Skip to main content

யுவராஜ் சிக்ஸர்களைக் கண்டு அஞ்சிய சாஹல்...!

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

தன் மீது வைத்த அனைத்து விமர்சனங்களுக்கும் யுவராஜ் சிங் தன்னுடைய பேட்டிங் மூலம் பதில் அளித்துள்ளார். இதுவரை இந்த சீசனில் 2 போட்டிகளில் 76 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 6 சிக்ஸர்கள் அடங்கும். பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 162 என்பது கவனிக்கத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 

 

yuvraj singh

 

 

2017-க்கு பிறகு முதல் ஐ.பி.எல். அரைசதத்தை இந்த சீசனின் முதல் போட்டியில் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். உண்மையில், அவர் அடித்த சில ஷாட்களில் வின்டேஜ் யுவராஜ் சிங் கம்பேக் ஆனதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர். கிளாசிக் ஷாட்ஸ், மாஸ் சிக்ஸ் என பழைய யுவராஜ் சிங் இந்திய அணிக்கு ஆடுவதை போலவே இருந்தது. 2014 ஐ.பி.எல். சீசனில் 14 போட்டிகளில் 376 ரன்களை குவித்திருந்தார். அதற்கு பிறகு சொதப்பிவந்த அவருக்கு இந்த வருடம் திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

 
“நான் ஐ.பி.எல். தொடர்களில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டபோது அந்த ஆண்டுகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டது. இந்த ஆண்டு விளையாடும்போது குறைவான அழுத்தம் மட்டுமே என்மேல் இருக்கிறது. உடற்பயிற்சி, பிட்னஸ், பேட்டிங் ஆகியவற்றில் கடுமையாக பயிற்சி செய்துள்ளேன். என்னுடைய பேட் ஸ்விங் வேகம் கடந்த ஆண்டு பெரியதாக இல்லை என்று உணர்ந்தேன். இந்த வருடம் என் பேட் ஸ்விங் வேகத்தில் அதிகம் பணியாற்றியிருக்கிறேன்” என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

 

Chahal

 

யுவராஜ் ஆட்டத்தை பற்றி ஆர்.சி..பி. பௌலர் சாஹல் தெரிவித்தாவது; என்னுடைய முதல் 3 பந்துகளில் யுவராஜ் சிங் சிக்ஸர்கள் விளாசியவுடன், எனக்கும் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராடின் நிலை ஏற்பட்டு விடுமோ என்று நினைத்தேன். ஆனால் அடுத்த பந்தை துல்லியமாக வீச வேண்டும் என்ற மன உறுதியுடன் வீசினேன் என்று தெரிவித்துள்ளார்.
 

இந்த ஐ.பி.எல். தொடரில் ஸ்பின் பவுலிங்கில் 20 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 53 ரன்கள் குவித்துள்ளார். ஃபாஸ்ட் பவுலிங்கில் 27 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள் உட்பட 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.