ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. அந்த அணிக்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தத் தொடரில் ஃபிட்டான இந்திய அணியைக் களமிறக்கினால் மட்டுமே, அந்நிய மண்ணில் இந்திய அணிக்கு இருக்கும் தோல்வி ரேட்டைக் குறைக்க முடியும்.
சமீபத்திய ஆட்டங்களைப் பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு போதுமான அளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது. ஆனால், முழு பிரச்சனையும் இப்போது பேட்டிங் வசம் திரும்பியிருக்கிறது.
விராட் கோலி தலைமையில் தோல்வியே இல்லாமல் தொடர் வெற்றிகளைக் கண்டுவந்த இந்திய அணி, பேட்டிங் லைன்-அப்பில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. விராட் கோலி தனியாளாக நின்று விளையாடியும் கூட தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை. காரணம், சொற்ப ரன்களில் பேட்ஸ்மென்கள் வெளியேறியதும், பார்ட்னர்ஷிப்பை நிலைநிறுத்தாதும்தான்.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் அசாதாரணமானது என்ற உண்மை இந்திய வீரர்கள் அறிந்ததே. அங்கு சீரான ரன்ரேட், அட்டாக்கிங் லைன்-அப் மற்றும் பார்ட்னர்ஷிப்பை காப்பாற்றாவிட்டால், ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதில் இந்திய அணியை சுருட்டிவிடுவார்கள். இந்த சூழலில், இந்திய அணியின் ஓப்பனிங் ஜோடியாக எந்த இருவரைக் களமிறக்கலாம் என்ற பார்வை இதோ..
ரஹானே - தவான்
இந்திய அணியில் மீள்தன்மையுடைய, எல்லாச் சூழல்களுக்கும் தன்னை தகவமைத்துக் கொண்டு ஆடக்கூடிய வீரர் அஜிங்யா ரஹானே. அதனால், சமீபகாலமாக புதிய பந்தை எதிர்கொள்வதில் நடுக்கம் காட்டும் கே.எல்.ராகுல் இடத்தில் இவரைத் தாராளமாக இருக்கலாம். அதேசமயம், கே.எல்.ராகுலை ஐந்தாவது இடத்தில் இறக்குவதன்மூலம் அணியில் அவரது இருப்பையும் தக்கவைத்துக் கொள்ளலாம். அதேசமயம், அதிரடியாக ஆடும் தவானோடு நிதானமாக ஆடும் ரஹானே நல்ல ஆப்ஷனாக இருக்கும்.
தவான் - பாண்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால அணிக்கான முக்கியமான வீரராக கருதப்படுபவர் ரிஷப் பாண்ட். இவரை தவானோடு ஓப்பனிங் இறக்கலாம் என்ற பார்வை, இதுவரை வலது - இடது காம்பினேஷனில் களமிறங்கும் இந்திய அணிக்கு ஒவ்வாத ஒன்றாக பட்டால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக தவான் - வார்னர் இணை களமிறங்கி 2017-ஆம் தொடரையே வென்று கொடுத்ததை இங்கு பொருத்திக் கொள்ளலாம். தொடக்கத்திலேயே அதிரடி காட்டும் தவானுக்கு, ரிஷாப் பாண்ட் உடனான ரிதம் செட் ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான இரண்டு போட்டிகளிலும் அசத்தியிருந்தாலும், பிரித்வி ஷாவை சோதனை முயற்சியில் களமிறக்க முடியாது என்பதால், அவரை இங்கு நாம் இணைக்கவில்லை.