இந்தியா-இங்கிலாந்து இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 329 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா சதமடித்து 161 ரன்கள் குவித்தார். ரஹானே, ரிஷப் பந்த் அரைசதமடித்தனர். இதன்பிறகு ஆடிய இங்கிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சை, குறிப்பாக அஸ்வின் பந்துவீச்சில் சிக்கிச் சிதறியது.
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, முதல் இன்னிங்சில் அந்த அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 195 ரன்கள் முன்னிலையோடு களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. இருப்பினும் விராட், அஸ்வின் இணைந்து ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தனர். கோலி பொறுமையாக ஆட, அஸ்வின் அதிரடி காட்டினார். பிறகு, கோலி அரைசதமடித்து ஆட்டமிழக்க, அஸ்வின் அபாரமாக விளையாடி சதமடித்தார். இதனால், அணியின் ஸ்கோர் 286-ஐ எட்டியது.
இதனையடுத்து 482 ரன்கள் எடுத்தால் வெற்றி இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. இப்போட்டியில், இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், மைதானமும் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளதால், இந்தியாவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இந்தநிலையில், இன்றைய ஆட்டநேர முடிவிற்குப் பிறகு பேசிய அஸ்வின், "இரவு முழுவதும் நன்றாகத் தூங்குவேன், அதைமட்டுமே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இது நல்லதொரு நாளாக அமைந்தது. நான் விக்ரம் ரத்தோருடன் (பேட்டிங் பயிற்சியாளர்) பயிற்சி பெறுகிறேன். கடந்த நான்கு, ஐந்து போட்டிகளில் நான் பேட்டிங் செய்த விதத்தில், அவருக்கும் பங்குண்டு. சிராஜோடு பேட்டிங் செய்தபோது த்ரில்லாக இருந்தது. நான் சதமடித்துபோது அவர் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார் என்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. போட்டியைக் காணவந்த பார்வையாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. அவர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர்" எனக் கூறினார்.