Skip to main content

இரவில் கதவை தட்டிய போலீஸ்; கணவனின் புகாரால் வெறுத்துப்போன மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 74

Published on 29/08/2024 | Edited on 29/08/2024
advocate santhakumaris valakku en 74

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

ஷியாமிளா என்ற பெண்ணுடைய வழக்கு இது. பாண்டிச்சேரியைச் சேர்ந்த இவர், சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்துள்ளார். வீட்டுக்கு ஒரே மகளான இவருக்கு, சென்னையில் இருந்து கார் டிரைவரான மாப்பிள்ளை வரன் வருகிறது. பெண்ணுக்கு 20 பவுன் நகை போட்டு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணம் நடந்த சில நாட்களில், அந்த வாழ்க்கை நன்றாக தான் செல்கிறது. காலையில் வேலைக்கு செல்லும் கணவன், மாலையில் வீடு திரும்பும் போது மது குடித்துக் கொண்டு வந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷியாமிளா, இது பற்றி கணவனிடம் கேட்டால், நண்பர்கள் ஆசைப்பட்டதால் குடித்ததாக சமாளித்துள்ளார். ஆனால், தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் கணவன் மது குடித்து தான் வருகிறார். 

இனிமேல் மது குடிக்க வேண்டாம் என ஷியாமிளா அன்பால் அட்வைஸ் செய்தாலும், அவளது கணவன் திருந்தாமல் தினமும் குடித்து தான் வருகிறார். கணவன் ஓட்டும் கார் அவனுடையது அல்ல, வாடகைக்கு எடுத்து ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்பது போக போக தான் ஷியாமிளாவுக்கு தெரிகிறது. தான் சம்பாரிக்கும் பணம் எல்லாம், வாடகைக்கு போகும் வருத்தத்தில் தான் குடிப்பதாக கணவன் கூற, ஷியாமிளாவின் அம்மா தன்னுடைய செயினை அடமானம் வைத்தும் மேலும் பணத்தை போட்டும் மொத்தம் 70,000 ரூபாயை மருமகனுக்கு சொந்தமாக கார் வாங்க கொடுக்கிறார். மேலும் அவனது மாமியார், இனிமேல் குடிக்க மாட்டேன் என்று கற்பூரம் மேல் அடித்து சத்தியம் செய்ய சொல்ல, அவனுக்கு சத்தியம் செய்கிறான். இதையடுத்து, அவன் பேங்கில் லோன் எடுத்து சொந்தமான ஒரு காரை வாங்குகிறான். 

கார் வாங்கிய புதுசில், நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் குடிக்க, ஷியாமிளா அவனோடு சண்டை போடுகிறாள். சில மாதங்களுக்கு பிறகு, கார் வாங்கியதற்காக எடுத்த லோன் பணத்தை, கட்டாமல் போனதால் பேங்கில் இருந்து ஆள் வந்து காரை சீஸ் செய்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். தினமும், வீட்டுக்கு குடித்து வருவதால், ஆத்திரத்தில் கணவனை வெளியே தள்ளி பூட்டிவிடுவாள். வெளியே இருக்கும் அவன், மனைவியை கண்டமேனிக்கு கெட்ட வார்த்தையால் திட்டுவான். இதனிடையே, அவர்களுக்குள் மூன்று குழந்தை பிறந்துவிட்டது. இப்படி கெட்ட வார்த்தையால் திட்டுவதால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று ஷியாமிளா சொன்னாலும், கணவன் ஜன்னல் வழியே கற்களை வீட்டிற்குள் எறிகிறான். பொறுத்து பொறுத்துப் போன ஷியாமிளா, அடுத்த நாள் காலை போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று கணவன் மீது கம்ப்ளைண்ட் கொடுக்கிறாள். போலீஸும், அவனை வரச்சொல்லி விசாரித்து, அவரவர் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள வேண்டும், எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் முடித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் எழுதி வாங்கி அனுப்பியுள்ளார்கள். 

வாழ்க்கையை சமாளிக்க, ஷியாமிளா சமையல்காரியாக வீட்டு வேலைக்கு சென்று வாழ்க்கையை நகர்த்து கொண்டிருக்கிறாள். பெற்றோர் அறிவுறுத்தலின்படி, ஒரு இடத்தில், கொஞ்ச கொஞ்சமாக பணத்தை சேமித்து குடிசை போட்டு குழந்தைகளோடு ஷியாமிளா வசித்து வருகிறாள். ஒரு நாள், ஷியாமிளா வேலைக்குச் சென்ற பின், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஆண் குழந்தையை அவளது கணவன் தூக்கிக் கொண்டு போகிறான். வீட்டில் குழந்தை இல்லாததால், போலீஸ் ஸ்டேசனில் குழந்தையை காணவில்லை என கம்ப்ளைண்ட் கொடுக்கிறாள். கணவன் மீது சந்தேகப்பட்ட போலீஸ், அவனை அழைத்து வந்து விசாரித்தால் ஒப்புக்கொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில், தப்பான பெண்ணிடம் குழந்தை வளர்ந்தால் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் குழந்தையை தான் எடுத்துக்கொண்டதாக உண்மையை ஒப்புக்கொண்டான். குழந்தையை ஷியாமிளாவிடம் ஒப்படைக்க சொன்ன பின்னாலும், அவன் 1 மாதம் வரை ஒப்படைக்காமல் இருக்கின்றான். 1 மாதம் கழித்து போலீஸுக்கு அவன் குழந்தையை ஒப்படைத்த பின்னால், அப்பாவுடன் தான் இருக்கப் போவதாக அந்த குழந்தையை சொல்ல வைக்கிறான். அந்த குழந்தையும், அப்பாவோடு வளர்கிறது. இப்படியே நாட்கள் செல்கிறது.

ஷியாமிளா வீட்டுக்கு அடிக்கடி வந்து, மனைவியை வேறு ஆண்களோடு ஒப்பிட்டு தவறான வார்த்தைகளால் பேசுகிறான். ஒரு நாள் இரவில், ஷியாமிளா வீட்டுக்கு போலீஸோடு கணவன் வருகிறான். ஷியாமிளா வீட்டில் விபச்சார தொழில் செய்வதாக போலீசிடம் கணவன் புகார் அளித்திருக்கிறான் என போலீஸ் சொல்ல அதிர்ச்சியடைந்து வீட்டை செக் செய்து பாருங்கள் என்கிறாள். போலீசும் அவளுடைய வீட்டை முழுவதுமாக செக் செய்தாலும், இரண்டு பெண் குழந்தைகள், ஷியாமிளாவை தவிர யாரும் இல்லை என்பதை உணர்கின்றனர். அதன் பிறகு, போலீசும் மன்னிப்பு கேட்டுவிட்டு கணவனை அழைத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் தான், ஷியாமிளா என்னிடம் வந்து விஷயத்தைச் சொல்லி, கணவனோடு வாழ விருப்பமில்லை அதனால் டைவர்ஸ் வாங்கித் தர வேண்டும் என்று கூறினாள். அதனால், கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ் போட்டேன். தன்னுடைய 20 பவுன் நகையும், கார் வாங்குவதற்காக கொடுத்த பணத்தையும் திருப்பிக் கேட்டாள். அவன் கொடுக்கவே மறுத்துவிட்டான். கடைசியில், வெறுத்து போய் வேலைக்கு போனால் வாழ்க்கையை நடத்த முடியும், இந்த கேஸை எப்படியாவது முடித்து தர வேண்டும் என்றாள். அதன் பிறகு, மியூட்ச்சுவன் கன்செண்டில் போட்டதால் இருவருக்கும் விவகாரத்து ஆனது.