இந்தியாவில் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, உயரிய விருதான கேல் ரத்னா விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கேல் ரத்னா விருதுக்கான பெயர்ப் பரிந்துரைகள் விவாதங்கள் நடந்து வந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோர் இந்த விருதினைப் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை அர்ஜூனா மற்றும் கேல் ரத்னா விருதுக்குழு உறுதி செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களில் மூன்றாவது வீரராக விராட் கோலி இந்த விருதைப் பெறுகிறார். இதற்கு முன்னர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விராட் கோலி அபாரமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டு நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், பளுதூக்கும் விளையாட்டில் 48 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டார் சாய்கோம் மீராபாய் சானு. அந்தப் போட்டியில் அவர் தங்கம் வென்று பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இதற்கு முன்னர் கர்னம் மல்லேஸ்வரி மற்றும் நமீரக்பாம் குஞ்சராணி ஆகிய பளுதூக்கும் வீராங்கனைகளே இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர்.