4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. உலகக் கோப்பைக்கான போட்டிகள் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் அக்சர் பட்டேல் காயம் காரணமாக அவதிப்பட்டு குணமடைந்து வருகிறார். அதே சமயம் முழுமையாகக் காயத்தில் இருந்து குணமடையாத நிலையில், இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அஸ்வின், தற்போது உலகக் கோப்பை தொடரின் பயிற்சி போட்டியில் பங்கேற்க இந்திய அணியுடன் கவுகாத்தி சென்றுள்ளார். கடந்த 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அஸ்வினுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷூப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்தர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், பும்ரா, மொகமது சிராஜ், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.