ஆன்லைன் காதலில் விழுந்து கணவரையும் மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு காதலனுடன் செல்லவிருந்த அக்காவை காப்பாற்றிய தம்பியின் வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.
திருமணமான ஒரு பெண் தன் மூன்று மகள்களையும் விட்டுவிட்டு தன்னுடைய காதலனுடன் செல்ல வேண்டும் என்று கூறி விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்தார். ஆன்லைனில் ஏற்பட்ட நட்பு அது. அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வந்தார். விவாகரத்து குறித்து தன்னுடைய குழந்தைகளிடமும் தெரிவித்தார் அந்தப் பெண். குழந்தைகள் எவ்வளவு கெஞ்சினாலும் அவர் மனம் மாறவில்லை. அவருடைய கணவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நடந்த சம்பவங்களை அந்தப் பெண்ணுடைய தம்பியிடமும் குடும்பத்தாரிடமும் தெரிவித்தார் கணவர்.
தகவல் தெரிவித்த கையோடு அந்தப் பெண்ணை அவர் ஆசைப்படி இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். அவருடைய தம்பி என்னிடம் வந்தார். தன்னுடைய அக்கா காதலிக்கும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை விசாரிக்கச் சொன்னார். நாங்களும் விசாரணையைத் தொடங்கினோம். குறிப்பிட்ட அந்த நபர் பகலில் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. இரவானதும் அவர் கிளப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தார். அங்கு அவருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்தது. இவை அனைத்தையும் பெண்ணின் தம்பியிடம் நாங்கள் தெரிவித்தோம்.
அந்த நபர் ஒரு பெண் பித்தர் என்பது தெரிந்தது. அந்தப் பெண்ணை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரவைக்கும் அளவுக்கு அவரை அந்த நபர் மயக்கியுள்ளார். நாம் கொடுத்த ரிப்போர்ட் குறித்து தன்னுடைய அக்காவிடம் சொன்னார் தம்பி. அதன் பிறகு தன்னுடைய கணவரிடமே தான் செல்ல விரும்புவதாக அந்தப் பெண் கூறினார். வெளிநாட்டில் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட தனிமையே அவரை இந்த நிலைக்கு இட்டுச் சென்றது. எதற்காக தன்னுடைய கணவரை விட்டுவிட்டு இங்கே வந்தோம் என்று அவர் அதன் பிறகு வருத்தப்பட ஆரம்பித்தார். மீண்டும் தன்னுடைய கணவரிடம் அவர் சென்றார். இப்பொழுது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்.