பாலைவனத்தில் இருந்தாலும் தங்களுடைய மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்கிறார் என்று சொல்லிக்கொள்வதில் நம் பெற்றோருக்கு பெருமை அதிகம். அது பல நேரங்களில் தவறாக அமைந்து விடவும் வாய்ப்புண்டு. அப்படிப்பட்ட வழக்கு ஒன்று பற்றி நம்மிடம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விளக்குகிறார்
ஜெர்மனியைச் சேர்ந்த கவிதா என்கிற தமிழ் பெண்ணுடைய வழக்கு இது. ஒருமுறை டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பொருட்களை வாங்கிவிட்டு தன்னுடைய கணவரின் காருக்காக அவர் வெளியே காத்திருக்கிறார். ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோமே என்கிற சோர்வு அந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் இது. இருவரும் படித்தவர்கள். மாப்பிள்ளை ஜெர்மனியில் இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பாக அமைந்தது.
பெற்றோரை விட்டு வெளிநாடு செல்ல அந்தப் பெண் விரும்பாவிட்டாலும் கட்டாயப்படுத்தி திருமணத்தை நடத்தி வைத்தனர் பெற்றோர். அங்கு சென்ற பிறகுதான் கணவருக்கு தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது தெரிந்தது. தாம்பத்தியத்தில் ஈடுபட்டாலும் அவளை அவரால் திருப்திப்படுத்த முடியவில்லை. ஏன் என்று விசாரித்த போது இந்த விஷயத்தில் தனக்கு ஒரு குறைபாடு இருப்பது பற்றி விளக்கினார். திருமணத்திற்கு முன்பே தனக்கு இது தெரியும் என்றும் கூறினார்.
மருத்துவரை சந்தித்து இதற்குத் தீர்வு பெறலாம் என்று இருவரும் முடிவெடுத்தனர். இரண்டு மாதங்களுக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை அவர் உட்கொண்டார். அதன்பிறகு தாம்பத்திய நிலையை பரிசோதிக்க மருத்துவர்கள் கூறிய ஆலோசனைகளை ஏற்று அவள் தயாரானாள். ஆனால் இது சரிப்படுத்த முடியாத ஒரு குறையாக இருப்பது அப்போது தெரிந்தது. என்ன செய்வதென்று அவளுக்குப் புரியவில்லை.
தன்னுடைய உணர்வு முக்கியம் என்றும், இது தன் மீது திணிக்கப்பட்ட வன்முறை என்பதையும் உணர்ந்த அந்தப் பெண், தன் பெற்றோரை சந்திக்க இந்தியா புறப்பட்டாள். தன்னுடைய கணவர் எவ்வளவோ தடுத்தும் அவள் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இங்கு வந்த பிறகு அந்தப் பெண் என்னை சந்தித்தாள். நீதிமன்றத்தில் விவாகரத்திற்காக வழக்கு தொடுத்தோம். அந்தப் பெண் சொல்வது அனைத்தும் பொய் என்றும், அவளுக்கு இன்னொருவருடன் தொடர்பு இருக்கிறது என்றும் அவளுடைய கணவர் நீதிமன்றத்தில் அவதூறாகக் கூறினார்.
இதற்கு முன்பு அவளுடைய கணவர் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்ற விவரங்களையும், மருத்துவர்கள் கொடுத்த ரிப்போர்ட்டுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். அதன் பிறகு தன்னுடைய தவறுகளை அவன் ஒப்புக்கொண்டான். வெறும் விவாகரத்து மட்டும் பெற்றால் அவன் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் கெடுத்து விடுவான் என்பதால், தன்னை ஏமாற்றியதற்காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அவள் வாதாடினாள். இதன் மூலம் நஷ்ட ஈடும் கிடைத்தது, விவாகரத்தும் கிடைத்தது, இன்னொரு பெண்ணுடைய வாழ்க்கையும் தப்பித்தது.
தனக்கு நேர்ந்த கொடுமை இன்னொரு பெண்ணுக்கும் நிகழக் கூடாது என்கிற கவிதாவின் எண்ணம் மிக மிக உயர்ந்தது. அனைத்து பெண்களும் இதுபோன்று முற்போக்காக சிந்திக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.