Skip to main content

”அவர்கள் வீணாக வம்பு இழுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்...”- ஆஸ்திரேலிய ஸ்லெட்ஜிங் குறித்து கோலி அதிரடி....

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
v kohli


இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என்று மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி என்றாலே ஸ்லெட்ஜிங்க்கும், சர்ச்சைக்கும் பஞ்சமே இல்லாதது. ஏற்கனவே அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பால் டாம்பரிங் செய்ததற்காக ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு உதவிய துணை கேப்டன் டேவிட் வார்னரும் ஒரு வருடம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் நிலை மிகவும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் இந்த இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாதது, அணிக்கு பலம் குறைந்தும் ஸ்லெட்ஜிங்கிற்கு ஆள் குறைந்தும் உள்ளது.
 

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து கேப்டன் கோலி அளித்த பேட்டியில், ”தற்போது கேப்டனாக இருப்பதால் அணியின் நலன் மற்றும் வெற்றி தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்கம் நேரம் இல்லை. இதனால் கடந்த காலத்தைப் போல எந்தவிதமான மோதலும் உருவாகாது. நாங்கள் எப்போதும் வாங்குவதை திருப்பிக் கொடுப்பவர்களே தவிர பிரச்சனையை தொடங்குபவர்கள் இல்லை. ஆகையால் ஆஸ்திரேலிய வீரர்களுடன் எந்தவிதமான மோதலிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம். ஆனால், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கை விரும்பினால் திருப்பி கொடுப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் வீணாக வம்பு இழுத்தால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 

 


 

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.