உலகக் கோப்பை லீக் போட்டியின் 43வது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொல்கத்தா மாநிலம், ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான டேவிட் மாலன் 39 பந்துகளில் 31 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 61 பந்துகளில் 59 ரன்களையும் குவித்து தங்களது விக்கெட்களை இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஆடிய ரூட் 72 பந்துகளில் 60 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஏனைய வீர்கள் 30 ரன்களுக்குள்ளாகவே ஸ்கோர் செய்தனர். அதன்படி இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 337 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியில் எந்த வீரரும் சதம் அடிக்காமலே 337 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரை, ஷகீன் அஃப்ரிடி 2 விக்கெட்களையும், மொஹமது வாசீம் 2 விக்கெட்களையும், அஹமது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஹரிஸ் ரவூஃப் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
338 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஆகா சல்மான் மட்டுமே அரை சதத்தை அடித்தார். அணியின் கேப்டன் பாபர் அசாம் 45 பந்துகளில் 38 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மொஹமது ரிஸ்வான் 51 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹரிஸ் ரவூஃப் 23 பந்துகளில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை தொடர்ந்து பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
இங்கிலாந்து அணியில், டேவிட் வில்லி 3 விக்கெட்களையும், அடில் ரஷித், அட்கின்சன் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “ஆட்டத்தை வெளிப்படுத்திய விதத்தில் மிகவும் ஏமாற்றம். நாங்கள் தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியை வென்றிருந்தால் கதை வேறு மாறி இருந்திருக்கும்.
நாங்கள் பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் தவறு செய்துவிட்டோம். 20 முதல் 30 ரன்களை எக்ஸ்டிராஸில் கொடுத்துவிட்டோம். எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை எடுக்கவில்லை. மிடில் ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை எடுக்கவில்லை என்றால் பெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும். நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசி எங்கள் தவறுகள் குறித்து ஆலோசிப்போம்” என்று பேசினார்.