நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, அடுத்து இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கிடையே இங்கிலாந்து தொடருக்கு நீண்ட நாட்கள் இருப்பதால் இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்திய வீரர்கள் இங்கிலாந்தை சுற்றிப்பார்ப்பது, டென்னிஸ் போட்டிகளை நேரில் சென்று பார்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்களுக்கு கரோனா பரிசோதனையையும் நடத்தப்பட்டுவந்தது. இதில் இரண்டு வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் ஒருவர் கரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாகவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு வீரர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், கரோனா பாதிப்பால் தனிமையில் உள்ள வீரர் ரிஷப் பந்த் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு கரோனா அறிகுறி எதுவுமில்லை எனவும், 8 நாட்களாக அவர் தனிமையில் இருந்துவருவதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன. மேலும் இன்று (15.07.2021) இந்திய அணி வீரர்கள், டர்ஹாமில் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் (BIO-BUBBLE) செல்லவுள்ளதாகவும், அதில் தற்போது ரிஷப் பந்த் இணையமாட்டார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.