Skip to main content

பழி வாங்கிய சைக்கோ மாப்பிள்ளை; பெண் எடுத்த துணிச்சல் முடிவு - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண் : 14

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

 Advocate Santhakumari's Valakku En - 14

 

ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டு, சைக்கோ கணவர்களிடம் சிக்கிக்கொண்டு தவிக்கும் பெண்கள் நம் நாட்டில் ஏராளம். அப்படிப்பட்ட ஒரு வழக்கு குறித்து நம்மிடம் விவரிக்கிறார் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்கள்.

 

பவித்ரா என்கிற பெண். மிக அழகானவள். திருமணம் நிச்சயமான தகவலை அவளுடைய பெற்றோர் அவளிடம் கூறினர். அவள் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை. மாப்பிள்ளையைக் கல்யாண நாள் வரை பார்க்கும் வாய்ப்பு அவளுக்கு வாய்க்கவில்லை. மாப்பிள்ளை அழகில் குறைவாக இருந்தார். ஆனால் இவளால் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. திருமணத்தன்று மாப்பிள்ளையுடன் வந்த அவரின் சகோதரரைப் பார்த்து அவளுடைய தந்தை "என்னப்பா நீயே மாப்பிள்ளை மாதிரி வருகிறாய்" என்றார். 

 

தமாஷாக சொன்ன இந்த விஷயம் மாப்பிள்ளையை உறுத்தியது. திருமணம் முடிந்தது. முதலிரவில் அவன் கடுகடுவென்று இருந்தான். அவனுடைய காலில் விழுந்து நமஸ்காரம் செய்ய அவள் முயன்றபோது "உங்கப்பன் தான் சொன்னானே என் தம்பி தான் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறான் என்று. அவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு" என்றான். அவளுக்கு அதிர்ச்சியானது. முதலிரவு நடக்கவில்லை. அடுத்த நாள் தன்னுடைய பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறினாள்.

 

அடுத்த நாள் அவளுடைய தந்தை மாப்பிள்ளையிடம் சென்று தன்னுடைய தமாஷான வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டார். அதன் பிறகும் அவன் மாறவில்லை. அவள் அழகாக இருக்கிறாள் என்று அனைவரும் சொல்லச் சொல்ல இவனுக்கு அவள் மேல் ஒரு தீராத பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் தன் தம்பியோடு அவளை சேர்த்து வைத்து சந்தேகப்படுவது போல் பேசினான். இவளால் தாங்கவே முடியவில்லை.

 

அவனுடைய தாய் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவன் திருந்தவில்லை. ஒருநாள் அவள் தன் பெற்றோர் வீட்டுக்கு கிளம்பி வந்தாள். இனி அங்கு தன்னால் வாழ முடியாது என்றாள். அவளுடைய தந்தை எவ்வளவோ முயன்று பார்த்தும் இவளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு வரவில்லை. இந்த நேரத்தில் அவள் கர்ப்பமாகிறாள். அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் என்பது தெரிந்தது. இதனால் சற்று முன்பாகவே பெற்றோர் வீட்டுக்கு அவள் வர வேண்டியிருந்தது.

 

அதன் பிறகு அவள் கணவன் வீட்டுக்குத் திரும்பச் செல்லவேயில்லை. இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவன் வந்து பார்த்துவிட்டுச் சென்றான். ஆனால் இவளை அழைத்துச் செல்லவில்லை. இவளும் இனி அங்கு செல்லும் எண்ணமில்லை என்று கூறிவிட்டாள். அதன் பிறகு பெற்றோர் வீட்டிலேயே இருந்து அவள் எம்.பி.ஏ படித்தாள். நாங்கள் அவளுக்கு விவாகரத்து வேண்டி வழக்கு தொடுத்தோம். விவாகரத்து கிடைத்தது. அவனிடமிருந்து நிரந்தர ஜீவனாம்சமும் பெற்றோம். அந்தத் தொகை குழந்தைகளின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டது. இன்று அந்த இரண்டு பெண்களும் வளர்ந்து, சுயமரியாதையோடு வாழ்கின்றனர். அத்தனை பெருமைகளும் பவித்ராவையே சேரும்.