Skip to main content

தோனியிடம் சென்னை மக்களுக்கு வேண்டியது என்ன? - ஹர்ஷா போக்லே 

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

What do the people of Chennai want from Dhoni? Harsha Bhogle

 

கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ப்ளே ஆஃப் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

 

அதில், “குருவுக்கும் சிஷ்யனுக்குமான போட்டி. ஆர்.சி.பி.க்கு எதிரான போட்டியில் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்து வீசாதது குறித்து சிறிது கவலைப்பட்டேன். ஆனால் அவர் பந்து வீச வேண்டும். ஏனென்றால் அவர் முகம்மது ஷமி உடன் இணைந்து சிறப்பாக பந்து வீசுகிறார். நான் அதை பார்க்க விரும்புகிறேன். சென்னை மைதானம் சூப்பர் கிங்க்ஸ்க்கு சாதகமாக அமையலாம். குஜராத் அணி அந்த சூழ்நிலையை எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் பொறுத்ததே வெற்றி தோல்வி அமையும். குஜராத் அணி 150 முதல் 160 ரன்களைக் கூட கட்டுப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த அணி ஜெயந்த் யாதவை இம்பாக்ட் ப்ளேயராக உபயோகப்படுத்தலாம். 

 

வேகப்பந்து வீச்சாளருக்கு ஏற்ற வகையில் மைதானம் இருந்தால், ஹர்திக் பாண்டியா பந்து வீசலாம். யஷ் தயாளுக்கு பதிலாக ஜெயந்த் யாதவையும் அணியில் சேர்க்கலாம். ஏனென்றால் அவர்கள் அதிகமான வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளார்கள். ஹர்திக் பாண்டியா தலைமையால் அணி நன்றாக உள்ளது என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் “மைதானத்திற்கு வந்து தோனி பேட்டிங் பயிற்சி செய்வதைப் பார்க்கவே மைதானம் பாதிக்கும் மேல் நிரம்பும் வகையில் மக்கள் வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் மாதிரியான சூப்பர் ஹீரோக்களைக் கண்டுகொண்டு கொண்டாடித் தீர்த்த நகரம், தோனியையும் அப்படியொரு சூப்பர் ஹீரோவாகத்தான் பார்க்கிறது.

 

7,8வது இடத்தில் தான் விளையாட வரப்போகிறார். அவர் கிளவுஸ் போடுவதை கேமிரா காட்டினாலே அரங்கம் அதிர்கிறது. மக்கள் அவருக்கு 75 வயது ஆனாலும் அவர் ஒய்வு பெறுவதை விரும்பமாட்டார்கள். அவர் 10 ஆவது இடத்தில் விளையாடினாலும் மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. அவருக்கு 75 ஆனாலும் சிறப்பாகத்தான் கீப்பிங் செய்யப் போகிறார். மக்கள் விரும்புவது, அவர் பேட்டிங் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. கீப்பிங் மற்றும் அணிக்கு தலைமை தாங்கினால் அவர்களுக்கு போதுமானது” என்றார்.