தன்னுடைய துப்பறியும் பணியில், தான் சந்தித்த பல்வேறு விசித்திரமான அனுபவங்கள் குறித்து நம்மிடம் விவரிக்கிறார் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி.
என்னுடைய பெரும்பாலான உறவினர்களுக்கு என்னுடைய பணி குறித்து தெரியும். அந்தக் காலத்திலேயே காதல் திருமணம் செய்தவள் நான். ஆனால் அதற்கு என்னுடைய குடும்பத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. அவர்கள் என்னை வரவேற்றார்கள். என்னுடைய உறவினர்கள் முற்போக்காளர்கள் என்பதால் இந்தப் பணி குறித்த புரிதலும் அவர்களுக்கு இருக்கிறது. ஒருமுறை தங்களுடைய பெண்ணைப் பின்தொடர்ந்து அவள் குறித்த தகவல்களை அளிக்குமாறு ஒரு பெற்றோர் என்னிடம் கூறினர். எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.
கல்யாணத்திற்கு அவர்களுடைய பெண் மறுப்பதாகவும், வீட்டிற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என்றும், அதனால் அவளைப் பின்தொடர வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். நாங்கள் அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்தோம். முதல் இரண்டு நாட்கள் ஆபீசிற்கும் வீட்டுக்கும் மட்டுமே அந்தப் பெண் சென்றாள். அதன் பிறகு ஒருநாள் அந்தப் பெண் ஒரு அபார்ட்மெண்டுக்குள் சென்றாள். நீண்ட நேரம் கழித்து வெளியே வந்தாள். அப்போது தான் தெரிந்தது அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று. அந்த வீட்டில் அவளுடைய கணவர் வசித்து வந்தார்.
திருமணம் நடந்ததை உறுதிப்படுத்திய பிறகு அவளுடைய பெற்றோரிடம் மெதுவாக உண்மையைக் கூறினோம். அதன் பிறகு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தோம். பிறகு ஒருநாள் அந்தப் பெண்ணிடமும் தனியாகப் பேசினோம். தனக்குத் திருமணமானதை அவளே ஒப்புக்கொண்டாள். தனக்கும் தன்னுடைய பெற்றோருக்கும் இது சம்பந்தமாக இருந்த முரண்கள் குறித்து விளக்கினாள். குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் அந்தப் பையன் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்னதாலும், தன்னை வேலைக்குச் செல்ல அனுமதித்ததாலும் அவனைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறினாள். அந்தப் பெண்ணை அவளுடைய பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்.
இன்றைய பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். தங்களுடைய கனவுகளை நிறைவேற்றும் கணவர்கள் வேண்டும் என்று நினைக்கின்றனர். அதில் தவறில்லை. கணவன் மனைவி இருவரும் ஒருங்கிணைந்து வாழ்ந்தால்தான் நல்ல வாழ்க்கை அமையும். துப்பறிவு தொடர்பாக புத்தகங்கள் எல்லாம் நான் படித்ததில்லை. கேள்வி ஞானம் அதிகம் எனக்கு. தவறான ரிப்போர்ட்டுகளை யாருக்கும் நான் எழுதித் தருவதில்லை. நாங்கள் பார்க்கும் உண்மைகளை மட்டுமே எழுதித் தருகிறோம். சட்டத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பான எதையும் நாங்கள் செய்வதில்லை. அதுதான் இத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் நிலைத்து நிற்பதற்கான காரணம்.