தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி நட்சத்திரம் ஏ.பி. டிவில்லியர்ஸ். இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இது உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலககோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்காக மீண்டும் விளையாட விரும்புவதாக தெரிவித்தார். ஆனால், அவரது கோரிக்கை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தால் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், அடுத்து வரவிற்கும் இருபது ஓவர் உலகக்கோப்பையில் ஏ.பி. டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடுவாரா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கிளம்பியது.
ஏ.பி. டிவில்லியர்ஸும், தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாட விருப்பத்தை வெளிப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஸ்மித்தும், ஏ.பி. டிவில்லியர்ஸ் திரும்ப சர்வதேச போட்டியில் விளையாடுவார் என மறைமுகமாக தெரிவித்திருந்தார். இந்தநிலையில் ஏ.பி. டிவில்லியர்ஸ் மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடமாட்டார் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், ஏ.பி. டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவே இறுதியானது என கூறிவிட்டதாகவும், இதனால் அவர் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்ப வாய்ப்பில்லை எனவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
டிவில்லியர்ஸ் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.