Skip to main content

தந்தை பாசத்தை வென்ற தாய்ப்பாசம்; கண்ணீர் கிளைமேக்ஸ் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண் : 09

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

Advocate Santhakumari's Valakku En - 09

 

துணை என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் முக்கியம். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே அறம். அந்த வகையில் தன்னிடம் வந்த ஒரு வழக்கு குறித்து நம்மிடம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.

 

சௌமியா என்கிற பெண்ணின் வழக்கு இது. 11 வயதான சௌமியாவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கருத்து வேறுபாடு. குழந்தையின் மீது அப்பாவுக்கு பாசம் அதிகம். அப்பாவும் அம்மாவும் பிரிவது என்று முடிவெடுத்தவுடன் சௌமியாவை அழைத்துக் கொண்டு அவளுடைய அம்மா தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சௌமியாவுக்கு அந்த சூழல் பிடிக்கவில்லை. மீண்டும் நம் வீட்டுக்கே சென்று விடலாம் என்று கூறினாள். அங்கு தான் அவள் விரும்பிய அனைத்தும் கிடைத்தது. 

 

குழந்தைக்காக அப்பா நீதிமன்றத்தில் ஒரு மனு போடுகிறார். விசாரணையின்போது தனக்கு தாத்தா வீட்டில் அம்மாவோடு இருக்கப் பிடிக்கவில்லை என்றாள் சௌமியா. சௌமியாவின் தாய் வேலைக்கு செல்லாதவர். ஆனால், தந்தை மிகவும் அன்பானவர், வசதியானவர். அவரால் சௌமியாவுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க முடியும். தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி, குழந்தை தந்தையோடு இருக்கலாம் என்று உத்தரவிட்டது நீதிமன்றம். சௌமியாவின் அப்பா அதன் பிறகு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 

 

காலம் செல்லச் செல்ல சௌமியாவுக்கு அந்த சூழல் பிடிக்காமல் போனது. சித்தி கொடுமை நாளுக்கு நாள் அதிகமானது. அங்கு இருக்க முடியாமல் ஒரு நாள் எதிர்வீட்டில் இருந்த எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் ஓடி வந்தாள் சௌமியா. ஒரு நாள் அந்த சித்தி வீட்டிற்கு நான் சென்றேன். சௌமியாவையும் தன் குழந்தை போல அவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் செய்தேன். ஆனால், அந்தப் பெண்ணின் பேச்சு கறாராக இருந்தது. சௌமியாவின் தந்தையும் அங்கு வந்தார். இருவரும் சேர்ந்து என்னிடம் கோபத்தை வெளிப்படுத்தினர். நான் அங்கிருந்து வெளியேறினேன்.

 

குழந்தைகள் நல மையத்திற்கு அழைத்து நடந்த அனைத்தையும் சொன்னேன். அவர்கள் நேரடியாக வீட்டிற்குச் சென்று விசாரித்தனர். அவர்களிடம் அனைத்தையும் கூறி அழுதாள் சௌமியா. குழந்தையை அவளுடைய தாயிடம் சேர்க்க முடிவு செய்தனர். குழந்தையைப் பாதுகாக்கும் உரிமையைத் தனக்கு வழங்கச் சொல்லி சௌமியாவை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். நீதிமன்றம் குழந்தையை அழைத்து விசாரித்தபோது, தான் தன்னுடைய தாயுடன் செல்லவே விரும்புவதாகக் கூறினாள் சௌமியா. அதன்படியே தாயுடன் செல்ல அனுமதித்தது நீதிமன்றம். குழந்தையின் நலனை சிந்தித்தே பெற்றோர் எப்போதும் முடிவுகளை எடுக்க வேண்டும். இது குறித்த கடுமையான சட்டங்களும் அமல்படுத்தப்பட வேண்டும்.