திருமண மோசடிகள் குறித்து பல்வேறு வழக்குகளின் மூலம் நமக்கு விளக்கி வரும் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்கள் அதில் விசித்திரமான ஒரு வழக்கு பற்றி இப்போது விவரிக்கிறார்
சிந்தியா என்கிற பெண்ணுடைய வழக்கு இது. தன்னுடைய கணவர் தங்களுடைய திருமணமே செல்லாது என்று அனுப்பிய நோட்டீசுடன் என்னிடம் வந்தாள். முதல்வர் தாலி எடுத்துக் கொடுக்க விமரிசையாக நடைபெற்ற அரசியல்வாதியின் குடும்பத் திருமணம் அது. சிந்தியா ஒரு அரசியல் கட்சித் தலைவரின் மகள். அந்தக் கட்சியில் இளைஞரணி நிர்வாகியாக இருந்த ஒருவரோடு காதல் ஏற்பட்டு, அது திருமணம் வரை சென்றது.
திருமணத்திற்குப் பிறகு கணவரோடு உலகம் முழுக்க அவள் பயணித்தாள். இரண்டு குழந்தைகள் பிறந்தன. கணவரோடு இணைந்து பயணிக்கும் வாய்ப்புகள் குறைந்தது. இருவருக்குமான இடைவெளி அதிகரித்தது. திடீரென திருமணம் செல்லாது என்று கணவர் வழக்கு தொடர்ந்திருந்தார். திருமணத்திற்கான ஆதாரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். ஆனால் திருமணம் செல்லாது என்று குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது தான் வழக்கறிஞர் பணிக்கு அறிமுகமாகியிருந்த எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.
சுயமரியாதைத் திருமண முறையில் நடைபெற்ற திருமணம் அது. ஒருவர் இந்து ஒருவர் கிறிஸ்தவர் என்பதால் நீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தக் குழந்தைகளின் நிலை என்னவாகும், இந்தத் திருமணம் செல்லுபடி ஆகாவிட்டால் பெண் மற்றும் குழந்தைகளின் மீது களங்கம் ஏற்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை வைத்து வாதிட்டேன். அதன் பிறகு திருமணம் செல்லும் என்கிற தீர்ப்பு வந்தது. இரண்டு இந்துக்கள் செய்து கொள்ளும் திருமணம் தான் சுயமரியாதைத் திருமண முறையில் செய்துகொள்ள முடியும்.
மற்றவர்கள் ஸ்பெசல் மேரேஜ் ஆக்ட் முறையில் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். அந்தத் தம்பதியினர் கடைசி வரை பிரிந்தே வாழ்ந்தனர். அவர்களின் குழந்தைகளுக்கும் தற்போது திருமணம் முடிந்துவிட்டது. திருமணத்திற்கு முன்பு சட்டங்கள் குறித்த சரியான புரிதல் அனைவருக்கும் வேண்டும். என்னுடைய ஆரம்ப காலத்தில் நான் சந்தித்த இந்த வழக்கு என்னால் மறக்கவே முடியாதது.