உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அளிக்கப்படும் பரிசு விவரங்களைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. உலகக் கோப்பைக்கான போட்டிகள் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
மேலும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 8 ஆம் தேதி முதல் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அளிக்கப்படும் பரிசு விவரங்களைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 33 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ. 16.5 கோடியும், அரையிறுதிகளில் தோற்கும் அணிக்கு தலா ரூ. 6.50 கோடியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.