Skip to main content

தவறி விழுந்த மனைவி; தற்கொலை முயற்சியாக மாற்றிய கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 52

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
advocate-santhakumaris-valakku-en-52

தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

சுசித்ரா என்ற வடநாட்டு பெண்ணின் வழக்கு இது. திருமணம் செய்து கொள்ளும் அந்த பையன் மிகவும் ஜாலியான டைப், எப்போதுமே கலகலப்பான ஆள். சுசித்ராவோ கொஞ்சம் தேவைக்கு மட்டும் பேசும் அமைதியான குணம். திருமணமானவுடன் தன் மனைவி தன்னைப் போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவள் அப்படி மாறவில்லை. அது அவருக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அந்த பெண்ணை ஏதாவது குறை சொல்லி காயப்படுத்தி வந்திருக்கிறார். போதாக் குறைக்கு கூட இருந்தவர்களும், பார்ப்பவர்களும் என்ன இந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறீர்கள், குள்ளமாக இருக்கிறதே என்று ஏற்றி வேறு விடுகிறார்கள். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் என்றாகி ஐந்தாறு வருடங்கள் ஆகியும் தனக்கேற்ற மனைவி அமையவில்லையே என்று இவரிடம் நீங்கா குறை இருந்து வருகிறது. 

ஒருநாள் மாடி பால்கனியில் அந்த பெண் தனியாக உட்கார்ந்திருக்கும்போது தனது வளையல் தவறி கீழே விழ, பதறிப் போய் எடுக்கப்போன போது அங்கிருந்து விழுந்து பலமான அடிப்பட்டுவிட்டது. மருத்துவமனையில் சேர்த்தபோது, போலீசில் புகாரளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதன்படியே அவள் கணவனும் தவறி விழுந்து விட்டதாக எழுதி கொடுக்க, அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, இல்லை யாரும் தள்ளிவிடவில்லை இது தெரியாமல் நடந்த விபத்து தான் என்று நடந்ததை சொல்லி விடுகிறாள். முதுகுத் தண்டு, இடுப்பெலும்பு என்று அடிப்பட்டு நடக்க முடியாமல் வீல் சேரில் தான் இருக்க முடியும் என்று ஆகிவிடுகிறது. கணவனுக்கு மருத்துவமனை செலவு என்று ஆகியதில் ஏற்கனவே இருந்த வெறுப்பு அதிகமாகி மேலும் ஒரு அலட்சியம் வந்துவிடுகிறது. தனியாக விட்டு விடுகிறார். மருத்துவமனையில் கூட ஒரு ஹெல்ப் வைத்துக்கொள்ளுமாறு சொல்லியும் தொடர்ந்து வைக்கவில்லை. இந்த பெண்ணோ பாத்ரூம் கூட போக முடியாமல் சிரமப்பட்டு கணவனிடம், தான் கொஞ்ச நாள் அம்மா வீட்டில் இருந்து வருகிறேன் என்று கேட்க, இதற்காக காத்துக் கிடந்தவர் போல அனுப்பி விடுகிறார். 

மீண்டும் பத்து நாள் கழித்து வந்தபோது, அவளது மாமியார் உள்ளே விடவே இல்லை. உன் கணவன் இருக்கும் நேரம் கேட்டு அவர் இருக்கும் போது வா. இப்போது போய் விடு என்று அனுப்பி விடுகிறார். இவளுக்கு அப்போதுதான் ஏதோ தவறாக இருப்பதாக நினைக்கிறாள். அவரிடமும் பதில் இல்லை. மூன்று மாதம் கழித்து வந்தபோதும் அவர், நீ அன்று செய்தது தற்கொலை முயற்சி. இதுபோன்று மேலும் மேலும் நீ செய்தால் என்னால் உன் கூட வாழ முடியாது. எனவே நீ உன் அம்மா வீட்டிற்கே சென்று விடு என அனுப்பி விடுகிறார். இவள் போன பின்பு அவர் குடும்ப நீதிமன்றத்தில், அவள் என்னை கொடுமைப் படுத்துகிறாள். அடிக்கடி தற்கொலை முயற்சி செய்து கொள்கிறாள். என் குடும்ப வாழ்க்கையே போயிற்று எனவே டிவோர்ஸ் வேண்டும் என்று பொய் வழக்கு போட்டு விடுகிறார்.

இவர்களும் ஒரு வக்கீல் வைத்து வழக்கை நடத்தி பார்க்கிறார்கள். ஆனால் அவர்களால் வக்கீலுக்கு பணம் செலுத்த முடியவில்லை. அவள் நீதிமன்றம் வரும் போதெல்லாம், அவளை நோகடித்து அவர் பேசுகிறார். குழந்தைகளையும் பார்க்க அனுமதிப்பதில்லை. அவளுடைய வக்கீலையும் காசு கொடுத்து வாங்கி விட்டதாக சொல்லி விடுகிறார். இப்படி வேறு வழி இல்லாமல் அந்த பெண் இருந்தபோது தான், ஒருவருடைய சிபாரிசு மூலம் எனக்கு இந்த வழக்கு வருகிறது. அந்த பெண்ணின் பரிதாப நிலைக்கு ஏற்ப அவளுக்காக கோர்ட்டில் வழக்கை மேற்கொண்டு நாங்கள் நடத்தினோம். முதல் கேள்வியாக, அந்த நபரிடம் இந்த பெண் தற்கொலை முயற்சி செய்தாள் என்ற குற்றச்சாட்டு வைத்ததால், எங்கு நீங்கள் பார்த்தீர்கள்? எப்படி செய்தாள்? என்ன மாதிரி முயற்சி செய்தாள் என்றெல்லாம் கேட்கிறோம், அவரிடம் ஒன்று கூட சரியான பதில் இல்லை. எனக்கு தெரியாது என்றே தான் பதில் வருகிறது. அதுபோக அவள் அடிப்பட்ட போது அவள் கணவன் தான் போலீசில் புகார் அளித்திருந்தார். அதிலும் கூட தற்கொலை என்று குறிப்பிடவே இல்லை. விழுந்து விட்டதாகத்தான் குறிப்பிட்டிருந்தார். அதை கோர்ட்டில் கூட தாக்கல் செய்யவில்லை. அதை வைத்து நாங்கள் பேசினோம்.

