர்.
சரி அவரிடம் நமக்கு தெரியாத மறுபக்கம் இருக்கலாம். எனவே நாம் அவரை பின்தொடர்வோம். ஏதாவது தகவல் கிடைக்கலாம். அதை வைத்து மேலே செய்வது பற்றி பார்ப்போம் என்று கூறி அவரை தொடர்ந்தோம். அவரை பின்தொடர்ந்து கவனிக்கையில் எங்களுக்கு தலையே சுற்றிவிட்டது. அவர் இந்த அம்மா என்று இல்லை, அவர் இன்னொரு பெண்மணியுடனும் தொடர்பில் இருக்கிறார். அந்த பெண்மணியுடனும் ஊர் சுற்றுவது என்று இருக்கிறார். அந்த பெண்ணோ கணவனை இழந்த விதவை என்று அறிந்தோம். இந்த நபருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் வேறு இருக்கின்றனர் என்பதையும் கண்டுபிடித்தோம். இப்படியே எல்லா தகவலையும் சேகரித்து அந்த பையனை அழைத்து அனைத்தையும் சொன்னோம்.
இந்த நபருக்கு உன் அம்மா மட்டும் இல்லை நிறைய பெண்மணியுடனும், அதுவும் குறிப்பாக மூத்த வயதில் இருப்பவரிடம் தான் பழக்கம் வைத்திருக்கிறார் என்று ஆவணங்களை கொடுத்துவிட்டு, அம்மாவிடம் இதையெல்லாம் சொல்லி அவர் நல்லவர் இல்லை என்று எடுத்துச் சொல்லுங்கள் என்று அனுப்பி வைத்தோம். இதற்கு மேல் முடிவெடுக்க வேண்டியது அந்த அம்மாவின் கையில் தான் உள்ளது. இதைப் போன்ற சில நெருடலான விசயங்களையும் டிடெக்டிவ் பண்ண வேண்டியது வரும். அதை கவனத்துடன் கையாள்வதில் பொறுப்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்.