தவறான பழக்கங்களால் பெண்களைக் கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டும் நிலை இன்றும் பல குடும்பங்களில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வழக்கு குறித்து குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விளக்குகிறார்.
ஒருமுறை சமையலுக்கு ஆள் வேண்டும் என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் கௌரி என்கிற பெண். அடுத்த நாள் எங்கள் வீட்டுக்கு வந்தாள். தானே எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்ய விரும்புவதாகக் கூறினாள். தன் தாயிடம் சொல்லாமல் அவள் வந்திருந்தாள். இதுபற்றி அறிந்தால் தன் தாய் மிகவும் வேதனைப்படுவார் என்று கூறினாள். ஏன் அவள் வேலைக்குச் செல்லும் நிலைக்கு வந்தாள் என்று விசாரித்தேன்.
கௌரிக்கு காயத்ரி என்கிற அக்கா இருந்தாள். கடன் வாங்கி அவளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவளுடைய தந்தையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதனால் அவர் அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் கடன் பெற்றார். அந்தப் பெண்ணுக்கும் அவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் தாய்க்கு சந்தேகம் வந்தது. அதன் பிறகு அவர் பகிரங்கமாகவே இந்த நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தார்.
வீட்டிற்கு அவர் பணம் கொடுப்பது குறைந்தது. பள்ளிக் கட்டணம் செலுத்த கௌரி பணம் கேட்டபோது "சித்தியிடம் பெற்றுக்கொள்" என்றார். மனதளவில் உடைந்து போனாள் கௌரி. டியூஷன் எடுத்து குடும்பத்தைக் காப்பாற்றினாள் தாய். ஒரு கட்டத்தில் அவர்களை வீட்டை விட்டே வெளியேற்ற முடிவு செய்தார் தந்தை. இதனால்தான் கௌரி தானே வேலைக்குச் செல்ல முடிவெடுத்து என்னிடம் வந்தாள். அவளுக்கு நீதி பெற்றுத் தர முடிவெடுத்தேன்.
அவளுடைய தாயை அழைத்து ஜீவனாம்சம் கேட்டு வழக்குப் போடச் சொன்னேன். இது குறித்து ஒவ்வொரு மதமும் தனிச்சட்டம் வைத்திருந்தாலும் ஜீவனாம்சம் கேட்பதற்கான பொதுவான சட்டமும் இருக்கிறது. தந்தை குறைவான சம்பளம் பெறுபவர் என்பதால் மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் ஜீவனாம்சம் பெற முடிந்தது. குடும்ப வன்முறைச் சட்டத்தின்படி கணவனின் வீட்டில் வாழும் உரிமை மனைவிக்கு உள்ளது. அதனால் அந்த வீட்டை அவர் விற்கக் கூடாது என்றும் வழக்கு தொடர்ந்தோம். அதிலும் வெற்றி பெற்றோம். இதுபோன்ற சட்டங்கள் குறித்த புரிதல் பெண்களுக்கு அதிகம் வேண்டும்.