இது ஒரு மெடிக்கல் லீகல் கேஸ் என்பதால், கண்டிப்பாக மருத்துவமனையில் மனைவியிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கப்பட்டிருக்குமே என்று பார்த்தால், அதிலும் மனைவி போலீஸ் கம்பளைண்ட்டில் தெளிவாக, வளையல் விழப் போய்த்தான் விழுந்து விட்டதாக தெளிவாகச் சொல்லி இருக்கிறாள். எனவே அதற்கும் அந்த நபரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்ததாக இரண்டாவது வக்கீலாக நான் அவள் வழக்கை எடுப்பதால், மீண்டும் ஒருமுறை அவளுக்கு ஒரு அசிஸ்டன்ட் வைத்திருந்ததாக சொல்லப்பட்ட பெண்ணை விசாரிக்க வேண்டி வந்தது. ஆனால் அந்த கணவர் முதல் முறை வேறொரு அசிஸ்டன்ட் பேர் சொல்கிறார், இப்போது வேறொரு பெயர் சொல்கிறார். அந்த அசிஸ்டண்டையும் அவர்கள் வந்து காட்டவில்லை. ஒன்றிலும் உண்மை இல்லை. இதுபோக தன் பிள்ளைகளையும் அம்மாவிடம் அனுப்பாமல், கோர்ட்டில் அவளுக்கு எதிராகப் பேச வைத்திருக்கிறார். 

இதற்கிடையில் அந்த பெண்ணிடம் எதிர் வக்கீல், கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று மனு போட்டாயா என்று கேட்டு அதை வாங்கிப் படிக்கச் சொன்னார். ஆனால் எத்தனை முறை படித்தாலும் அதில் அப்படி ஒரு வார்த்தையே இல்லை. அவளும் தான் எழுதியதாகச் சொல்லி அழுகிறாள். ஆனால் அது எடுபடவில்லை. அங்கேயே அப்போதே நிறுத்திவிட்டு நான் நீதிபதியிடம் அவரிடம் இருக்கும் ஒரிஜினல் மனுவை படிக்குமாறு மெமோ போட்டேன். அடுத்த செஷன் வரும்போது வக்கீல் மீண்டும் அதையே கேட்டபோது, நான் நீதிபதியிடம் இருக்கும் ஒரிஜினலை கேட்டு படிக்குமாறு சொல்ல அவரும் படிக்க அதில் அந்த வார்த்தை இருந்தது. மேலும் தனக்கு ஒரு பைசா கூட காசு வேண்டாம், எனக்கு என் கணவருடன் வாழ வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறாள்.

ஆனால் இவரோ பணம் பறிக்கத்தான் இப்படி செய்கிறாள். ஐந்து வருடமாக எத்தனை செலவு செய்கிறோம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் என்னிடம் நிறைய ஆட்களை பலமுறை அனுப்பி, பணம் கொடுத்து செட்டில் பண்ணி டிவோர்ஸ் வாங்க சொல்லுங்கள் என்றும் அனுப்புகிறார். ஒரு வக்கீலாக நான் என்னுடைய கிளைன்ட்டிடம் காசு செட்டில் பண்ணி டிவோர்ஸ் கொடுத்து விடுங்கள் என்று சொல்ல முடியாது. அது அவரவர் விருப்பம். அந்த பெண்ணிடம் உனக்கு விருப்பம் இருந்தால் செய் என்று விட்டுவிட்டேன். அந்த பெண் மீது தவறில்லை என்றாலும், தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கை பாதிப்பதால், அந்த நபர் இப்படி டிவோர்ஸ் வேண்டும் என்று இப்படியெல்லாம் செய்கிறார் என்று புரிந்தது. ஆனால் இந்த பெண் பணம் வாங்க ஒத்துக்கொள்ளவே இல்லை. கடைசியாக வழக்கு மேல் வாதம் என்று போக ஒரு வழியாக தீர்ப்பு வந்தது. ஆனால், அந்த நபருக்கு டிவோர்ஸ் கொடுத்து விடவேண்டும் என்று தான் தீர்ப்பு வந்தது. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

நாங்கள் மேற்கொண்டு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் போட்டுக் காத்திருக்க, பெண் பக்கம் எந்தவித தவறும் இல்லை. தற்கொலை முயற்சி செய்து கொள்கிறாள் என்று தான் இவர் காரணம் காட்டி டிவோர்ஸ் கேஸ் போட்டிருக்கிறார். ஆனால் அப்படி ஒரு விஷயம் எதுவுமே நடக்கவில்லை. அவரிடமும் அதற்கான ஆதாரம் இல்லை என்றும் அந்த பெண் தன் கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் கேட்டிருக்கிறாள் எனவே, அவர் தன் மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்ப்பு மாறி வந்தது. ஆனால் என்னதான் ஐந்து வருடம் கழித்து தீர்ப்பு வந்தாலும், அவர்கள் இப்போது சேர்ந்து வாழவில்லை. அவர் தன் குழந்தைகளை எந்த குறையும் இல்லாமல் நன்றாக படிக்க வைத்து லண்டன் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இருவரும் தனித்து தான் வாழ்கிறார்கள்.