13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பின் தொடர் தொடங்கியதால், இது குறித்தான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. அதை நிவர்த்தி செய்யும் விதமாக ஒவ்வொரு போட்டியிலும் அதிரடிக்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லை. நாள்தோறும் புதிய புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல வீரர்கள் புதிய சாதனை படைப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
அந்த வகையில் பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் 7 சிக்ஸர்கள் அடிப்பதன் மூலம் 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் என்ற பட்டியலில் இணைய வாய்ப்பு உருவாகியுள்ளது. 182 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, இதுவரை மொத்தமாக 193 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்னும் 7 சிக்ஸர்கள் மட்டுமே தேவையென்பதால் அடுத்து வரும் சில போட்டிகளிலேயே விராட் கோலி இந்த சாதனையைப் புரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைல்கல்லை விராட் கோலி எட்டும் பட்சத்தில், அவர் இந்த சாதனையைப் புரிந்த நான்காவது இந்திய வீரர் ஆவார். ரோகித் ஷர்மா, ரெய்னா, தோனி ஆகிய மூவரும் முன்னரே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.