இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரைப் போலவே, ஒருநாள் தொடரின் முடிவும் கடைசி போட்டியை நம்பியே இருக்கிறது. முதல் போட்டியில் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றிருந்தாலும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் பதிலடி கொஞ்சம் பலமாகவே இந்திய அணியின் மீது விழுந்திருக்கிறது.
நாளை நடக்கவிருக்கும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடவுள்ளன. இந்திய அணியின் பவர்ஃபுல்லான பேட்டிங், பவுலிங் காம்போவில் சில மாற்றங்கள் ஏற்படுத்தினால், நாளைய போட்டி சிறப்பான முடிவைத் தரும் என கிரிக்கெட் விமர்சகர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். அதில் முக்கியமான இரண்டு மாற்றங்கள் இதோ...
கே.எல்.ராகுல் இடத்தில் தினேஷ் கார்த்திக்
இந்தியாவின் பகுதிநேர பவுலர் இடத்தில் சுரேஷ் ரெய்னாவை இறக்கியுள்ளதால், நல்ல ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் பென்ச்சில் இருக்கிறார். அதேசமயம், கே.எல்.ராகுலின் இடம் என்பது இரண்டு போட்டிகளில் சிறப்பாக பயன்படுத்தப்படவில்லை. டி20 போட்டிகளில் 3-ஆம் இடத்தில் களமிறங்கும் கே.எல்.ராகுலுக்கு, ஒருநாள் போட்டிகளில் 4-ஆம் இடம் என்பது கொஞ்சம் சிரமமான ஒன்றாக இருக்கலாம். எனவே, மிடில் ஆர்டரை வலுவாக்க கே.எல்.ராகுலின் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை இறக்கலாம். அதிரடி ஷாட்களும், தேவையான நேரத்தில் சிங்கிள் ரொட்டேஷன்களும் கொடுக்கக்கூடிய அவர், அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார்.
புவனேஷ்வர் அணிக்கு திரும்பவேண்டும்
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி டி20 மற்றும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் புவனேஷ்வர் குமாரை களமிறக்கவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் அசத்தலாக பந்துவீசிய சித்தார்த் கவுல், புவியின் இடத்தை சரியாக நிரப்பவில்லை. எனவே, புவனேஷ்வர் குமார் முழு உடல்த்தகுதியுடன் அணிக்குத் திரும்பவேண்டும். பவர்ப்ளே ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் பந்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, பந்துவீசும் அவரது அனுபத்தைக் கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி ரொம்பவே மிஸ் செய்திருக்கிறது.
இந்த இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்தால் நிச்சயம் இந்திய அணி வெல்லலாம். அதேசமயம், தொடக்க ஆட்டக்காரர்கள் களத்தில் தாக்குப்பிடிப்பதும் அணியின் பலத்தை அதிகரிக்கும்.